புதுடில்லி, நவ.9– டில்லியில் தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக தாமாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் டில்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அண்மையில் நடந்த விசாரணையில் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்நிலையில் தெருநாய்கள் பிரச்சினை தொடர்பான வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும். அங்கு தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும்.
பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
