அய்ஸ்லாந்து மற்றும் அண்டார்ட்டிக்கா ஆகிய உலகின் இரு பகுதிகளில் மட்டுமே இதுவரை கொசுக்கள் காணப்படவில்லை என்ற நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. வழக்கமாக மிதமான அல்லது குளிரான வானிலை கொண்ட அய்ஸ்லாந்தில், சமீபத்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது புவி வெப்பமயமாதலின் நேரடி மற்றும் அச்சுறுத்தும் விளைவுகளில் ஒன்றாகும்.
வெப்பநிலையின் உயர்வு மற்றும் கொசுக்களின் வருகை: அய்ஸ்லாந்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, கொசுக்களின் இனப்பெருக்கத்திற்குத் தேங்கிய தண்ணீர் அவசியம். பொதுவாக அய்ஸ்லாந்தில் பெரியளவில் தேங்கிய நீரைப் பார்ப்பது அரிது. அதேபோல், பெரும்பாலும் அங்கு வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவானதில்லை. ஆனால், இந்த ஆண்டு நிலைமை மாறியுள்ளது. அய்ஸ்லாந்தில் வெப்பநிலை 26.6 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குளிரான வானிலையால் கொசுக்கள் காணப்படாத அய்ஸ்லாந்தில், வெப்பநிலை அதிகரித்ததே கொசுக்கள் இங்கு முதன்முதலாகக் காணப்பட முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வெப்பநிலை உயர்வால் ஏற்பட்ட தேக்க நீர், அல்லது வெப்பமான காற்றின் மூலம் இவை அய்ஸ்லாந்தை அடைந்திருக்கலாம். வழக்கமாக வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்த உயிரினங்கள், இனி அய்ஸ்லாந்து போன்ற குளிர் பிரதேசங்களிலும் வாழ்வதற்கான சூழல் உருவாகியிருப்பது, புவி வெப்பமயமாதல் நம் உலகின் சூழலியல் அமைப்பில் ஏற்படுத்தும் தீவிர மாற்றத்தை உணர்த்துகிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஒரு புதிய அபாயத்தை எச்சரிக்கிறது.
