புதுடில்லி, நவ.6- அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன்- ரஷ்யா இடையே ஆண்டுக்கணக்கில் நீடித்து வரும் போரை நிறுத்த அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இருப்பினும் இதற்கு நேர்மாறாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அதன் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைவிதித்து வருகின்றன.
குறிப்பாக ரஷ்ய பொருளாதாரத் தின் முக்கிய காரணியாக இருக்கும் கச்சா எண்ணெய் வணி கத்தை முடக்க அதன் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட், லூகாயில் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலமாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு மறைமுகமாக நிதி வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டன.
பொருளாதாரத் தடை
குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து ஒருநாளைக்கு 15 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்தன. ரஷ்யா-உக்ரைன் பிரச்சினையை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை மேற்கத்திய நாடுகள் நிறுத்தின. ஆனால் ரஷ்யாவின் அதீத தள்ளுபடியை பயன்படுத்திய இந்தியா அதிக இறக்குமதியில் ஈடுபட்டன.
இது அமெரிக்க அதிபர் டிரம்ப் புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா மீது 50 சதவீதம் வரிவிதித்தார். இதனை தொடர்ந்து ரஜ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக இந்திய பிரதமர் மோடி கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்.
முழுக்கு
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் தனியார் எண்ணெய் நிறுவனமான ரிலையன்சின் நயாரா மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், மங்களூர் சுத்திகரிப்பு, ஹெச்.பி.சி.எல்-மிட்டல் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்து வருகின்றன.
குறிப்பாக ரிலையன்ஸ் தனது கவனத்தை மத்திய கிழக்கு நாடுகள் மேல் செலுத்த தொடங்கி விட்டது. ஈராக்கிடம் இருந்து 31 சதவீதமும், சவுதியிடம் இருந்து 87 சதவீதமும் கச்சா எண்ணெய்யை ரிலையன்சின் நயாரா நிறுவனம் கடந்த மாதத்தில் கொள்முதல் செய்தது. அமெரிக்காவிடம் இருந்தும் இறக்குமதியை இருமடங்காக உயர்த்தியது. இந்தநிலையில் வருகிற 21-ஆம் தேதியுடன் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் அமலுக்கு வர இருப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதற்கு பின் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தும் நிலையில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
