ரேபரேலி, அக். 19 கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஹரிஓம் வால்மீகி (38 வயது) என்ற நபர் தனது உறவினரின் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது கும்பல் ஒன்றால் வழி மறிக்கப்பட்டார்.
வால்மீகி, திருட்டு கேங் -அய் சேர்ந்தவர் என குற்றம்சாட்டி அந்த கும்பல் சரமாரியாக அடித்துள்ளது. இதில் வால்மீகி உயிரிழந்தார். அடுத்தநாள் காலை கிராமத்தினரால் அங்கு அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காணொலி வைரலான நிலையில் திருட்டு வதந்தியின் பேரில் தாழ்த்தப்பட்ட சமூக நபர் அடித்துக் கொல்லப்பட்டது அம்மாநில அரசியலிலும் எதிரொலித்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலை வரும் ரேபரேலி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, நேற்று முன்தினம் (17.10.2025) காலை டில்லியில் இருந்து புறப்பட்டு ரேபரேலியில் உள்ள பதேபூர் கிராமத்திற்கு சென்று, வால்மீகியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில நாட்களுக்கு முன் அரியானாவில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அய்பிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். நான் அங்கு சென்றேன், இந்த குடும்பம் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர்களுக்கு எதிராக ஒரு குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களே குற்றவாளிகளைப் போலத் நடத்தப்படுகிறார்கள். அவர்களை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் நீதி மட்டும்தான். ‘எங்கள் மகன் கொல்லப்பட்டார். இந்த கொலை காட்சிப் பதிவாகியுள்ளது. எங்களுக்கு நீதி வேண்டும்…’ என்று கேட்கிறார்கள். இந்த குடும்பத்தில் பெண் இருக்கிறார், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும், ஆனால் அரசாங்கம் அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருப்பதால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோருக்கான எதிராக கொடுமைகள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சரிடம் (யோகி ஆதித்யநாத்) நான் கேட்பதெல்லாம், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் இறந்தவரின் குடும்பத்தை சந்தித்து, அவர்கள் சொல்வதைக் கேட்டேன். காங்கிரஸ் கட்சியும் நானும் அந்தக் குடும்பத்திற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். நாட்டில் எங்கெல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு எதிராகக் கொடுமைகள் நடக்குமோ, அங்கெல்லாம் காங்கிரஸ் இருக்கும், நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்வோம், நீதிக்காகப் போராடுவோம்.” என்று தெரிவித்தார்.
