சிறீநகர், அக்.19 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை விரைவுப் படுத்தும் நோக்கத்தில் பாஜக-வுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக பிரித்து இரண்டையும் யூனியன் பிரதேசமாக அறிவித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய பாஜக அரசு உறுதி அளித்தபோதிலும், வழங்காமல் இழுத்தடிக்கிறது.
இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மாநில அந்தஸ்துக்காக பாஜக உடன் கூட்டணி வைக்கமாட் டோம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் நாடாளுமன்றத் திலும் உச்சநீதிமன்றத்திலும் அளித்த வாக்குறுதிகளிலும் ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வருவதைப் பொறுத்து மாநில அந்தஸ்து சார்ந் துள்ளது என்று ஒருபோதும் கூறவில்லை.
ஒருவேளை ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசு இருந்தால், மீண்டும் மாநில அந்தஸ்து இல்லை என்றால், பாஜக நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஜம்மு-காஷ்மீரில் பாஜக அல்லாத அரசாங்கம் இருக்கும் வரை, உங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று அவர்கள் எங்களிடம் சொல்ல வேண்டும். பின்னர் நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை முடிவு செய்வோம்.
தேசிய மாநாடு கட்சி, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது. 2015ஆம் ஆண்டு பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சியமைத்ததில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் இன்னும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த கூட்டணியில் ஜம்மு-காஷ்மீர் எப்படி சீரழிந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மற்றவர்கள் செய்த தவறை மீண்டும் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.
