அக்லாக் படுகொலை வழக்கை சிறப்புச் சட்டத்தின் மூலம் திரும்பப் பெற உத்தரப்பிரதேச அரசு முடிவு!
தாத்ரி, நவ.17 உத்தரப் பிரதேசம் தாத்ரி பகுதியில் 2015 ஆம் ஆண்டு மாட்டிறைச்சி வைத்தி ருந்ததாகக் கூறி 40க்கும் மேற்பட்ட கும்பல் அக்லாக் என்ற 60 வயது முதியவரை கொடூரமான படுகொலை செய்தது
தற்போது உத்தரப் பிரதேச அரசு முகமது அக்லாக் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும்—கொலை உட்பட—சிறப்பு சட்டத்தின் கீழ் திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது.
கவுதம புத்தர் மாவட்ட நீதிமன்றத்தில் அக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, ஆகஸ்ட் 26 அன்று அரசின் உத்தரவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இந்த முடிவு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அதிர்ச்சி மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி அருகே உள்ள பிசாஹ்டா கிராமத்தில் வசித்த 60 வயதான முகமது அக்லாக், 2015 செப்டம்பர் 28 அன்று இரவு, வீட்டில் மாட்டிறைச்சி சேமித்திருந்ததாக ஊர்க் கோயிலின் ஒலிபெருக்கி மூலம் அறி விக்கப்பட்டதைத் தொடர்ந்து, 30 பேர் கொண்ட கும்பலால் இழுத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.
அவரது மகன் தானிஷ் (வயது 22), கடுமையான காயங்களுடன் நோய்டாவில் சிகிச்சை பெற்றார். இந்தச் சம்பவம், இந்தியாவின் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் விவாதங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியது— சகிப்புத்தன்மை, சமூக ஒற்றுமை மற்றும் சிறுபான்மை உரிமைகள் குறித்து தேசிய அளவிலான விவாதத்தைத் தூண்டியது.
காவல்துறை, கொலை (அய்.பி.சி. 302), கொலை முயற்சி (307), கூட்டு அமர்வு (149), கொள்ளை (147, 148) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 10 பேரை (அடையாளம் தெரியாத 4-5 பேரு டன்) கைது செய்தது. குற்றவாளிகளில் சிலர் உள்ளூர் பி.ஜே.பி. தலைவரின் மகன் விஷால் ராணா உள்ளிட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். வழக்கு சுரஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
உத்தரப் பிரதேச அரசு, CrPC பிரிவு 321 இன் கீழ் (பொது நலனுக்காக வழக்கைத் திரும்பப் பெறுதல்) அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதற்கான மனுவை அக்டோபர் 15 அன்று தாக்கல் செய்தது. இதற்கு ஆளுநரின் எழுத்து அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த முடிவு குடும்பத்தினரை ‘‘ஆழ்ந்த அதிர்ச்சிக்கு’’ உள்ளாக்கியுள்ளது.
குற்றவாளிகள் ஏற்கெனவே பிணையில் உள்ளனர், அவர்களுக்குத் தேசிய அனல் மின் நிலையத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு இதற்கு இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளி யிடவில்லை; முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் அலுவலகமும் கருத்துத் தெரிவிக்கவில்லை.
பீகார் வெற்றியின் ‘துணிச்சல் வன்முறைக்கு ஊக்கமா?
இந்த முடிவு, பாஜக ஆளும் அரசுகளின் அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பீகார், மகாராட்டிரா, அரியானா, ஒரிசா, டில்லி போன்ற மாநிலங்களில் இசுலாமியர்களை தேர்தலில் நிற்கவைக்காமல் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற பாஜக இப்போது ‘ஹிந்துத்துவ’ அமைப்புகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிப்பதன் மூலம் வன்முறைக்கு ஊக்கம் தருவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ‘‘பீகார் தேர்தல் வெற்றி அளித்த துணிச்சலால், அக்லாக் போன்ற படுகொலைகளைச் செய்தவர்களை நிரந்தரமாக விடுவித்து, மேலும் வன்முறைகளுக்கு அனுமதி அளிக்கிறதா பி.ஜே.பி.?’’ என்ற கேள்விகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே எழுந்துள்ளன.
அக்லாக்கின் மனைவி இக்ரமான் தாக்கல் செய்த மனுவில் குற்றவாளிகளின் அடை யாளங்களைத் தெளிவுபடுத்தியது என்றாலும், வழக்கின் விசாரணை தாமதம் மற்றும் அரசி யல் தலையீடுகள், குற்றவாளிகளுக்கு ஆதரவு அரசியல் கூட்டங்கள்—நீதியைத் தடுத்த தாகக் கருதப்படுகிறது. இந்த முடிவு, சிறு பான்மையினரின் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன.
அக்லாக்கின் குடும்பம், ‘‘நீதி இன்று இறந்து விட்டது’’ என்று வருத்தம் தெரிவித்துள்ளது. தானிஷ், தற்போது மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கியிருந்தாலும், இந்த முடிவு அவர்களின் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது நாடு முழுவதும் இது புதிய விவாதங்களைத் தூண்டும் என்பது தெளிவு.
