போபால், நவ.5- மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து விவகாரத்தில் மருந்துக் கடை நடத்தி வந்த மருத்துவரின் மனைவி கைது செய்யப்பட்டார்.
குழந்தைகளுக்கு தரமற்ற இருமல் மருந்தை கொடுத்ததால் மத்தியப் பிரதேசத்தில் 24 குழந்தைகள் இறந்துள்ளனர். இதே போல ராஜஸ்தானிலும் 3 குழந்தைகள் பலியானதாக தகவல்கள் வெளி யானது. இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தியது. அந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மருந்துகள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டது. கோல்டிரிப், ரெஸ்பிரெஷ் டி.ஆர். மற்றும் ரீலைப் ஆகிய 3 இருமல் மருந்துகள் தரமற்றதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த நிறுவனம் கோல்டிரிப் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டதாக அதன் முதலாளி ஜி.ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தில் குறிப்பிட்ட அந்த மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் பிரவீன் சோனி என்பவர் ஏற்ெகனவே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவரின் மனைவி ஜோதி மீதும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு மருத்துவரின் மனைவியை சிந்த்வாரா மாவட்டத்தின் பராசியா நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் (3.11.2025) இரவில் கைது செய்தனர். அவர், இருமல் மருந்து விற்கப்பட்ட ஒரு மருந்துக் கடையின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இருமல் மருந்து விவகார வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
