திருச்சி, நவ. 21 பெல் ம.ஆறுமுகம் அவர்கள் பிரிட்டிஷார் வருகைக்கு முன் யாரெல்லாம் படிச்சிருந்தாங்க என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூலின் வெளியீட்டு விழா நவ. 16 அன்று மாலை 6 மணிக்கு திருச்சி பிஎச்இஎல் தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திராவிடர் தொழிலா ளரணி மாநில செயலாளர் மு.சேகர் தலைமை ஏற்றார். பெல் திதொக பொறுப்பாளர் ஆண்டிராஜ் வர வேற்புரை ஆற்றினார். கழகப் பேச்சா ளர் தே.நர்மதா நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். அவரது உரையில் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தலைவர்கள் எல்லாம் எவ்வாறு பாடுபட்டார்கள் என்பதையும் நீதிக்கட்சி காலத்திலிருந்து இன்றைய திராவிட மாடல் ஆட்சி வரை எவ்வாறெல்லாம் கல்விக்கான சாத னைகள் நிகழ்த்தப்பட்டது என்பதை யும் தந்தை பெரியார் அவர்களது உழைப்பினையும் விரிவாக எடுத்து ரைத்தார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு முதல் நூலினை வெளியிட திருவெறும்பூர் ஒன்றிய கழகத் தலைவர் இரா.தமிழ்ச்சுடர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து வா.நேரு தனது உரையில்,
நூலின் சிறப்புகளையும் ஆறு முகம் முகநூலிலும் புலனத்திலும் ஆர்எஸ்எஸ் சங்கிகளுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பெல் தொழிலா ளர் முன்னேற்ற சங்கப் பொதுச் செயலாளர் கி.தீபன், பெருவளப்பூர் வெ.சித்தார்த்தன், கல்பாக்கம் அ.இராமச்சந்திரன் மருத்துவர் கனிமொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியார் பிஞ்சு முத்தமிழ் பெரியார் பொன்மொழிகளையும் கல்வி தொடர்பான திருக்குறள்களையும் கூறினார். பொறியாளர். மா.ஆ.மதுமதி நன்றி உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் தென்மொழிப்பண்ணன் குழந்கை ஈகவரசன் பெரியார் குறித்து பாவல ரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய பாடலைப் பாடினார். புள்ளம்பாடி புரட்சிப்பாடகர் பொற்செழியன் ஜாதி ஒழிப்பு வீரர்களைப்பற்றியும் இலால்குடியில் நடைபெற உள்ள ஜாதி ஒழிப்பு மாநாடு பற்றியும் பாடல் இயற்றி இசையோடு பாடினார் தோழர் ஆண்டிராஜ் திரையிசை மெட்டில் மூடநம்பிக்கைக்கு எதிராக ஒரு பாடலைப்பாடினார். நூறு புத்தகங்க ளுக்கு மேல் தோழர்கள் வாங்கிச் சென்றனர்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழக தொழில்நுட்பப்பிரிவு ஒருங்கி ணைப்பாளர் வி.சி.வில்வம், திரு வெறும்பூர் ஒன்றியச் செயலாளர் சங்கிலிமுத்து, பொதுக்குழு உறுப்பி னர் கனகராஜ், காட்டூர் கிளைகழகத் தலைவர் காமராஜ், திருவெறும்பூர் நகர செயலாளர் அ.சிவானந்தன், மாணவர் நகலக இராமச்சந்திரன் என்கிற மின்னல், மகளிர் பாசறை மாவட்டத்தலைவர் ரூபியா, மகளிர ணித் தோழர்கள் சித்ரா, புனிதவதி, இலால்குடி ஒன்றிச் செயலாளர் சி.பிச்சைமணி, இலால்குடி மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் பூங்கோதை, மண்ணச்சநல்லூர் முத்துசாமி, பாலச்சந்திரன் பெல் திராவிடர் தொழிலாளர் கழகச் செயலாளர் அசோக்குமார், திதொக பொறுப்பாளர் சுதர்சன், மற்றும் பெல் தோழர்கள் திலிப்குமார், சந்திரன், மோகன்தாஸ் உள்ளிட்ட தோழர்களும் பெல் ஊழியர்களும் ஏராளமாகக் கலந்துகொண்டார்கள்.
இந்நூல்: தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்துக்கு எதிராக வும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் பேசியும் செயல்பட்டும் வருகிறார். ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தங்களை தமிழ்நாட்டில் விதைப்பதற்கு படாத பாடுபடுகிறார். கல்லூரிகளில் பல்க லைக்கழகங்களில் அவர் சென்று உரையாற்றுகின்ற பொழுதெல்லாம் நம் நாட்டில் கல்வி என்பது பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு சிறப்பாக இருந்ததாகவும் பிரிட்டிஷ்காரர்கள் வந்துதான் கல்வியின் தரத்தைக் கெடுத்து விட்டார்கள் எனவும் பேசி வருகிறார்.
அந்தக் காலத்தில் குருகுலக்கல்வி சிறப்பாக இருந்ததாகவும், பிரிட்டிஷார் வந்துதான் அவற்றைக் கெடுத்து விட்டார்கள் என்றும் தொடர்ச்சியாகப் பேசி வந்தார். அதனையே ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் வழிமொழிந்தார்கள். அந்தக் காலத்தில் எல்லா ஜாதிக்காரர்களும் படித்தார்கள். பட்டியல் ஜாதியினர் பெண்கள் என அனைவருமே படித்தார்கள் என்று புளுகி வந்தார்கள். அவர்கள்தான் தற்போது உள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை ஆதரித்து நீங்கள் உங்கள் குலத்தொழிலைச் செய்யுங்கள் என்றும் சொல்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் ஜோதிபா புலே, அய்யன்காளி, அயோத்திதாசப்பண்டிதர், ரெட்டமலை சீனிவாசன், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரது வரலாற்றிலிருந்து அந்தக் காலக்கல்விச் சூழல் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டது என்பதையும் நீதிக்கட்சி ஆட்சியில்தான் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கல்வி நீரோடை பெருக்கெடுத்து ஓடியது என்பதையும் அதனைப் பொறுக்காமல் இராஜகோபாலாச்சாரி இரண்டு முறை ஆட்சிக்கு வந்து 6,000 பள்ளிகளுக்கு மேல் மூடிய வரலாற்றையும் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உ உரிமையைப் பறித்ததையும் தந்தை பெரியார் போராடி குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்காமல் இருந்திருந்தால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கல்வி என்பதே இல்லாமல் போயிருக்கும் என்பதையும் ஆதாரங்களோடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
