தந்தை பெரியாருக்கு எந்த சுயநலமும் இல்லை; அதனால்தான் அவரால் அவ்வளவு வலிமையாக இருக்க முடிந்தது!
மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் பணி ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஜி.பாலச்சந்திரன்
சென்னை, நவ.9- அரசமைப்புச் சட்டத்தின் முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாருக்கு எந்த சுயநலமும் இல்லை; அதனால்தான் அவரால் அவ்வளவு வலிமையாக இருக்க முடிந்தது என்றார் மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் பணி ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஜி.பாலச்சந்திரன் அவர்கள்.
தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் சார்பில் சென்னை பெரியார் திடலில் 8.11.2023 அன்று “எங்கே செல்கிறது
எம்நாடு?” என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் வருகை தந்த அனைவரையும் வரவேற்றும், திராவிடர் கழகத்தின் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் தொடர்ந்து ஆற்றக்கூடிய பணிகளை பாராட்டியும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேனாள் கூடுதல் தலைமைச் செயலர் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஜி. பாலச்சந்திரன் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தும் வேண்மாள் நன்னன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்விற்கு மூதறிஞர் குழுவின் துணைத் தலைவர் தேவதாஸ் சுவாமிநாதன் தலைமையேற்றார். அவரது தலைமை உரையில்:
திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் இந்த திராவிட மாடல் அரசு அமைவதற்கு மேற்கொண்ட பயணம், திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இந்த அரசை பாதுகாப்பதற்கான பயணம், நீட் தேர்வுக்கு எதிரான பயணம், புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான பயணம், மனுதர்ம (விஸ்வகர்மா) யோஜனா திட்டத்துக்கு எதிரான பயணம் என்று தொடர்ந்து இந்த தமிழ் சமூகத்திற்காக மேற்கொள்ளும் பயணங்களை, ஆற்றிவரும் பணிகளை பட்டியலிட்டு, அந்த வகையில் மூதறிஞர் குழுவுக்கும் புரவலராக இருந்து இதை வழிநடத்தும் விதத்தினை விளக்கினார். மேலும் மூதறிஞர் குழு 80களில் தொடங்கப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை அதன் தலைவர்களாக இருக்கக்கூடியவர்களின் பட்டியலை வாசித்தார். இந்த தலைப்பு ‘எங்கே செல்கிறது எம்நாடு’ என்றால் 2004 முதல் 2014 வரை இருந்த ஒன்றிய அரசும் அது இயற்றிய சட்டங்களையும், இன்று ஆளும் ஒன்றிய அரசால் இயற்றப்படும் சட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம் என்றார். குறிப்பாக 2004 முதல் 2014 வரை கல்விக்கான சட்டங்கள் இயற்றப்பட்டதை குறிப்பிட்டார். ஆனால் தற்போது வேளாண் திருத்த சட்டம் , குடியுரிமை திருத்தச் சட்டம், நீட், புதிய கல்விக் கொள்கை என்று மக்களை பின்னுக்கு தள்ளும் சட்டங்கள் நாள்தோறும் வருகின்றன என்பதை எடுத்துரைத்தார். அதிலும் குறிப்பாக கல்வியை மய்யப்படுத்தி பிஜேபி அரசு செய்யும் கொடுமைகளை விளக்கினார். சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு இவைகளை அடைவதற்கு பெரியாருடைய கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் தமிழர் தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம்; ஜாதி, மத சிந்தனைகள் அற்ற சமூகத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி நிறைவு செய்தார்.
வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் சுவைகள் நிரம்பிய கதை ஆகிவிட்டது
நிகழ்வில் மேனாள் கூடுதல் தலைமைச்செயலர் பணி ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஜி.பாலச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில்,
‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” என்பது தலைப்பு. இதில் நாடு என்றால் என்ன என்ற கேள்வி எழும். அரசமைப்புச் சட்ட ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட சட்டங்களால் ஒருங் கிணைந்து ஆளக்கூடிய பிராந்தியங்கள் என்று அதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அப்படி பார்த்தால் நம்முடைய நாடு இந்தியா 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திற்கு முன் இயற்றப்பட்ட எந்த சட்டங்களும் செல்லாது என்று மிகத் தெளிவாக அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.
பல மொழி, பல பண்பாடு கொண்ட மக்கள் வாழக்கூடிய காரணத்தினால் தான் அரசமைப்புச் சட்டத்தில் அனை வருடைய உரிமையையும் பாதுகாக்கக் கூடிய வகையில் பேச்சு சுதந்திரம் , ஒருவருடைய மத சுதந்திரம், மதச்சார்பற்றத் தன்மை என அனைத்திற்கும் சட்ட பாதுகாப்பு கொடுக்கப் பட்டது. இதன் மூலம் ‘‘இந்தியா என்பது ஒரே நாடு அல்ல – அது அனைவரும் ஒன்றுபட்டவர்களாக இருக்க நினைக் கக்கூடிய நாடு” என்றார்.
குறிப்பாக, நாடு விடுதலை அடைந்தபோது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை தங்களுக்கு சாதகமாக சிலர் எழுதிக் கொண்டனர் – பல பக்கங்கள் விடுபட்டு இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.
அதுபோலதான் வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படும் சுவைகள் நிரம்பிய கதை ஆகிவிட்டது. அந்த காரணத்தினால் தான் அகழ்வாராய்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்படாமல் தடுக்கப்படுகிறது என்றார்.
கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழ்வாராய்ச்சிகள் இவைகள் மூலமாக நம்முடைய வரலாறுகளை அறியலாம். கல்வெட்டுகளும் இலக்கியங்களும் கூட மிகைப் படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அறிவியல் ரீதியாக பாரபட்சமின்றி நடத்தப்படும் அகழ்வாராய்ச்சிகள் உண்மையை நமக்கு சொல்லும் கருவிகள் என்றார்.
தந்தை பெரியாருக்கு
எந்த சுயநலமும் இல்லை
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது கொண்டு வரப்பட்ட பல முக்கிய சீர்திருத்தச் சட்டங்கள் பற்றி விவரித் தார். குறிப்பாக சதி என்ற திட்டம் பற்றி ராஜாராம் மோகன் ராய் விளக்கியதும், ஆங்கிலேயர்கள் சதியைத் தடுக்கக்கூடிய சட்டத்தை இயற்றிய போதும், அன்று அதை எதிர்த்து எழுதியவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் எங்கு நம் நாட்டை கொண்டு செல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது என்றார்.
இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம். இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் அந்த அதிகாரத்தில் பங்கிடல் வேண்டும் என்றும், அந்த அதிகார பங்கிடலை சரிவர செய்தது நீதிக்கட்சி என்றார். அப்படி செய்த நீதிக்கட்சியில் கூட, அதில் இருந்த சிலருக்கு சுயநலம் இருந்தது. ஆனால், அவ்வளவு உழைத்த தந்தை பெரியாருக்கு எந்த சுயநலமும் இல்லை. அதனால் தான் அவரால் அவ்வளவு வலிமையாக இருக்க முடிந்தது என்பதை எடுத்துரைத்தார். குறிப்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் சட்ட திருத்தத்தை பெரியார் கொண்டு வந்ததை நினைவுப்படுத்தினார்.
எங்களுக்கு எதுவும் வேண்டாம், எங்கள் மக்களுக்கு எல்லாம் வேண்டும்
தான் டில்லி தமிழ்ச் சங்கத்தில் டில்லி என்டோமெண்ட் போர்டு (Delhi Endowment Board) தலைவராக இருந்த போது அந்த முதல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வந்து பேசியதை நினைவுகூர்ந்து, ஆசிரியர் நினைத்திருந்தால் எந்த அரசு பதவிக்கும் சென்றிருக்க முடியும்; அவரின் அறி வுக் கூர்மைக்கு அரசு தேர்வுகளை வென்று அதிகாரியாக மாறி இருக்க முடியும். ஆனால் ஆசிரியரும் தந்தை பெரியா ரும் எங்களுக்கு எதுவும் வேண்டாம், எங்கள் மக்களுக்கு எல்லாம் வேண்டும் என்று வாழ்ந்தனர் என்று குறிப்பிட்டார்.
ஒரு நாடு என்பது மக்களைக் கொண்டது ; மாநிலங்களைக் கொண்டது. மாநிலத்தின் வளர்ச்சி தான் ஒன்றியத்தினுடைய வளர்ச்சி இந்த புரிதல் இல்லாதவர்கள் தான் தற்போது ஆள்கிறார்கள் என்றார். குறிப்பாக ஜி.எஸ்.டி. வரி போன்ற வரிகளால் மாநில அரசினுடைய வளர்ச்சி எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதை விளக்கினார்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை கொண்டவர்கள் ஆள்வது அல்ல; சிறுபான்மை மக்களினுடைய பாதுகாப்பை பொறுத்தே அமையும் என்பதை விளக்கினார். ஆனால் தற் போது மக்களாட்சியினுடைய முக்கிய தூண்கள் சிதைக்கப்படு கிறது. அதன் மூலமாக மக்களாட்சியும் சிதைக்கப்படுகிறது என்றார்.
மக்களை மாக்களாக மாற்றும் முயற்சி இன்றைக்கு நடைபெறுகிறது
இந்தச் சூழலில் தான் பள்ளிப் பருவம் முதல் அரசமைப்புச் சட்டம் பாடமாக நிச்சயமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கு அரசமைப்பு சட்டத்தினுடைய கூறுகள் கற்பிக்கப்பட வேண்டும். அப்போது தான் அதனை புரிந்து கொண்டு எப்படி ஒரு மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அனைவருக்கும் பரப்ப முன் வருவார்கள் என்றார். குறிப்பாக மக்களை மாக்களாக மாற்றும் முயற்சி இன்றைக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு தனித்தீவாக இருக்கிறது. அதுதான் அனைத்திற்கும் போராடும்.
குறிப்பாக 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற தமிழ்நாடு எடுத்த முயற்சிகளை விவரித்து 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று போராடியவர்கள் இன்று 10 விழுக் காடு இட ஒதுக்கீடு கேட்கிறார்கள் என்பதை விவரித்தார்.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடை அமல்படுத்த பிரதமர் வி.பி.சிங் மேற்கொண்ட முயற்சிகளை எல்லாம் விவரித்தார்.
இன்றைக்கு ராகுல் காந்தியும் வகுப்புவாரி உரிமை பற்றியும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றியும் பேசக்கூடிய நிலை வந்திருப்பதை விவரித்தார். இந்த சமூக நீதி என்ற பார்வை தமிழ்நாட்டிற்கு பன்னெடுங்காலமாக இருக்கிறது. இன்றைக்கு காங்கிரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் பேசுவதை எடுத்து ரைத்தார்.
இன்றைக்கு ராகுல் காந்தி ஆயிரம் ஆண்டு காலமாக நடக்கும் கருத்தியல் யுத்தம் இது என்று சொல்லி இருக்கிறார். பெரியார் இதனை எப்போதோ சொல்லிவிட்டார் என்றார். ஒரு ஆட்சி நன்றாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு அதிகாரிகள் எவ்வளவு முக்கியம் என்பதை எல்லாம் விவரித்து, எல்லோரும் ஒன்றாக வேண்டும்; எல்லோருக்கும் அதிகார பங்கீடு பரவப்பட வேண்டும் என்றார். அதிகார பலமும் , பிரச்சார பலமும் கொண்டவர்கள் நாட்டை பின்னே இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் உண்மையாக நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் இதனை சரியாக கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள். அவர்களோடு நிற்க வேண்டும் என்றார். மாநிலங்கள் பலம் பெற வேண்டும் என்றால் அது பற்றிய சிந்தனையை நாம் ஒன்றியத்திலும் அமைக்க வேண்டும் என்றும் இந்த செய்திகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை இது குறித்து சிந்திக்க வைப்பது நம்முடைய கடமை என்றும் கூறி நிறைவு செய்தார்.
2024ஆம் ஆண்டு பொதுத்
தேர்தல் பிரச்சாரத்திற்கான முன்னோட்டமாக தமிழர் தலைவர் உரை
நிகழ்வின் இறுதியில் நிறைவுரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவரது உரையில்: இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் முக்கிய கூறுகளை விவரித்து, குறிப்பாக சமூகநீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போன்றவற்றை அம் பேத்கர் எவ்வளவு பெரிய நெருக்கடிகளுக்கு இடையே இந் திய அரசமைப்பு சட்டத்தில் இணைத்து இருப்பார் என்பதை விவரித்து , அந்த அரசமைப்புச் சட்டத்தின்படி தான் யாராக இருந்தாலும் ஆட்சி நடத்த வேண்டும்; ஆனால், இன்றைக்கு தலைகீழாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார். பல ஆதாரங்களுடனும், புத்தகக் குறிப்புகளுடனும் இன்றைய ஒன்றிய பி.ஜே.பி. அரசு எப்படி எல்லாம் மக்கள் விரோதச் சட்டங்களை கொண்டு வருகிறது என்றும், குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பில் துரோகாம் இழைக்கும் ஒன்றிய அரசின் போக்கினை எடுத்துரைத்தார். இந்திய அளவில் இன்றைக்கு பாசிச பி.ஜே.பி. அரசை வீழ்த்துவதற்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய ‘இந்தியா’ கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அதற்கு நாம் உழைக்க வேண்டும் என்று கூறி , 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் முன்னோட்ட உரை போல் நிறைவு செய்தார். தமிழ்நாடு மூதறிஞர் குழு தலைவர் பேராசிரியர் சு.தேவதாஸ் தலை மையில் பகுத்தறிவா ளர் கழக துணைத் தலைவர் வேண்மாள் வரவேற்றார். பொறியாளர் நாகராஜன் இணைப்புரை வழங்கினார். தமிழ்நாடு மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
காவல்துறை பணி ஓய்வுபெற்ற அதிகாரி ராமனாதன் அய்.பி.எஸ்., கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பெரியார் நூலகவாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தலைமைக்கழக அமைப் பாளர் தே.செ.கோபால், சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, பசும்பொன், மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியதேவன், புலவர் பா.வீரமணி, கவிஞர் கண்மதியன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், வெ.ஞானசேகரன், இரா.வில்வநாதன், கோ.நாத்திகன், மு.ரா.மாணிக்கம், விடுதலைநகர் ஜெயராமன், சு.மோகன்ராஜ், பெரம்பூர் பா,கோபாலகிருஷ்ணன், கணேசன், கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், அயன்புரம் துரைராஜ் உள்பட பலர் சிறப்புக்கூட்டத்தில் கலந்துகொண்ட னர்.