பாட்னா, அக். 27– பீகார் சட்டமன்ற தேர்தலில் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கிறார். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா ஆகியோரும் வாக்கு சேகரிக்கிறார்கள்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணியில், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு (டிக்கெட்) பணத்துக்கு விற்கப்பட்டதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இது போன்ற அதிருப்தியை சரிக்கட்டவும், காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் வகுக்கவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீகாரில் முகாமிட்டுள்ளனர்.இந்தநிலையில் பீகாரில் 2 நாட்கள் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்யவுள்ளார். இதுபற்றி கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-
பீகாரில் விரைவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் தொடங்கும். ராகுல்காந்தி, 29 மற்றும் 30ஆம் தேதிகளில் பிரச்சாரம் செய்வார் என்று கருதுகிறேன். கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா ஆகியோர் பிரச்சாரம் செய்யும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அசோக் கெலாட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பு (டிக்கெட்) கிடைக்காதவர்கள் கோபம் அடைவது இயல்புதான். எனவே, தேர்தல் முடிவடையும்வரை அதிருப்தியை வெளிக்காட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பீகார் தேர்தல் சாதாரண விஷயமல்ல. இதை ஒட்டுமொத்த நாடும் கவனித்து வருகிறது. ஆணவமிக்க பா.ஜனதா கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும். சரித்திரம் படைக்கும் சூழ்நிலையில் இருப்பதை புரிந்து கொள்ளுமாறு கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன்.
முதலமைச்சர் நிதிஷ்குமார், அடிக்கடி பல்டியடித்து தனது நற்பெயரை கெடுத்துக் கொண்டார். ஒரு காலத்தில் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக கருதப்பட்டார். தற்போது, பீகார் மக்களுக்கு அவர் சலித்துப் போய்விட்டார். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமாக பலன் அடைந்த பா.ஜனதாவிடம் இன்னும் அந்த பணம் இருக்கிறது. அதை வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் ரூ.1 கோடி, ரூ.2 கோடி பரிமாற்றம் செய்தால் கூட அமலாக்கத்துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்புகிறது. ஆனால், பா.ஜனதா எந்த சிக்கலும் இன்றி பல கோடிகளை பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
