மஞ்சேரி, நவ.9– தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் மஞ்சேரியலை சேர்ந்தவர் சிறீகாந்த். அய்டி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா (வயது 25). தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.
மனிஷாவுக்கு சிறு வயது முதலே எறும்பை கண்டு பயப்படும் மிர்மிகோ போபியா என்ற வியாதி உள்ளது. இந்த வியாதி உள்ளவர்கள் எறும்புகளை கண்டால் பயந்து அலறி நடுங்குவார்கள். மனிஷா இந்த வியாதிக்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
7.11.2025 அன்று காலை சிறீகாந்த் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார். பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார். எறும்புகளை கண்டு பயந்து போன மனிஷா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்தார். அதில் அய் எம் சாரி சிறீ. என்னை மன்னித்துவிடு. குழந்தையை நன்றாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன். மாமியாருக்கு சாப்பாடு போட மறந்து விடாதே என எழுதினார்.
பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மனிஷாவின் பிணத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எறும்புகளுக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
