பாட்னா, நவ. 25- பீகாரில் வாக்காளர் பட்டியலில் நாய், பூனை போன்ற விலங்குகளின் படங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
நாயின் ஒளிப்படம்
பீகாரில் வாக்காளர் பட்டியலில் பூனைகள், நாய்களின் ஒளிப்படங்கள் இருந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது நாடு முழுவதும் விவாதப்பொருளானது. கேலி, கிண்டல் மற்றும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
பீகாரை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த 17ஆம் தேதி திருத்தப் பணிகளை தொடங்கிய அசாம் தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் வழங்கிய அறிவுறுத்தல்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெள்ளை படங்கள், மனிதர் அல்லாத படங்கள், குறிப்பிட்ட வர்களின் உருவம் இல்லாமல் இருப்பது, அல்லது படம் இல்லாத விவரங்கள் போன்ற உள்ளீடுகள் ஆராய்ந்து மென்பொருள் அடிப்படையிலான அறிக்கைகள் உருவாக்கப்படவேண்டும். அதுபோன்ற படங்களை கண்டறிந்து மாற்றுவதற்கு வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் கள ரீதியாக சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
படிவம் 8
அப்படி ஏதேனும் இருந்தால் வாக்காளர்களிடம் இருந்து படிவம்-8 விண்ணப்பம் மற்றும் விவரக் குறிப்புகள், ஒளிப்படத்துடன் சேகரிக்கப்பட வேண்டும். மேலும் அவற்றை சரியாக மாற்றி அமைத்து, அவற்றின் முந்தைய பிந்தைய மாற்றுப்பதிவுகள் சரியாக பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விசயத்தில் தேவைப்பட்டால் நிலை அலுவலர்கள், வாக்காளரை ஒளிப்படம் எடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் உள்ள முரண் பாடுகள் மற்றும் நகல் பதிவுகள் அல்லது பல உள்ளீடுகளை நீக்குவது உள்ளிட்ட அனைத்து தர்க்கரீதியான பிழைகள் வரைவு பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு நீக்கப்பட வேண்டும், முகவரிகள் தரப்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஒளிப்படங்களின் தரத்தை சரிபார்க்க வேண்டும்.
கற்பனை எண்கள்
முகவரியை சரிப்படுத்தும்போது, சில இடங்களில் கற்பனையான வீட்டு எண்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. கற்பனையான வீட்டு எண் ஒதுக்குவதன் நோக்கம், வாக்குச் சாவடிகளை பகுப்பாய்வு செய்யும் போது ஒரு வீட்டின் வாக்காளர்களை ஒரே வாக்குச் சாவடியில் வைத்திருப்பதற்காக மட் டுமே. கற்பனையான வீட்டு எண்ணை ஒதுக்கும்போது வீட்டை தெளிவாக அடையாளம் காணும் வகையில், அருகிலுள்ள அடையாளத்தையும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
