கொல்கத்தா, நவ.18- மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் அண்மையில் ஆதரித்து பேசியிருந்தார்.
இது முறைகேடுகளை நீக்கி, தேர்தல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பீகார் தேர்தல்கள் எஸ்.அய்.ஆர்-க்கு பரந்த அளவிலான மக்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆனந்தா போஸை விமர்சித்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண், “முதலில், ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் குற்றவாளிகளை அங்கேயே வைத்திருக்கிறார்.
அவர்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வழங்குகிறார். திரிணாமுல் தொண்டர்களை தாக்கச் சொல்கிறார். முதலில் இதை அவர் நிறுத்தட்டும். உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை” என்று கூறினார்.
“ராஜ்பவனில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் மாநில காவல்துறை மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறாரா? கல்யாண், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு ராஜ்பவன் திறந்திருக்கும். அனைவரும் வந்து பார்க்க வரவேற்கப்படுகிறார்கள்” என்று ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்தார்.
கிராம நிர்வாக அலுவலர் சங்கம்
முதலமைச்சருக்கு நன்றி!
சென்னை, நவ. 18- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.அருள்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான ராபி சிறப்புப் பருவத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நெற்பயிர் உள்ளிட்ட 11 பயிர்களுக்குக் காப்பீடு செய்ய காலக்கெடுவை நவம்பர் 30 வரை நீட்டிக்கக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு அதை பரிசீலித்த முதலமைச்சர், சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 30 வரை கால நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
