சென்னை, நவ.9 தமிழ்நாட்டில் வரும் நவ.12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாடு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நவம்பர் 9,10 அன்று தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், நவம்பர் 11, 12, 13 தேதிகளில் ஒருசில இடங்களிலும், நவம்பர் 14-ஆம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (9.11.2025) திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 12-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களிலும், 13-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
