மும்பை, நவ. 25- உங்களிடம் வாக்கு, என்னிடம் பணம் என மகாராட்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராட்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் பிரச்சாரத்துக்காக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான அஜித் பவார் பாராமதி பகுதியில் மாலேகான் நகருக்கு சென்றார்.
அப்போது மக்களிடம் பேசிய அவர், ‘‘தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 18 வேட்பாளர்களையும் நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான நிதியில் குறைவு ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்வேன்.
நான் கூறிய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவேன். நீங்கள் எங்கள் வேட்பாளர்களை தோற்கடித்தால், நான் நிதியை குறைப்பேன். உங்களிடம் வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது. என்னிடம் நிதி வழங்கும் அதிகாரம் உள்ளது. என்ன செய்ய வேண்டும் என நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.
இவரது பேச்சை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மக்களை அச்சுறுத்தும் வகையில் அஜித் பவார் பேசியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, வாக்குக்கு பணம் கொடுப்பேன் என வெளிப்படையாகக் கூறுவதா என கேள்வி எழுப்பி உள்ளார்.
