கொல்கத்தா, நவ.2 நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணி சோனாலி பிபி-யின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கூறுகை யில் “சோனாலி பிபியை இந்தியாவுக்கு அழைத்து வர, கடந்த செப்டம்பர் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கர்ப்பிணிப் பெண் சோனாலி நாடு கடத்தப்பட்டது, வெறும் அதிகாரத்துவ கொடுமை மட்டுமல்ல, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியையும் அம்பலப்படுத்துகிறது.
பெங்கால் மற்றும் அதன் மக்களின் கருத்து மீதான தாக்குதல்தான் SIR பணியின் நோக்கம். இது பயத்தை ஆயுதமாக்க முயல்கிறது. சொந்தத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் குடிமக்களை அவமானப்படுத்துகிறது. மேலும் இந்த மாநிலத்தை வரையறுக்கும் சமூக கட்டமைப்பை உடைக்கிறது.
மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பாஜக-வின் கட்டளைப்படி இது நடைபெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம செய்திருந்தது. ஆனால், இது வழக்கமான சரிபார்ப்புப் பணிதான் என தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.
சோனாலி பிபி மற்றும் அவரது கணவர், 5 வயது குழந்தை டில்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து சோனாலி பிபி-யின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிர்பம் மாவட்டைச் சேர்ந்த முராராய் பகுதியில் இருந்து டில்லி சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனால், உயர்நீதிமன்றம் அவர்களை திரும்ப அழைத்து வர உத்தரவிட்டிருந்தது.
