டாக்கா, நவ. 25- வங்கதேச மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, அப்போது பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த நவ.17-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தியாவில் ஹசீனா தஞ்சமடைந்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வங்கதேச இடைக்கால அரசு அதிகாரபூர்வ ராஜீய கடிதத்தை அனுப்பியுள்ளது.
கடந்த நவ.21-ஆம் தேதி டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மூலம், ஒன்றிய அரசுக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகர் முகமது தெளஹித் ஹுசைன் கூறினார் என்று அந்நாட்டு அரசு செய்தி முகமை தெரிவித்தது.
ஏற்கெனவே ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசுக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம் அனுப்பியிருந்தது. அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதை ஒன்றிய அரசு உறுதி செய்தபோதிலும், அதுகுறித்து கூடுதல் விவரங்களை தெரிவிக்கவில்லை.
