சென்னை, அக்.18 தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளை யாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வழக்கமான நடைமுறையின்படி, ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது விளக்கத் திற்காக திருப்பி அனுப்பவோ வேண்டும். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை செய்யும் வகையில் அனுப்பி வைத்தார். இதற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என்றும் அதேவேளையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரி வித்துள்ளது.
கலைஞர் பல்கலை. மசோ தாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு பல்கலை. மசோதா வழக்கையும் சேர்த்து விசாரிக்க தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் ஹரிஷ்குமார் முறையீடு செய்தார். 2 வழக்குகளும் 17.10.2025 அன்று விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட் டனர்.
மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப் பட்டது.
மசோதாவுக்கு காலக்கெடு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, இதனை விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
தனக்கு பதவிக்காலம் இன்னும் 4 வாரங்களே இருப்பதால், அதற்கு முன்பாக இவ்வழக்கில் முடிவு தெரியும் எனவும் அவர் கூறினார்.