சென்னை, நவ.5- ஆணவப் படுகொலைகளைத் தடுப்ப தற்கான சட்டம் கொண்டு வருவதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான கே.எம்.பாஷா அவர்களை ஆணையத்தின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மற்ற நீதிபதிகளை நியமித்திருந்தால், அவர் ஏதாவது ஒரு ஜாதியைச் சார்ந்த நீதிபதி என்று சொல்வார்கள். அதற்கு இடமில்லாமல்தான், ஓர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதியை நியமித்திருக்கிறார். நம்முடைய முதலமைச்சரின் கூர்த்த மதி இருக்கிறதே, அது என்றென்றைக்கும் பாராட்டுக்கும், பெருமிதத்திற்கும் உரியது. ஜாதிப் பெருமையைப் பேச வைத்து நம்மை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்தது ஆரியம்; நம்மை ஒன்று சேர்த்தது திராவிடம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா!
கடந்த 27.10.2025 அன்று சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள இராஜகோபால் திருமண மண்ட பத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழா – மற்றும் ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பொதுவுடைமைக் கவிஞர்
ஜீவாவின் மகள் மணவிழா!
பொதுவுடைமைக் கவிஞர் ஜீவா மறைந்து சில ஆண்டுகள் கழித்து தந்தை பெரியார், ஜீவா அவர்களுடைய மகளுக்கு, மாப்பிள்ளைப் பார்த்து, திருச்சி பெரியார் மாளிகையில் திருமணத்தை நடத்துகிறார். அப்போது சுயமரியாதைத் திருமணம் சட்ட வடிவம் பெறவில்லை.
முதலமைச்சர் அண்ணாவை அழைத்து, அத்திரு மணத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றச் சொன்னார். எல்லா தலைவர்களும் அத்திருமணத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது உரையாற்றிய முதலமைச்சர் அண்ணா, ‘‘தந்தை பெரியார் எவ்வளவு பூரிப்போடு இருக்கிறார் என்பதை நான் பார்க்கிறேன். ஒரு பெரிய வீட்டில் திருமணம் நடக்கும். அத்திருமணத்திற்குத் தன்னுடைய பிள்ளைகள் எல்லாம் வருவார்கள். இங்கே எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்திருக்கிறார்கள். குன்றக்குடி அடிகளார் போன்றவர்களும் வந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்துத் தலைவர்களும்-
பெரியாரிடமிருந்து உருவானவர்கள்தான்!
ஒரு குடும்பத்தில் பெரியவர் இருந்தால், அந்தப் பெரியவரிடம் அறிமுகப்படுத்துவார்கள்; ‘‘இவர் என் பிள்ளை, பொறியாளராக அமெரிக்காவில் இருக்கிறார்; இவர் டாக்டராக இருக்கிறார், இவர் பேராசிரியராக இருக்கிறார்’’ என்றால், அந்தப் பெரியவர் எவ்வளவு மகிழ்ச்சிடைவாரோ, அது போல, இவர் இந்தக் கட்சியில் இருக்கிறார், அவர் அந்தக் கட்சியில் இருக்கிறார். இவர் அந்தக் கட்சிக்குத் தலைவர், அவர் அந்தக் கட்சிக்குத் தலைவர் என்கின்ற மாறுபாடுகள் இருந்தாலும், எல்லோருமே பெரியாரிடமிருந்து உருவானவர்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு’’ என்று குறிப்பிட்டார்.
சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டம் வடிவம் கொடுத்தார் முதலமைச்சர் அண்ணா. அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க. இருக்காது என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு அந்தக் கட்சிக்குத் தலைவராக யார் இருப்பார்கள்? என்று கேட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்கள், கலைஞரை அடை யாளம் காட்டினார். ஒப்பற்ற முதலமைச்சராக கலைஞர் இருப்பார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கலை ஞரைக் கொண்டு வந்து நிறுத்தினர். பிறகு கலைஞர் மறைந்தவுடன், அதற்குப் பிறகு யாரும் இல்லை என்று நினைத்தனர்.
தமிழ்நாடு வெற்றிடமல்ல, கற்றிடம் என்று தாய்க்கழகம்தான் சொல்லிற்று!
சில சினிமாக்காரர்களுக்குக்கூட ஆசை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் வெற்றிடம் என்று சொன்னார்கள்.
தாய்க்கழகமான நாங்கள்தான் சொன்னோம், தமிழ்நாடு வெற்றிடமல்ல; இனிமேல் அது கற்றிடம் என்று.
அடுத்தபடியாக, நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்று, கொள்கைக் கூட்டணியை அமைத்து, அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்றார்.
சுயமரியாதை இயக்கம் பிறந்தது ஏன்?
ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், ஜாதி ஒழிப்பிற்கு, தீண்டாமை அழிப்பிற்கு, பெண்ணடிமை ஒழிப்பிற்காகத்தானே இந்த இயக்கமே பிறந்தது.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் சட்டத்தின்படி பணி நியமனம் செய்தார்.
ஓராண்டிற்கு முன்பு கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்த்து, அர்ச்சகராக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர்தான் வர வேண்டும் என்று வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கின் விசாரணை முடிந்து சில நாள்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தது.
நீதிபதிகள் அளித்த அத்தீர்ப்பின் விவரம் வருமாறு:
‘‘அர்ச்சகர்கள் நியமனத்திற்குத் தகுதி பெற ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை, ஓர் அத்தியாவசிய மத நடைமுறை, சடங்கு அல்லது வழிபாட்டு முறையை வலியுறுத்துவதாகக் கருத முடியாது.
அரசியலமைப்பிற்கு முந்தைய காலத்திலிருந்தே எந்தவொரு வழக்கமோ அல்லது பழக்கவழக்கமோ இருந்தாலும், அது மனித உரிமைகள், கண்ணியம் அல்லது சமூக சமத்துவத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதனை அங்கீகரிக்க முடியாது.
அடக்குமுறையான, தீங்கு விளைவிக்கும், பொதுக் கொள்கைக்கு முரணான அல்லது நாட்டின் சட்டத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு வழக்கமோ அல்லது நடைமுறையோ, அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கீ காரத்தைப் பெற முடியாது.
எங்களைப் பொறுத்தவரை, கோயிலில் அர்ச்சகர்க ளாக நியமனம் செய்யத் தகுதியானவர்கள் என சான்றளிக்கும் தந்திர வித்யாலயா முறை ஒரு முழுமையான செயல்முறையாகவே தோன்றுகிறது. பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், கோயில் கடமைகளை மேற்கொள்வதற்கான அவர்களின் தயார்நிலையைக் குறிக்கும் வகையில், தீட்சை விழாக்களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.
ஜாதிக்கும், பாரம்பரியத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது!
மேலும், அத்தகைய தகுதி வாய்ந்த விண்ணப்ப தாரர்கள் கூட, இறுதித் தேர்வு மற்றும் முறையாக அமைக்கப்பட்ட குழுவால் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் கற்றறிந்த அறி ஞர்களைத் தவிர, ஒரு புகழ்பெற்ற தந்திரி குழுவும் அடங்கும். இந்தப் பின்னணியில், பாரம்பரிய அர்ச்சர்களின் கீழ் பயிற்சி பெற்ற நபர்களை மட்டுமே சாந்திகளாக நியமிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது’’ என்றும்,
“தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் செய்வது அரசியலமைப்பு கூறும் சமத்துவத்தை உறுதி செய்யும். ஜாதிக்கும், பாரம்பரியத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சீர்திருத்தத் திருமணங்கள், ஜாதி மறுப்புத் திரு மணங்கள், கைம்பெண் திருமணம், மத விலக்குப் பெற்று மறுமணங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. இருந்தும் ஏன் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன?
இன்னமும் பெரியார் தேவைப்படுகிறாரா, இல்லையா? இன்னமும் சுயமரியாதை இயக்கம் தேவைப்படுகிறதா, இல்லையா?
தமிழ்நாட்டில், சுயமரியாதை பிறந்த நாட்டில், முனுஆதிகள் வாழுகின்ற நாட்டில், வாழ்ந்த நாட்டில் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஜாதிக்கு ஏதாவது
அடையாளம் உண்டா?
காரணம், ஜாதி வெறிதான். ஜாதிக்கு ஏதாவது அடையாளம் உண்டா? சிவப்பாக இருந்தால், அந்த ஜாதி; கருப்பாக இருந்தால், இந்த ஜாதி என்று சொல்ல முடியுமா?
உயர்ஜாதியிலும் கருப்பாக இருக்கிறார்கள்; கீழ்ஜாதி என்று சொல்லப்படுவதிலும் சிவப்பாக இருக்கிறார்கள். ஆகவே, நிறத்தை வைத்து ஜாதியைத் தீர்மானிக்க முடியாது.
ஓர் உதாரணத்தை உங்களுக்கெல்லாம் சொல்கிறேன்.
ஓர் அய்யங்கார் விபத்தில் அடிபட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்படுகிறார். (அய்யங்கார் விபத்தில் அடிபடவேண்டும் என்று சொல்லவில்லை. உயர்ஜாதி என்பதற்காக சொல்கிறேன்) உயிர் பிழைத்துக் கொள்கிறார். கால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால், உடனடியாக ஓர் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார். ஆகவே, உங்கள் ரத்த வகை என்ன? என்று கேட்கிறார்.
அப்போது, என்னுடைய ரத்தம் அய்யங்கார் ரத்த வகை என்றா சொல்வார்? அல்லது நாடார் ரத்தம், செட்டியார் ரத்தம், பிள்ளைமார் ரத்தம், வன்னியர் ரத்தம் என்றா சொல்வார்கள்?
உலகம் முழுவதும் ஏ1 பாசிட்டிவ், ஓ குரூப், பி குரூப், ஏ குரூப் என்றுதான் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
பல பேருக்கு அவரவர் ஜாதியைப்பற்றி தெரியுமே தவிர, தெரிந்துகொள்ளவேண்டிய ரத்த குரூப் என்னவென்று தெரியாமல் இருப்பார்கள்.
அப்படி வருகையில், அய்யங்கார் ரத்த குரூப், அரிய வகை ரத்த வகை. இரண்டு, மூன்று நாள்களும் கடந்துவிட்டன. அந்த ரத்த வகை கிடைப்பதற்குத் தாமதம் ஆகின்றது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அய்யங்காருக்குக் கோபம் ஏற்பட்டு, டாக்டர் வரும்போது, ‘‘டாக்டர், எனக்கு அறுவைச் சிகிச்சை செய்கிறேன் என்று சொல்லி மூன்று நாள்கள் ஆகிவிட்டதே, இன்னமும் ஏன் செய்யவில்லை?’’ என்று கேட்டார்.
உடனே டாக்டர், ‘‘உங்களுடைய ரத்த வகை ஏ1 பாசிட்டிவ். அரிய வகை ரத்தம் என்பதால், இரண்டு பாட்டில் ரத்தம் வேண்டும் என்று விளம்பரம் செய்தி ருந்தோம். ஆனால், இரண்டு நாள்களாக யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
ஆனால், இன்றைக்குத்தான் ஒரு இளைஞர் ரத்தம் கொடுப்பதற்காக வந்திருக்கிறார்’’ என்றார்.
‘‘பிறகு என்ன? உடனே அறுவைச் சிகிச்சையை செய்யவேண்டியதுதானே?’’ என்றார் அய்யங்கார்.
‘‘இல்லீங்க, அதற்காகத்தான் உங்களுடைய அனுமதி யைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன்’’ என்றார் டாக்டர்.
‘‘இதற்கு என்னுடைய அனுமதி எதற்கு?’’ என்று கேட்கிறார் அய்யங்கார்.
‘‘நீங்க, அய்யங்கார், உயர்ந்த ஜாதி என்று சொல்வீர்கள் – ரத்தம் கொடுக்க வந்தவரோ, ஆதிதிரா விட சமுதாயத்தைச் சார்ந்தவர். அவருடைய ரத்தத்தை உங்கள் உடலில் ஏற்றுவதற்கு அனுமதி கொடுப்பீர்களா? அவர் கீழ்ஜாதி என்று சொல்வீர்களே என்பதற்காகத்தான் உங்கள் அனுமதியை கேட்க வந்தேன்’’ என்று மருத்துவர் சொன்னார்.
‘நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று தெரியுமா?’
உடனே அய்யங்கார், ‘‘அவர் கீழ்ஜாதியைச் சேர்ந்தவர். அவருடைய ரத்தத்தை உயர்ந்த ஜாதியான என் உடலில் ஏற்றுவதற்குச் சம்மதம் சொல்லமாட்டேன்; நான் செத்தாலும் பரவாயில்லை, என்னுடைய ஜாதிதான் முக்கியம்’’ என்று அவர் சொல்லுவாரா? என்றால், இல்லை என்பதுதான் உண்மை.
உடனே அந்த அய்யங்கார் டாக்டரின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று தெரியுமா? இப்போதெல்லாம் யார் ஜாதிப் பார்க்கிறார்கள்? உடனே அவருடைய ரத்தத்தைப் பெற்று, எனக்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்’’ என்றுதானே சொல்வார்.
இவர் உயிர் பிழைக்கவேண்டும் என்றால், அங்கே ஜாதி செத்துப் போச்சு. அங்கே ஜாதிக்கு இடம் இல்லை.
பாராட்டத்தக்க மனிதநேய செயல்!
அதேபோன்று, மதுரையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை இரண்டு மணிநேரத்திற்குள் சென்னைக்குக் கொண்டு போய், தேவைப்பட்டவர்களுக்குப் பொருத்துகிறார்கள். அற்புதமான செயல் – மனிதநேயம்!
இதற்கு யாராவது ஜாதி பார்க்கிறார்களா? மதம் பார்க்கிறார்களா? ஏன், நாடு பார்க்கிறார்களா?
பாகிஸ்தானிலிருந்து இங்கே சிகிச்சைக்காக வந்தவருக்கும் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன.
ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருக்கின்ற காலகட்டத்தில், இன்றைக்கு ஜாதி வெறியால், 10 மாதம் சுமந்து பெற்ற மகளை, வளர்த்த பிள்ளையை, தான் ஆளாக்கிய பிள்ளைகளை, கஷ்டப்பட்டு படிக்க வைத்து, டாக்டராக்கி, பொறியாளராக்குகின்றனர். அவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள் என்றாலும்கூட, ‘‘என்னைக் கேட்டா காதல் செய்தாய்? உன்னுடைய திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளமாட்டேன்’’ என்று காதலை ஏற்க மறுத்து, அதற்காகக் கூலிப் பட்டாளத்தைத் தேடுகின்ற நிலை.
ஆணவக் கொலைகளை எதிர்த்துப் பிரச்சாரம் மட்டுமே போதாது!
நம்முடைய நாட்டில் கூலிப் பட்டாளங்கள் பெருகி விட்டன. அரசியலில் மிக அதிகமாக ஊடுருவிவிட்டன. அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ஆணவக் கொலைகள் நடக்கின்றன. அவற்றைத் தடுக்கவேண்டும் என்று சொன்னால், ஒரு பக்கம் பிரச்சாரம், நம்மைப் போன்ற இயக்கங்கள் செய்கின்றன. பிரச்சாரமே அதற்கு இறுதியல்ல. அதற்குரிய சட்டம் வரவேண்டும்.
சுயமரியாதைத் திருமணங்கள் சட்டமாவதற்கு முன்பு நிறைய நடைபெற்றன. அதற்கு எதிர்ப்பு இருந்தாலும், சட்டம் என்று வந்தவுடன், அத்திருமணத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.
அதேபோன்றுதான், ஜாதி ஒழிப்பிற்காகத் தொடர்ந்து பிரச்சாரத்தை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.
ஜாதிவெறிக்கு என்ன காரணம்?
தந்தை பெரியாரும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்தது ஆரியம்; நம்மை ஒன்று சேர்த்தது திராவிடம்!
அம்பேத்கர் என்ன சொன்னார் என்றால், ‘‘உயர்ஜாதி – கீழ்ஜாதி என்கிற பேதம் மட்டுமல்ல; ஜாதியில் படிக்கட்டு முறையை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் என்னுடைய ஜாதி பெரியது; உன்னுடைய ஜாதி, என்னுடைய ஜாதிக்குக் கீழ்தான் என்று ஜாதிப் பெருமையைப் பேச வைத்து, நமக்குள் சண்டையை ஏற்படுத்தி, ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்தது ஆரியம்’’ என்றார்.
அதை ஒன்றாக்கிய பெருமை திராவிட இயக்கத்தையே சாரும்; சுயமரியாதை இயக்கத்தையே சாரும்.
ஆணவக் கொலையைத் தடுப்பதற்கான ஒரு சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம்.
கீழ்ஜாதி என்று சொல்லப்படுகின்ற சூத்திரன், பஞ்சமன் என்பவர்கள் மத்தியில்தான் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால், அக்கிரகாரத்தில், பார்ப்பனர்கள் சமுதாயத்தில் காதல் திருமணம் நிறைய நடைபெறுகின்றன.
ஆணவக் கொலைகள் செய்தவர்களில் பார்ப்பனர்கள் யாராவது இருக்கிறார்களா, என்றால், நிச்சயம் இருக்காது. ஏதோ ஒன்றிரண்டு தப்பித் தவறி இருக்கலாம்.
ஆனால், பெரும்பாலும் நம்மாட்கள்தான் ஆணவக் கொலையைச் செய்கிறார்கள்.
‘‘பேயைவிட, பேய் பிடித்தவன்தான் அதிகமாக ஆடுவான்!’’
பார்ப்பனர்களுக்கு இல்லாத ஜாதி ஆதிக்கம், எப்படி நம்மாட்களுக்கு வந்தது என்று கேட்டால், குன்றக்குடி அடிகளார் வேடிக்கையாக ஒன்றைச் சொன்னார். அதை நான் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.
அது என்னவென்றால், ‘‘பேயைவிட, பேய் பிடித்தவன்தான் அதிகமாக ஆடுவான்’’ என்பார்.
அதுபோன்று, ஜாதிப் பேய் இருக்கிறதே, அது பிடித்தவன்தான், இவன்தான் அதிகமாக ஆடுகிறானே தவிர, ஜாதியை நமக்குள்ளே திணித்தவன் ஆடமாட்டான்.
ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம்: முதலமைச்சருக்கு வாழ்த்துகள்!
இவை அத்தனைக்கும் விடியல் தேடக்கூடியதுதான், ஆணவப் படுகொலைத் தடுப்பிற்கான சட்டம். அந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னோட்டமாக ஓர் ஆணையம் அமைத்துள்ளதற்காக, நம்முடைய முதலமைச்சருக்கு ஆயிரம் பாராட்டுகள், வாழ்த்துகள்! ‘திராவிட மாடல்’ ஆட்சி அந்தச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.
எல்லாத் துறைகளிலும் ஜாதிப் பார்ப்பதில்லை. யார், யார் என்று அடையாளம் தெரியாது. ஆனால், திருமணத்தில், தன்னுடைய ஜாதி அடையாளத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அதை எதிர்க்க வேண்டியது கட்டாயம் – பிரச்சாரம் செய்யவேண்டியது கட்டாயமாகும்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எதைச் செய்தாலும், மிகப் பக்குவமாகச் செய்வார். அந்த ஆற்றல் படைத்தவர் அவர்.
அதனால்தான், உச்சநீதிமன்றத்தில்கூட தமிழ்நாட்டு ஆளுநருடைய பாட்சா எடுபடவில்லை.
முதலமைச்சரின் கூர்த்த மதி – பாராட்டுக்கும், பெருமிதத்திற்கும் உரியது!
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் – ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் கொண்டு வருவதற்காக ஓர் ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான கே.எம்.பாஷா அவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், ஓர் இஸ்லாமியரைத் தேர்ந்தெடுத்தார்.
ஏனென்றால், மற்ற நீதிபதிகளை நியமித்திருந்தால், அவர் ஏதாவது ஒரு ஜாதியைச் சார்ந்த நீதிபதி என்று சொல்வார்கள். அதற்கு இடமில்லாமல்தான், ஓர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதியை நியமித்திருக்கிறார்.
ஆகவே, நம்முடைய முதலமைச்சரின் கூர்த்த மதி இருக்கிறதே, அது என்றென்றைக்கும் பாராட்டுக்கும், பெருமிதத்திற்கும் உரியது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டினை நாம் கொண்டாடுகின்றபோது, எந்த இலக்குக்காக அவருடைய உழைப்பு இந்த இயக்கத்திற்கு வந்ததோ, அதையே இன்றைக்கு நாம் விழுமிய பயனாக, காய்த்த பழமாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவேதான், இந்த இயக்கம் ஆயிரங்காலத்துப் பயிர். அதனைக் காக்கவேண்டியது மிக முக்கியமாகும்.
‘‘பதவி என்பது மேல் துண்டு;
கொள்கை என்பது வேட்டி!’’
இன்றைய இளைஞர்கள் சிந்திக்கவேண்டும் – அண்ணா அழகாகச் சொன்னார், ‘‘பதவி என்பது மேல் துண்டு; கொள்கை என்பது வேட்டி’’ என்றார்.
இப்பொழுது நிறைய பேருக்கு வேட்டியே இல்லை. பதவியை நோக்கியே போகிறார்கள். படிப்படியாக வரவேண்டும் என்ற நினைப்பில்லை. எடுத்தவுடனேயே முதலமைச்சர் பதவிதான்.
எனவேதான், இந்தக் காலகட்டத்தில் ஒரு மாயை, ஒரு தவறான கருத்து, ஒரு சரிவு இவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லவேண்டியதுதான் அய்யா முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழாவில் எடுக்கின்ற உறுதியாகும்.
ஜாதியற்ற,பெண்ணடிமை நீக்கிய, ,மூடநம்பிக்கை ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்!
பெருமை பேசுவது மட்டுமல்ல, பழைய காலத்துச் சிறப்புகளைச் சொல்லுவது மட்டுமல்ல –
ஓர் எழுச்சியோடு ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்!
பெண்ணடிமை நீக்கிய ஒரு சமுதாயத்தை நிறுவுவோம்!
மூடநம்பிக்கை ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் என்று சூளுரை எடுப்போம்!
அதுதான், நம்முடைய நூற்றாண்டு விழா நாயகரான அய்யா முனுஆதி அவர்களுக்கு நாம் காட்டும் சிறப்பு என்று சொல்லி, வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
