அக்டோபர் மாதம் என்றால் அக்டோபர் புரட்சிதான் நினைவிற்கு வரும். பழைய ருசிய நாட்காட்டிப்படி அக்டோபர் புரட்சி என்பது இம்மாத 25ஆம் நாளாகும். புதிய (கிரிகோரியன்) நாட்காட்டியின்படி நவம்பர் 7 (1917).
மன்னராட்சி கையில் இருந்தது – மக்களாட்சியின் கையில் நாடு வந்த உலக வரலாற்றில் ஓர் உன்னத நாள்…!
இதே நவம்பர் 7ஆம் தேதிதான் (1928) தந்தை பெரியார் ‘The Revolt” (அதாவது தமிழில் ‘புரட்சி’ என்று பொருள்) என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
முதல் இதழிலேயே Religion And Slavery (மதமும் அடிமைத்தனமும்) என்ற கட்டுரையில் தந்தை பெரியார் இந்த இதழ் தொடங்கப்பட்டதன் நோக்கத்தைச் சாறு பிழிந்து கொடுத்துள்ளார்.
‘‘மதம் என்பது மனிதனின் சிந்தனையை அடிமைப்படுத்தும் கருவி. மதத்தால் உண்டாக்கப்பட்ட ஜாதி, அச்சம், பொய், நம்பிக்கை ஆகியவை மனிதர்களை சமத்துவத் தன்மையிலிருந்து வெளியேற்றுகின்றன. உண்மையான விடுதலை என்பது மதத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதில் தான் இருக்கிறது’’
‘பார்ப்பனர்கள் சமூகத்தின் மேலாதிக்கத்தை எப்படி நிறுவுகிறார்கள்’ என்பதை விமர்சித்துள்ளார்.
‘‘இது அறிவால் அல்லது திறமையினால் நங்கூரம் பாய்ச்சப்பட்டதல்ல!
இந்த ஒடுக்கு முறையை கல்வி மற்றும் சமவாய்ப்பு மூலம்தான் மாற்றியமைக்கப்பட முடியும்’’ என்று
‘தி ரிவோல்ட்’ இதழில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் தந்தை பெரியார்.
‘‘மனிதன் பிறக்கும் போதே சுதந்திரமானவன் தான்! ஆனால் சமூக மரபுகள்; மதச் சட்டங்கள், ஜாதிக் கட்டுப்பாடுகள் அவனை அடிமைப்படுத்துகின்றன. இதற்கு எதிராக நின்று தன்னம்பிக்கையுடன் வாழ்வதே சுயமரியாதை இயக்கம்!’’ என்று ‘தி ரிவோல்டின்’ முதல் இதழிலேயே, அதன் நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளார் தந்தை பெரியார்.
மனிதனுக்குத் தேவையான அந்த சுயமரியாதையை உண்டாக்க, ஓர் இயக்கமாகவே நடத்தினார். அந்த இயக்கத்துக்கு ‘சுயமரியாதை இயக்கம்’’ என்றும் பெயர் சூட்டினார். உலகில் இந்தப் பெயரில் ஓர் இயக்கம் இதுவரை ஏற்பட்டதில்லை – இயங்கியதும் இல்லை.
அதன் நூற்றாண்டு விழாவில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சமூகநீதி, பாலியல் நீதி ஆகியவற்றில் செப்பனிட்ட முறையில் செழுமையான விளைச்சலோடு தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் தன்னிகரற்ற தத்துவ ஆசான் தந்தை பெரியாரும், அவர்களால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமுமே தான்.
அதன் நூற்றாண்டு விழாவைத்தான் ‘அக்டோபர் புரட்சி’ என்ற பெருமை பெற்ற மாதத்திலேயே செங்கற்பட்டு – மறைமலை நகரில் சீரும் சிறப்புமாக திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
‘மழைவரும், மழை வரும்’ என்று வானிலை அறிவிப்பு அச்சுறுத்திக் கொண்டிருந்தது. ‘அதையும் ஒரு கை பார்த்திடுவோம்!’ என்ற துணிச்சலில் மாநாட்டை நடத்தினோம்.
இயற்கை சேட்டை செய்யவில்லை; சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு செம்மாந்த முறையில், ஒவ்வொரு அம்சத்திலும் நூறு விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாநாடாக ஒளிர்ந்தது.
இந்த மாநாட்டைப் பார்த்த பிறகு – திராவிடர் கழகம் இளைஞர்களின் பாசறையாக எழுச்சியுடன் நிமிர்ந்து நிற்பதைக் கண்ட நமது ‘திராவிட மாடல்’ அரசின் தகத்தகாய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் புளகாங்கிதம் அடைந்தார். தாய்க் கழகம் வலிமையுடன் இருந்தால்தானே சேய்் கழகத்திற்கும் பேரரணாக இருக்க முடியும்!
சமூக மாற்றத்திற்கான சாலைகளை அமைத்துக் கொண்டே போகிறது தாய்க் கழகம். ‘திராவிட மாடல்’ ஆட்சி வாகனத்தை விரைந்து ஓட்டிக் கொண்டே செல்கிறது சேய்க் கழகம் (தி.மு.க. ஆட்சி!).
இந்தியாவில் ஒரு சித்தாந்தப் போர் நடந்து கொண்டே இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். என்ற தாய் அமைப்பின் அரசியல் சேய் அமைப்பாக பா.ஜ.க. ஆட்சி அதிகாரப் பீடத்தில் இருக்கிறது.
சுயமரியாதை இயக்கம் சமத்துவ சமதர்மத்திற்கானது; சங்பரிவார் – பிஜேபி என்பதெல்லாம் பிறப்பில் பேதம் பேசும் பிற்போக்கு ஸநாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் பாசிசக் கொள்கையுடையது.
இந்த சித்தாந்தப் போரில் தமிழ்நாடு வென்று காட்டுகிறது! குறிப்பாக தென் மாநிலங்களில் தந்தை பெரியார் ஊட்டிய சித்தாந்தத் தாக்கத்தின் அனல் வீசிக் கொண்டு தான் இருக்கிறது.
வடக்கே ராமன் கோயில் கட்டப்படுகிறது. தெற்கே ‘பெரியார் உலகம்’ உருவாக்கப்படுகிறது! இது வெறும் கட்டடம், சிலை மட்டுமல்ல – தந்தை பெரியாரின் சித்தாந்தச் சீலத்தைப் பறைசாற்றும் சின்னமாகும்!
இது ஒரு சவாலான பெரும் பணிதான்; எனினும் தந்தை பெரியார் தொண்டினால் துவண்டு கிடந்த இனம் துளிர் விட்டு, காய்த்துக் கனி குலுங்கும் நற்சோலையாக மாற்றப் பெற்றிருக்கிறது. ‘நன்றி’ என்ற அந்த சொல்லுக்குள் ஆயிரம் சிங்கங்களின் பேராற்றல் அடங்கி இருக்கிறது.
அந்த நம்பிக்கையோடு புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள். நன்றியின் ஊற்றுப் பீறிடுகிறது! தங்கள் பங்களிப்பு அதில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கு பார்த்தாலும் பரவி நிற்பதைப் பார்க்க முடிகிறது.
இதில் இப்பொழுது ஒரு திருப்பம்! ஆம், மறைமலை நகரில் நடைபெற்ற திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவுரையாற்ற வந்த நமது முதலமைச்சர் தாய்க் கழகத்தின் இந்த அரும்பெரும் ‘பெரியார் உலக நிர்மாணத்துக்கு’ நம் பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும் என்ற உந்துதலில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்! ஆகா! அந்தத் தருணம் மகத்தானது!
தி.மு.க.வின் சார்பில் ‘முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்போம்’ என்பதுதான் அந்த குறிப்பிடத்தக்க பிரகடனம்!
அப்படி அறிவித்த 14ஆம் நாளில் (18.10.2025) முதலமைச்சரே சென்னைப் பெரியார் திடல் தாய்க் கழகத் தலைமை இடத்திற்கு முக்கிய பொறுப்பாளர்களுடன் வருகை தந்து, ‘‘மறைமலைநகரில் நான் அறிவித்ததோ! ஒன்றரைக் கோடி ரூபாய். இப்பொழுது அதைவிட இன்னும் கூடுதலாக ரூபாய் ஒரு கோடியே 70 லட்சத்து இருபதாயிரத்துக்கான காசோலை’’ என்று கூறி தாய்க் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் வழங்கினாரே – இந்த நாளும், இந்தத் தருணமும் என்றைக்கும் பசுமையாக எல்லோர் மத்தியிலும் மணமாகக் கமழ்ந்து கொண்டே இருக்கும்.
ஆட்சியில் இருக்கும் கட்சி தன் பங்களிப்பை அளித்திருக்கும் இந்த நற்செய்தி, நாடெங்கும் பரவும், நாட்டு மக்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிதி உதவிக்கரத்தை நீட்டுவார்கள் என்பதில் அய்யமில்லை!
வாழ்விலோர் திருநாள்
மறக்க முடியாத பொன்னாள்! – அந்நாள் – எந்நாளும்.
