இந்தியாவின் ‘புனிதம்’ மற்றும் ஆன்மிகத்தின் அடையாளமாகக் கூறப்படுகின்ற கங்கை நதிக்கரை, சமூக சமத்து வமின்மை மற்றும் அதிகாரத்தின் கோர முகங்களை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தும் களமாக இன்று மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த இருவேறு சம்பவங்கள், ஒரு சாராருக்குச் சலுகை அளிக்கும் ‘‘பார்ப்பனருக்கான நீதி’’யையும், அதே வேளையில் மற்றொருசாரார் மீது கடுமையான ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் ‘‘தாழ்த்தப்பட்டோருக்கான நீதி’’யையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
ஹரித்துவாரில் வனச்சட்டமும் – அதிகார வர்க்கத்தின் கண்ணாமூச்சியும்
ஹரித்துவாரில் உள்ள வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்தில், ஒரு பார்ப்பனர், விலை மாதர்களுடன் மது அருந்தி, கங்கை நதியை அசிங்கப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியில் மது அருந்துதல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அசைவ உணவுகளை வைத்திருத்தல் ஆகியவை வனச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்கள்.
செல்லமான கண்டிப்பு!
ஆனால், வனத்துறை என்ன செய்தது? வனச் சட்டங்களை மீறிய அந்த நபரைக் ‘‘கண்டித்து விட்டு’’ அனுப்பி வைத்தது. அவர் பார்ப்பனர் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, சட்டத்தின் பிடியில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டதா? அவர் சென்ற பிறகுதான் ஊழியர்கள் அசிங்கங்களை அகற்ற வேண்டியிருந்தது. ஒரு சாதாரண குடிமகன் இந்தச் சட்ட மீறல்களைச் செய்திருந்தால், உடனடியாகக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்குமா அல்லது ‘கண்டித்து விடுவது’டன் கடமை முடிந்திருக்குமா?
கான்பூரில் கர்மகாண்டமும் –
ஜாதியத் தீண்டாமையின் கோரமும்
இதற்கு நேர்மாறாக, 2023 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம், கான்பூரில் கங்கை நதியில் குளித்துக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ‘‘தங்கள் கர்மகாண்டம் (பூஜை/திதி) செய்யும்போது குளித்து கங்கையைத் தீட்டாக்கி விட்டாள்’’ என்ற அபத்தமான குற்றச்சாட்டுக்கு உள்ளா னார்.
அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, அங்குள்ள இளைஞர்கள் மூலம் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த வன்முறை, சமூக வலைதளங்களில் பரவி பெரும் கண்டனத்திற்குள்ளானது. ஆனால், காவல்துறை உடனடியாக இதை ஜாதியப் பாகுபாடு சம்பந்தப்பட்ட தாக்குதல் என்று அறிவிக்காமல், ‘‘குளிப்பது தொடர்பான விவாதத்தின் போது சில தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த தாக்குதல்’’ என்று பூசி மெழுகியது. ‘புனித’ நதியில் குளிக்கும் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதுடன், ஜாதிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு, பின்னர் அதை வெறும் ‘‘தனிப்பட்ட சண்டை’’ என்று திசை திருப்புவது என்பது, அரசின் இயந்திரங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எவ்வாறு நீதி மறுக்கின்றன என்பதற்கான அப்பட்டமான சான்று.
பார்ப்பனர் ஒருவர் தடை செய்யப்பட்ட இடத்தில் மது அருந்தி, வனச்சட்டத்தை மீறி, நதியை அசிங்கப்ப டுத்தியபோது, அவர் ‘கண்டித்து’ விடுவிக்கப்படுகிறார். மற்றொருவர், ‘புனித’ நதியில் குளித்ததற்காக, ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்டு, அவரது நீதிக்கான கதவுகள் அடைக்கப்படுகின்றன. இந்தியாவில், சட்டம் மற்றும் நீதி என்பவை சமூகப் படிநிலையின் உச்சியில் இருப்பவர்களுக்கு ஒரு சலுகையாகவும், அடிநிலையில் இருப்பவர்களுக்கு ஒரு தண்டனையாகவும் மாறி விட்டனவா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நமது அரசியலமைப்புச் சட்டம், உண்மையில் சிலருக்கு மட்டுமே சாதகமாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது நியாயமா? என்ற கேள்வி பல தரப்பினராலும் எழுப்பப்பட்டுள்ளது.
