தமிழ்நாட்டின் வரவேற்கத்தக்க கல்வித் திட்டம்

3 Min Read

கல்வியைப் பொறுத்தவரையில், இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் கல்விச் சீர்திருத்தம் கவனம் பெறுகிறது.

ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டில் மாநிலத்துக்கென தனியாக வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025’இன் அடிப்படையில், பள்ளிகளுக்குப் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இரண்டு முக்கியக் குழுக்களை நியமித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன் 5.11.2025 அன்று வெளியிட்ட அரசாணையின்படி,

  1. கலைத்திட்ட வடிவமைப்புக் குழு
  2. கலைத்திட்ட உயர்நிலைக் குழு என இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

முதலாவதான கலைத் திட்ட வடிவமைப்புக் குழுவுக்கு மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமை வகிப்பார். இது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைத்துத் தரப் பினரின் கருத்துகளையும் பெற்று, தற்போதுள்ள பாடத் திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, புதிய கலைத்திட்ட வடிவமைப்புக்கான பரிந்துரைகளை உயர்நிலைக் குழுவிடம் சமர்ப்பிக்கும்.

இரண்டாவதான கலைத் திட்ட உயர்நிலைக் குழுவுக்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமை வகிப்பார். இஸ்ரோ தலைவர் வ. நாராயணன்,  கணிதவியல் வல்லுநர் இரா. இராமானுஜம் உள்ளிட்ட 16 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இது, மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை இறுதி செய்யும்.

தேசிய அளவில் கல்வித் தரக் குறியீடுகள் மற்றும் கற்றல் விளைவுகளில் (Learning Outcomes) தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. கல்வி கற்போரின் சதவீதம் (Literacy Rate), பள்ளியில் சேருவோர் விகிதம் (Enrolment Ratio) ஆகியவற்றில், பல  மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு வலுவான நிலையில் உள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை மூலம் புதுமையான கொள்கை வகுப்பதில் முன்னோடியாக உள்ளது. கேரளா, ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டின் தனித்த முயற்சியும் வேகமும் குறிப்பிடத்தக்கது.

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் (2026–2027) புதிய பாடத்திட்டம் அமலாகிறது.

ஒன்றிய அரசின் ‘தேசிய கல்விக் கொள்கை’யைப் (NEP) பின்பற்றும் மாநிலங்களில், பாடத்திட்ட மாற்றங்கள் மெதுவாகவோ அல்லது ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படியோ நடக்கின்றன.  அவர்களால் சுதந்திரமாக தங்களின் மாநில கலாச்சாரத்தை பள்ளிப்பாடங்களில் கற்றுக் கொடுக்க முடியாது. ஒன்றிய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் அம்மாநிலங்கள் செய்யவேண்டும்

சமீபத்திய தேசியக் கல்வி அளவீடுகளில் தமிழ்நாடு மாணவர்களின் கல்வித்திறம் தேசிய சராசரியைவிடப் பல துறைகளில் சிறப்பாக உள்ளது. கேரளா போன்ற சில தென் மாநிலங்களுடன் போட்டிப் போடும் நிலையில், வட மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் கற்றல் தரம் உயர்வாக உள்ளது.

இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆளுமைகள் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இது, கல்வியாளர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு துறைசார் நிபுணர்களின் அனுபவமும் கல்வி சீர்திருத்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் இந்த முயற்சி, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நோக்கங்களுக்கும், கற்றல் அடைவுக்குமான இடைவெளியைக் குறைத்து, தரமான கல்வியை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பண்பாடு மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ற கல்வியை வழங்குவதன் மூலம், பிற மாநிலங்களிடமிருந்து வேறுபட்டு, இந்தியக் கல்விப் பரப்பில் தமிழ்நாடு தனக்கான வலுவான இடத்தை மேலும் உறுதிப்படுத்தும் என்று கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

‘தேசியக் கல்வி’ என்ற பெயரால் மும்மொழித் திட்டம், இதிகாச புராணக் குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக மாணவர்களின் மூளையைப் பாழ்படுத்தும் போக்கிற்கு முற்றிலும் மாறான முற்போக்குக் கல்வித் திட்டமே மாநில அரசின் இந்தக் கல்வித் திட்டமாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *