மதுரை, அக்.18 ஜாதிய ரீதியான பெயர்களை நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டுக்குரியது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
* முதற்கட்ட கள ஆய்வுப் பணியை மேற்கொள்ளலாம். ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக கருத்து கேட்பு, ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
* சாலைகள், தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கக்கூடாது.
* ஜாதிய ரீதியான பெயர்களை நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது.
* முன்னறிவிப்பு இன்றி செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படாதா? சாலைகள், தெருக்கள் பெயர் மாற்றுவதில் ஏற்படும் குழப்பங்கள் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.