சீனா, நவ. 26- சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் நேற்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட்டது.
சென்சோ-22 விண் கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் செலுத் தப்பட்டது. சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து நேற்று செலுத்தப்பட்டதாக சீன அரசு ஊடகமான சிஜிடிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில், சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர் குழு, சீனாவின் தியான்கொங் விண்வெளி நிலையத்தை அடைந்தது.
சுமார் 200 நாட்களுக்கு மேல் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து சாதனை படைப்பது இவர்களின் நோக்கமாக இருந்தது.
சீன தாய்கோனாட்டுகள் (சீனா தனது விண்வெளி வீரர்களை ‘தாய்கோனாட்’ என அழைக்கிறது) நீண்ட காலம் விண்வெளியில் தங்கிய சாதனையைப் படைப்பார்கள் என எதிர் பார்க்கப்பட்டது.
மேலும், தனது மூன்று விண்வெளிப் பயணங்களில் மொத்தமாக 400 நாட்கள் விண்வெளியில் கழிக்கும் சாதனையை குழுத் தலைவர் சென் தோங் படைப்பார் எனவும் எதிர்பார்க்கப் பட்டது.
இந்தச் சாதனைகளை நிறைவேற்றிய பின், நவம்பர் 5-ஆம் தேதி புகழுடன் வீடு திரும்புவதே இவர்கள் திட்டம்.
ஆனால், ஒரு சிறிய விண்வெளிக் குப்பை திடீர் என்று வந்து, பிரச்சனையாய் மாறி விட்டது.
விண்வெளிக் குப்பை மோதலால், மூவரும் பூமி திரும்பப் பயணிக்க வேண்டியிருந்த சென்சோ-20 விண்கலம் பழுதடைந்தது. எனவே, அதில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எப்படி பூமிக்குத் திரும்புவார்கள் என்பதே கேள்விக்குள்ளானது.
