சென்னை,அக். 20- சென்னை, அக்.20 தமிழ்நாட்டில் 24ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கருநாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் 24ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
