ஈரோடு, நவ. 2– பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுயமரியாதை திருமணம் செய்த காதல் இணையர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குன்னமலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் மவுனிகா (வயது 23). இவர் எம்.எஸ்சி. படித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவருடைய மகன் மோனிஷ் கண்ணன் (23), பொறியாளர்.
மவுனிகாவின் ஊரும்,மோனிஷ் கண்ணனின் ஊரும் அருகருகே உள்ளதால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் காதல் இணையர் நேற்று (1.11.2025) சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் மாலையும் கழுத்துமாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுஜாதாவிடம் புகார் மனு கொடுத்தார்.
பாதுகாப்பு
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நான் மோனிஷ் கண்ணனை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். எனது காதல் குறித்து பெற்றோரி டம் தெரிவித்தேன்.அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, எனது விருப்பத்துக்கு எதிராக வேறு ஒருவரை கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
இதனால், நான் வீட்டை விட்டு வெளியேறி, ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டேன். எனவே எனக்கும்,எனது கணவர் மோனிஷ் கண்ணனுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
