மதுரை, நவ. 3- ஆதார் அட்டையில் உரிய திருத்தங் களை மேற்கொள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஆதார் சேவை மய்யம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யைச் சேர்ந்த பி.புஷ்பம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எனக்கு 74 வயதாகிறது. இந்திய ராணுவத்தில் 21 ஆண்டுகள் பணிபுரிந்து எனது கணவர் ஓய்வுபெற்ற நிலையில் 23.5.2025-இல் இறந்தார். இதையடுத்து, குடும்ப ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தேன்.
எனது ஆதார் அட்டையில் பெயர் மற்றும் பிறந்த தேதியில் தவறு இருப்பதாகக் கூறி எனது விண்ணப் பம் நிராகரிக்கப்பட்டது. பல இடங்களுக்குச் சென்றும் என் கோரிக்கை நிறைவே றவில்லை. ஆதார் அட்டையில் உள்ள தவறுகளை சரி செய்ய உத்தர விட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் ஆதார் அட்டையில் உள்ள தவறால் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. ஆதார் அட்டையில் தவறுகளைத் திருத்தம் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதார் சட்டத்தின் 31ஆவது பிரிவு ஆதார் அட்டையில் இடம்பெறும் விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்கிறது. ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி மற்றும் பயோமெட்ரிக் தகவல்களில் ஏற்படும் மாற்றங்கள் மதுரை ஆதார் சேவை மய்யத்தில் மட்டுமே சரி செய்ய முடியும். இதற்காக மதுரை ஆதார் சேவை மய்யத்தில் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்தப் பிரச்சினை தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. பிற மாநிலங்களிலும் உள்ளது. தமிழ்நாட்டில் 4056 ஆதார் சேர்க்கை மய்யங்கள் உள்ளன. 2026 மார்ச் மாதத்துக்குள் 28 இடங்களில் ஆதார் சேவை மய்யம் திறக்கப்படும் என ஆதார் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஆதார் சேவை மய்யம் இருக்க வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது. மனுதாரர் மதுரை ஆதார் சேவை மய்யத்தை அணுக வேண்டும். அவர் கோரும் மாற்றத்தை ஆதார் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு குடும்ப ஓய்வூதிய ஆவணங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
