லக்னோ, நவ.19- மாட்டிறைச்சி வைத்திருந்ததாகச் சொல்லி முகமது அக்லாக் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரு கிறது. இதற்கிடையே இவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநி லத்தில் மிக மோசமான ஒரு நிகழ்வு நடந்தது. 60 வயதான முதியவர் மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி அடித்துக் கொல்லப்பட்டார்.
அடித்து கொலை
2015 செப்டம்பர் 28 ஆம் தேதி உத்தரப் பிரதே சத்தின் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தின் பிசாடா கிராமத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்தது. அக்லாக் என்பவர் ஒரு பசுவைக் கொன்று தனது வீட்டில் இறைச்சியை வைத்திருந்ததாக வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து ஒரு கும்பல் அக்லாக் வீட்டிற்குச் சென்று பிரச்சினை செய்துள்ளது. அக்லாக் மற்றும் அவரது மகன் டேனிஷ் ஆகியோரை அவர்களது வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்று கொடூர மாகத் தாக்கியுள்ளது.
பா.ஜ.க. தலைவர்கள்
இதில் அக்லாக் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் டேனுஷும் படுகாயமடைந்தார். மிக மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் உள்ளூர் பாஜக தலைவர் சஞ்சய் ரானாவின் மகன் விஷால் ராணா மற்றும் அவரது உறவினர் சிவம் ஆகியோர் அந்தக் கும்பலைத் தூண்டியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல அக்லாக் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட இறைச்சி மதுராவில் உள்ள ஒரு தடய யல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அது பசு அல்லது தொடர்புடைய விலங்கின் இறைச்சி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும், இதை மறுத்த அக்லாக் குடும்பத்தினர் அதிகாரிகள் இறைச்சி மாதிரிகளை மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இது ஒரு பக்கம் இருக்கக் கொலை வழக்கு கவுதம் புத்தா நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் தற்போது பிணையில் உள்ளனர். இதற்கிடையே அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய யோகி அரசு ஒப்புதல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது முதலில் கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை அரசு ரத்து செய்யுமாறு பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரையைக் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி யோகி அரசு ஏற்றுள்ளது. அதன் அடிப்படையில், கூடுதல் மாவட்ட அரசு வழக்குரைஞர் பாக் சிங் பாடி கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இருப்பினும் நீதிமன்றம் இதுவரை எந்த உத்தர வும் பிறப்பிக்கவில்லை. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரு கிறது. இது தொடர்பாக வழக்குரைஞர் பாக் சிங் பாடி கூறுகையில், ‘‘வழக்கை ரத்து செய்வதா இல்லையா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அதுவரை விசாரணை தொடரும். ஏற்கெனவே சாட்சியங்களை விசாரிக்கும் நடை முறை தொடங்கிவிட்டது’’ என்றார். மேலும், மாநில அரசிடம் இருந்து அறிவுறுத்தல்கள் பெற்ற பின்னரே வழக்கை ரத்து செய்வதற்கான கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம் யோகி அரசின் இந்த முடிவு அங்குப் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. யோகி அரசு குற்றவாளிகளைக் காப்பாற்றுவதை நிறுத்த வேண்டும் என அங்குள்ள எதிர்க்கட்சியினர் சாடி வருகிறார்கள். அதேநேரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை யோகி அரசு திரும்பப் பெறுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
