வேலூர், நவ.6- ஜி.விசுவநாதன் அவர்கள், வாய்ப்புகளைப் பெருக்கி, இவ்வளவு பெரிய கல்வி ஆலமரத்தை உருவாக்கி இருக்கிறார். இதற்காகவே அவரைப் பாராட்டவேண்டும். அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் அவரைப் பாராட்டி சிறப்புச் செய்யும்போது, எங்களுக்கு ஏற்பட்ட பெருமிதத்தை வார்த்தைகளால் அதைச் சொல்ல இயலாது. எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர், எங்கள் இனத்தைச் சார்ந்தவர், எங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்கின்றவர், சமதர்மத்தை உருவாக்கக் கூடியவர் என்பதற்காக அவரைப் பாராட்டவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவு
கடந்த 22.10.2025 அன்று வேலூர், வி.அய்.டி. பல்கலைக் கழக அண்ணா அரங்கத்தில் நாவலர் – செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதி தாசன் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவு முதல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடைய நினைவுப் பொழிவுகள் என்ற பெயரால், நாவலர் – செழியன் அறக்கட்டளை – பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் ஆகியவை இணைந்து நடத்தக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு, உலகப் புகழ் வாய்ந்த ஒரு கல்விப் பெருமையாளர் என்று என்றைக்கும் நாங்கள் பாராட்டி மகிழக்கூடிய, பெருமைப்படத்தக்க இந்த விழாவின் தலைவரும், இந்தப் பல்கலைக் கழகத்தின் நிறுவனருமான மானமிகு மாண்புமிகு கல்விக்கோ முனைவர் விசுவநாதன் அவர்களே,
இத்தனை ஆயிரக்கணக்கான நண்பர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். இந்த நேரத்தில், அய்யா – அண்ணா விழாவில் கலந்துகொள்வது என்பது எல்லை யற்ற மகிழ்ச்சியை, பூரிப்பை எங்களுக்கெல்லாம் தந்தாலும்கூட, முதலாவதாக இந்த விழாவினுடைய சிறப்பைப்பற்றிச் சொல்லுகின்றேன்.
சிறப்பாக இந்த விழாவினை நடத்துவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய வரவேற்புரையாற்றிய முனைவர் மரிய செபாஸ்தியன் அவர்களே,
தலைமுறை இடைவெளி இல்லாத இயக்கம்தான் திராவிடர் இயக்கம்!
அதேபோல, நோக்கவுரை என்பதை மிக அழகாக, அற்புதமாக ஓர் இளைய தலைமுறையில், இவ்வளவு சிறப்பாக, தொகுப்பாகச் சொல்லக்கூடியவர்கள், தலைமுறை இடைவெளிபற்றி இங்கே சொன்னார்கள், அய்ந்து ஆண்டுகள் இடைவெளி என்று. கொஞ்சம் இடைவெளி அதிகமாக இருக்கும் அங்கே; அதேபோல, கொஞ்சம் இடைவெளி குறைவாக இங்கே இருக்கும். எப்படி இருந்தாலும், தலைமுறை இடைவெளி இல்லாத இயக்கம்தான் திராவிடர் இயக்கம். கொள்கைதான் இணைப்பு. தலைமுறையினுடைய வேறுபாடுகள், வயது வேறுபாடுகள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று காட்டக்கூடிய அளவில் இருக்கக்கூடிய முனைவர் கோ.வி.செல்வம் அவர்களே,
அதேபோல வாழ்த்துரை வழங்கிய, வி.அய்.டி பல்கலைக் கழகத்தின் அருமைச் சகோதரர் சங்கர் விசுவநாதன் அவர்களே, இந்த அறக்கட்டளையினுடைய உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான அன்பிற்குரிய எங்கள் குடும்பத்தைச் சார்ந்த அய்யா அன்புமணி அவர்களே,
திராவிட இயக்கப் போர் வாள் வைகோ!
இந்நிகழ்வில் எனக்கு அடுத்து உரையாற்றவிருக்கக் கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற பொதுச்செயலாளரும், திராவிட இயக்கப் போர் வாளுமான அருமைச் சகோதரர் மானமிகு வைகோ அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக்கூடிய முனைவர் வினோத்பாபு அவர்களே, நண்பர்களே, தாய்மார்களே, தோழர்களே, கருஞ்சட்டைத் தோழர்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி, இரட்டிப்பு மகிழ்ச்சியை எங்களுக்குத் தருகிறது.
கற்றுக் கொள்வதற்காகத்தான்
இங்கே வந்திருக்கின்றோம்!
வி.அய்.டி. பல்கலைக் கழகத்திற்கு, நான் வருவது இதுதான் முதல் முறை இதனுடைய பெருமைகளைப்பற்றி பேசியிருக்கின்றேன். முனைவர் ஜி.விசுவநாதன் அவர்களைப் பாராட்டி இருக்கிறேன். இங்கே மாணவர்கள்தான் கற்றுக் கொள்ள வந்திருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள், எங்களைப் போன்றவர்களும் இவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்காகத்தான் வந்திருக்கின்றோம்.
நாங்கள், நிறுவனங்களை பெரியார் அறக்கட்ட ளையின் சார்பாக நடத்துகின்றோம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இங்கு ஏதோ பெற்றுக் கொண்டு போக வந்திருக்கின்றோம் என்பதைவிட, கற்றுக்கொண்டுப் போகத்தான் நாங்களெல்லாம் வந்தி ருக்கின்றோம்.
இந்த அரங்கமும்,அய்யாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது. அண்ணாவிடம் கற்றுக் கொள்ளவேண்டி யது என்பனவெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், அவர்களிடம் கற்றுக்கொண்டதினால் என்ன பலன் ஏற்பட்டது? என்பதற்கு இந்த வி.அய்.டி. பல்கலைக் கழகமே ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும்.
அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவர்களாகத்தான் இங்கே விசுவநாதன் இருக்கிறார், சங்கர் இருக்கிறார், செல்வம் இருக்கிறார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பதற்குக் காரணம், விஅய்டி விசுவநாதன் அவர்களைப் பலமுறை நான் சந்தித்திருந்தாலும்கூட சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டாலும், இந்த இடத்திற்கு வந்து அதைப் பதிவு செய்யவேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகின்றோம்.
ஏனென்றால், பெரியாரும், அண்ணாவும், திரா விட இயக்கமும் என்ன செய்தது? என்று இன்னமும் கேட்கின்றவர்கள் இருக்கிறார்கள்.
சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுநீதி!
அப்படிக் கேட்கின்றவர்களுக்குப் பதில்தான் இந்த அரங்கமும், இந்த நிகழ்வும்.
பெரியார், அண்ணா ஆகியோர் என்ன செய்தார்கள் என்றால், இந்த இனம் படிக்கக்கூடாது என்பது மனுநீதி.
எதைக் கொடுத்தாலும், சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுநீதி.
அந்த மனுநீதி, அரசியலமைப்புச் சட்டமாக வர வேண்டும் என்பதற்கும்-வரக்கூடாது என்பதற்கும் இடையே போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆகவே, அந்த சூழ்நிலையில், நம் சமுதாயத்தைப் பார்த்து படிக்காதே என்று சொன்னார்கள், அப்படியே மீறிப் படித்தால், தண்டனை!
பெரியாரும், அண்ணாவும் பிறந்திருக்காவிட்டால், திராவிட இயக்கம் பிறந்திருக்காவிட்டால், நமக்குப் படிக்கின்ற உரிமை கிடைத்திருக்குமா? வாய்ப்புக் கிடைக்குமா? என்பது அதற்குப் பிறகுதான். படிக்கின்ற உரிமையாவது கிடைத்திருக்குமா? என்பது முன்னால்.
எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் படிக்கக் கூடாது. எவ்வளவு பெரிய ஆற்றல் உள்ளவனாக இருந்தாலும் படிக்கக் கூடாது என்றார்கள்.
துரோணாச்சாரியார் என்ற உயர்ஜாதிக்காரர்
அதற்கு என்ன உதாரணம் என்றால், தாய்மார்கள், சகோதரிகள் எல்லாம் மகாபாரதம் கதையை 18 நாள்கள் கேட்டிருப்பீர்கள். அதில் வருகின்ற ஒரு கதையில், அர்ஜூனனுக்கு வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தது யார் என்றால், துரோணாச்சாரியார் என்ற உயர்ஜாதிக்காரர். அவர் பார்ப்பனர். அவர்கள்தான் ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம்.
அப்படி வில் வித்தையைச் சொல்லித் தரும்போது ஒரு நாய் குரைக்கிறது. திடீரென்று அந்த நாயின் வாயைப் பிளந்து ஒரு அம்பு செல்கிறது.
அந்த அம்பை அர்ஜூனன் விடவில்லை. வேறு எங்கோ இருந்து அந்த அம்பு வந்தது என்பது கதை.
உடனே துரோணாச்சாரியார் அர்ஜூனனிடம் கேட்கிறார்.
“நீ அம்பு எய்தாயா?” என்று.
“நான் அம்பு எய்தவில்லை குருவே?” என்று அர்ஜூனன் சொல்கிறான்.
“அப்படி என்றால், அந்த அம்பை எய்தது யார்?” என்று துரோணாச்சாரியார் கேட்கிறார்.
நான்தான் அந்த அம்பை எய்தேன்: ஏகலைவனின் பதில்!
அதைக்கேட்ட ஏகலைவன் ஓடி வந்து துரோணாச்சாரி யாரின் காலில் விழுந்து, “அய்யா, நான்தான் அந்த அம்பை எய்தேன்” என்று சொல்கிறான்.
“அப்படியா? நீ யார்? உனக்கு வில் வித்தையைக் கற்றுக் கொடுத்த குரு யார்? அர்ஜூனைத் தவிர, இப்படித் துல்லியமாக வேறு எவராலும் அம்பை இப்படி எய்ய முடியாதே” என்று வியப்போடு கேட்கிறார் துரோணாச்சாரியார்.
உடனே ஏகலைவன், “நீங்கள்தான் எனக்குக் குரு” என்று சொல்கிறான்.
“நான் குருவா? உன்னை நான் பார்த்ததுகூட கிடை யாதே, என்னைப் போய் குரு என்று சொல்கிறாயே?” என்கிறார் துரோணாச்சாரியார்.
ஏகலைவனின் கோரிக்கையும் -துரோணாச்சாரியாரின் மறுப்பும்!
ஏகலைவன் சொல்கிறான், “அய்யா, பல ஆண்டு களுக்கு முன்பு, நான் சிறுவனாக இருக்கும்போது, உங்களிடம் வில் வித்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டேன். ஆனால், நீங்கள், ‘நீ என்ன குலம்?’ என்று கேட்டீர்கள். நான் வேடவர் குலம் என்று சொன்னேன். “வில் வித்தையை கீழ்ஜாதிக்காரர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பது வர்ண தர்மம். ஆகவே, உனக்கு நான் சொல்லிக் கொடுக்கமாட்டேன்” என்று சொன்னீர்கள்.
மனம் கலங்கி, நான் திரும்பி வந்துவிட்டேன். ஆனால், உங்களைப் போன்றே ஓர் உருவத்தை நான் மணலால் செய்து, நாள்தோறும் வில்வித்தையை அந்த உருவத்திற்குமுன் பழகினேன். மானசீக குரு நீங்கள்தான்” என்றான் ஏகலைவன்.
சாதாரணமாக, உங்களைப் போன்றே ஓர் உருவம் செய்து வில்வித்தையைக் கற்றுக்கொண்டேன் என்று ஒரு மாணவன் சொன்னால், அதைக் கேட்டு, எவ்வ ளவு மகிழ்ச்சி அடைவீர்கள், அந்த மாணவனைப் பாராட்டுவீர்கள் அல்லவா!
ஆனால், துரோணாச்சாரியார் என்ன செய்தார் தெரியுமா?
இதுதான் வருண தர்மம்!
இதுதான் மனுதர்மம்!
நமக்கொன்றும் தனிப்பட்ட முறையில், எந்த நபர்மீதும் வெறுப்பு கிடையாது. எந்த வகுப்பினர்மீதும் வெறுப்பு கிடையாது.
கை கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்ட துரோணாச்சாரி!
உடனே துரோணாச்சாரியார். “அப்படியா? நீ அந்த வில்வித்தையைக் கற்றுக் கொண்டதற்கு குருதட்சணை கொடுக்கவேண்டுமே?” என்று கேட்டார்.
வெகுளியான ஏகலைவன், “அய்யா, குருதட்ச ணையாக நீங்கள் என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்” என்றான்.
“அப்படியா? உன் வலது கை கட்டை விரலை வெட்டித்தா!”
என்று துரோணாச்சாரியார் கேட்டார்.
(வில்லில் அம்பை வைத்து எய்வதற்குக் கட்டை விரல்தான் மிகவும் முக்கியம்
உடனே ஏகலைவன், கத்தியை எடுத்துத் தன்னுடைய கட்டை விரலை வெட்டி குருதட்சணையாகக் கொடுத்தான்.
அதற்குப் பிறகு ஏகலைவன் வில்லைத் தொட வில்லை கதைப்படிதான்.
இந்தக் கதையை மண்டல் ஆணைய அறிக்கையில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு சமுதாயம் படிக்கக்கூடாது என்ற அப்படிப்பட்ட நிலை இருந்தது.
தந்தை பெரியார், அண்ணா,
திராவிடர் இயக்கத்தின் சாதனை!
அதைத்தாண்டி, நீங்கள் அறிவாளியாக இருந்து படித்து வந்தாலும், உங்களிடமிருந்து குருதட்சணை என்ற பெயராலே கட்டை விரலை கேட்டதுபோன்று, படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும், நாக்கை வெட்டவேண்டும் என்று காலங்காலமாக இருந்த, தாழ்த்தப்பட்டிருந்த ஒரு சமுதாயத்தை, தலை நிமிரச் செய்து, “அனைவருக்கும் அனைத்தும்“ என்று ஆக்கியதுதான், தந்தை பெரியார், அண்ணா, திராவிடர் இயக்கம்.
ஒரு பெரிய ஆலமரம் போன்றது
வி.அய்.டி. பல்கலைக் கழகம்!
இந்த இயக்கத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு இளைஞராக இருந்தபோது சென்ற ஒருவர்தான் முனைவர் ஜி.விசுவநாதன் அவர்கள். பல நேரங்களில் அவர் எதிர்நீச்சல் அடித்தார். அவருடைய ஆற்றலால், மிகப்பெரிய அளவில் ஒரு பெரிய ஆலமரம் போன்று இந்த நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்.
உலகளாவிய பல்கலைக் கழகங்கள் அவரைப் பாராட்டி பெருமைப்படுத்துகின்றன. ஒரு திராவி டனை, ஒரு தமிழனை, ஒரு பெரியாரிஸ்ட்டை, ஒரு அண்ணாயிஸ்ட், திராவிட இயக்கத்தைச் சார்ந்த அவரைப் பாராட்டவேண்டும்-அவரால் இன்றைக்கு இந்த நாட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்புக் கிடைத்தி ருக்கிறது என்பதால்தான், இந்த நிகழ்ச்சிக்கு நான் ஒப்புக்கொண்டேன்.
நாங்கள் அவரை அழைத்துப் பாராட்டுவது முக்கியமல்ல; இங்கே வந்து அவரைப் பாராட்டவேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கே வந்தேன்.
ஏனென்றால், இது தனி ஒரு நபரான விசுவநாதன் என்பவருக்காக அல்ல – இந்தக் கொள்கையினுடைய வெற்றி தான், வெற்றிக்கனியாக இருக்கிறார்.
பெரியாரிடம் சேர்ந்தால், அண்ணாவிடம் சேர்ந்தால், திராவிட இயக்கத்தில் சேர்ந்தால் என்னாகுமோ என்று நினைப்பார்கள்.
ஊர் அறியும், உலகம் அறியும்!
ஒருமுறை கலைஞர் அவர்கள், தருமபுரியில் பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றும்போது “நான் இந்த இயக்கத்தில் 14 வயதில் வந்து சேர்ந்தேன். அப்போது என்னுடைய ஊரில் உள்ளவர்கள், “போயும் போயும் பெரியார் கட்சியில் சேர்ந்திருக்கிறாயே, நீ உருப்படுவியா?” என்று கேட்டார்கள். நான் இன்று உருப்பட்டு இருக்கிறேனா, இல்லையா? என்பதை ஊர் அறியும், உலகம் அறியும்“ என்று சொன்னார்.
அதுபோன்று. நம்முடைய விசுவநாதன் அவர்கள். வாய்ப்புகளைப்பெருக்கி, இவ்வளவு பெரியகல்வி ஆலமரத்தை உருவாக்கி இருக்கிறார். இதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் அவரைப் பாராட்டி சிறப்புச் செய்யும்போது, எங்களுக்கு ஏற்பட்ட பெருமிதம் இருக்கிறதே, வார்த்தை களால் அதைச் சொல்ல இயலாது.
எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர், எங்கள் இனத்தைச் சார்ந்தவர், எங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்கின்றவர். சமதர்மத்தை உருவாக்கக் கூடியவர் என்பதற்காக அவரைப் பாராட்டவேண்டும்.
16 ஆயிம் பேர் படிக்கிறார்கள்
இங்கே மட்டும் வி.அய்டி பல்கலைக் கழகம் இல்லை; ஆந்திராவில், மத்தியப் பிரதேசம் போபாலிலும் இருக்கின்றது. அங்கே 16 ஆயிம் பேர் படிக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
16 பேர் படிப்பதற்கே பள்ளிக்கூடம் இல்லாமல் இருந்த காலம் ஒரு காலம் ஆனால், இன்றைக்கு 16 ஆயிரம் பேர் படிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெருமை என்பதை நினைத்துப் பாருங்கள்.
ஹிந்தி மொழி படித்தால், வேலை கிடைக்கும் என்று முன்பு சொன்னார்கள். இன்றைக்கு ஹிந்தி படித்தவர்கள் எல்லாம், வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். ஹிந்தி தெரிந்த மாணவர்கள் படிப்பதற்காக அங்கே பல்கலைக் கழகத்தை நிறுவியிருக்கிறார் நம்முடைய விசுவநாதன் அவர்கள்.
எப்படி இருக்கிறது பாருங்கள்!
திராவிடன் -தமிழனுக்கு
ஒரு பெரிய பெருமை!
நமக்கு வேறுபாடோ, கூறுபாடோ இல்லை. மனிதர்களை நாம் வெறுக்கவில்லை. அதனால்தான், வெளிமாநிலமாக இருந்தாலும், அது ராஜஸ்தானாக இருந்தாலும், வெளிநாடாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் இங்கே வந்து படிக்கிறார்கள் என்றால், இதை விட திராவிடன் – தமிழனுக்கு ஒரு பெரிய பெருமை – ஆற்றல் வாய்ந்தவர் வேறு யார் இருக்க முடியும்?
எனவே, அவரை முதலில் பாராட்டிவிட்டு, பிறகு பெரியார் அண்ணாவிடம் வருகிறேன்.
திராவிட இயக்கம், தந்தை பெரியார் அவர்கள், அண்ணா அவர்கள், கலைஞர் அவர்கள் போன்ற வர்களின் பணியைச் செய்யக்கூடிய எங்களைப் போன்றவர்கள், வைகோ போன்றவர்கள் சேர்ந்து இந்தப் பொன்னாடையை ஒரு பக்கம் நான் பிடித்துக்கொள்ள, மறு பக்கத்தை திராவிட இயக்கப் போர்வாள் வைகோ பிடித்துக்கொள்ள இரண்டு பேரும் சேர்ந்து நம்முடைய வேந்தர் அவர்களுக்கு, ஈரோட்டு வேந்தர் சார்பாக இந்தப் பொன்னாடையை அணிவிக்கின்றோம்.
(தொடரும்)
