எங்களைப் பொருத்தவரை, பெரியாரைப் பரப்புவதைவிட, பெரியாரைப் பாதுகாப்பதுதான் மிக முக்கியப் பணி!

7 Min Read

* கரூரில் ஏற்பட்ட சங்கடங்கள் போன்று பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நேரலாம் – அதை எதிர்கொள்ளக்கூடிய துணிவு வேண்டும்!
*ஓடி ஒளிகின்றவர் எப்படி பெரியாரின் பேரன் என்ற பாடல் வரிகளுக்குத் தகுதியாவார்?
*பெரியாரை சொன்னால்தான், மற்றவர்கள் வருவார்கள் என்பது இப்போதும் உறுதியாகி இருக்கின்றது!செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!

அரியலூர், அக்.16 கரூரில் ஏற்பட்ட சங்கடங்கள் போன்று பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நேரலாம். அது நியாயமானதா? தவறானதா? என்பதைவிட, அதை எதிர்க்கொள்ளக்கூடிய துணிவும், தன் கீழ் இருக்கக்கூடிய தொண்டர்களுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லு வதும் முக்கியமானதாகும்.  ஓடி ஒளிகின்றவர் எப்படி பெரியாரின் பேரன் என்ற பாடல் வரிகளுக்குத் தகுதி யாவார்? பெரியாரை சொன்னால்தான், மற்றவர்கள் வருவார்கள் என்பது  இப்போதும் உறுதியாகி இருக்கின்றது. எங்களைப் பொருத்தவரை, பெரியாரைப் பரப்புவதைவிட, பெரியாரைப் பாதுகாப்பதுதான் மிக முக்கியப் பணி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (15.10.2025) அரியலூருக்குச் சென்ற திராவி டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

திருச்சி அருகில் உள்ள சிறுகனூரில் காலத்தை வெல்லக்கூடிய ‘பெரியார் உலகம்’ என்ற மிகப்பெரிய ஓர் அறிவுலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை உலக மயமாகிக் கொண்டிருக்கின்றது.

‘‘உலகம் பெரியார் மயம்;
பெரியார் உலக மயம்’’

‘‘உலகம் பெரியார் மயம்; பெரியார் உலக மயம்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், நம்முடைய முதலமைச்சர் செப்டம்பர் மாதம் சென்று, தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்துவிட்டு வந்தார்.

ஆஸ்திரேலியாவில், வருகின்ற நவம்பர் 1 மற்றும் 2 ஆம் நாள்களில், ஆஸ்திரேலியா – பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பிலும், பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுகின்ற வகையில், மாநாடு நடைபெறவிருக்கின்றது.

அங்கே ஏற்படுகின்ற சில பிரச்சினைகளின்போது, ஜாதிய உணர்வு தலைதூக்குகின்ற கொடுமையை எதிர்த்தும் பிரச்சாரம் செய்வதற்கு பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

முதலமைச்சர் உள்பட எம்.பி.,
எம்.எல்.ஏ.,க்கள் ஒரு மாத ஊதியத்தை அளித்து வருகிறார்கள்!

ஆகவே, பெரியார் உலக மயமாகியிருக்கின்ற கார ணத்தினால்,  நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உள்பட, சட்டப்பேரவை தி.மு.க. உறுப்பினர்கள், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று, பெரியார் உலகத்திற்கு நன்கொடை என்று ஒரு மாத ஊதியத்தை அளித்து வருகின்றனர்.

நாடு தழுவிய அளவில், பெரியார் உலகத்தை அடித்த ளமாக்கும் திட்டம். இது ஒரு தனி நபர் முயற்சியோ, தனி அறக்கட்டளை முயற்சியோ அல்ல! அதைவிட பலமான பேராதரவு எங்கே இருக்கிறது என்றால், மக்களிடம் உள்ளது. அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளின் ஆதரவை அளித்த முதலமைச்சருக்கு நன்றி செலுத்துகின்றோம்.

அரியலூர் மாவட்டத் தோழர்களிடம்  பேசிக் கொண்டிருக்கும்போது, மாவட்டத் தலைவர் நீலமேகம், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சிவமூர்த்தி ஆகியோர் சேர்ந்து, அரியலூர் மாவட்டத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளிக்கின்றோம் – வாருங்கள் என்று சொன்னார்கள்.

அரியலூர் மாவட்டத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ.10 லட்சம்

இந்தக் குறுகிய காலமான ஒரு வார காலத்திற்குள்  10 லட்சம் ரூபாயைத் திரட்டி, முதல் தவணையாக அளித்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்மிடத்திலே, டாட்டாக்கள், பிர்லாக்கள், அம்பானி கள், அதானிகள் கிடையாது.

ஆனால், இதனுடைய நோக்கம் என்னவென்றால், எல்லோருடைய பங்களிப்பிலும் பெரியார் உலகம் உரு வாகிறது. தொகை முக்கியமல்ல; உணர்வுதான் மிக முக்கியம்.

ஆகவே, அதற்குரிய நிகழ்ச்சிக்காகத்தான் இன்றைக்கு இங்கே வந்திருக்கின்றோம். பெரியார் உலகம் நிதியளித்தமைக்காக தோழர்களுக்கு நன்றி!

தலைமறைவாக இருந்தவர்கள்
இப்போது வெளியே வருகிறார்களே!

செய்தியாளர்: கரூர் சம்பவத்தில் உச்சநீதிமன்றம் சி.பி.அய்.யிடம் அந்த வழக்கை ஒப்படைக்கச் சொல்லி யிருக்கிறது. அதுவரையில் தலைமறைவாக இருந்த அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்பட சிலர் வெளியே வந்திருக்கிறார்கள். நியாயமாக, சி.பி.அய்.யிடம் வழக்குப் போகிறது என்றால்தான், இன்னுங்கூடுதலாக தலைமறைவாக இருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லையே, அதற்கு என்ன காரணம்?

ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழு!

தமிழர் தலைவர்: சி.பி.அய்.யிடம் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கொடுத்தது எந்த வகையில் சரியானது? என்பது பல அரங்கங்களில் இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

காரணம், சட்ட ரீதியாக நான் வழக்குரைஞராக இருந்து சொல்கின்றேன். திராவிடர் கழகத் தலைவராக இருந்து மட்டும் சொல்லவில்லை.

ஒரு வழக்கில், ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது. அந்தக் கோரிக்கையில், காவல்துறையினர் விசாரணை யின்மீது நம்பிக்கை யில்லை; ஆகவே, சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அதுவும் யார் கேட்கிறார்கள் என்று சொன்னால், உயிரிழந்தவர்களின் சார்பில் பாதிக்கப்பட்ட நாங்கள் கேட்கிறோம் என்றார்கள்.

இப்போது அதிலும் பல பேர், ‘‘எங்களுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. ஏதேதோ சொல்லி எங்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டார்கள்’’ என்று சொல்லி, அந்த வகையில் மூன்று வழக்குகள் இருக்கின்றன. இது ஒரு பக்கத்தில்.

இன்னொரு பக்கத்தில், சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவு என்பது, உச்சநீதிமன்றத்தினுடைய அமர்வு என்ன சொல்லியிருக்கிறது? இதுவே இறுதியான முடிவு என்று கருதக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழு அமைத்து, இரண்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகளை அக்குழுவில் நியமித்திருக்கிறார்கள்.

இது ஒரு இடைக்கால ஏற்பாடுதான் என்று சொல்கிறார்கள். இடைக்காலத்தில், எந்த நீதிபதியாவது, பின்னாளில் சொல்லவேண்டிய தீர்ப்பை, முன்னாலேயே சொல்லியிருக்கிறார்களா?

அது எந்த அளவிற்கு நியாயத்திற்கு உள்பட்டது என்பதைவிட, சட்டப்படியே அது எவ்வளவு சரியானது?

நாளைக்கு, விசாரணையின்  முடிவுகள் வந்த பிறகு, ஏற்கெனவே தமிழ்நாடு அரசு சொன்னபடி சி.பி.அய். விசாரணை தேவையில்லை, என்று முடிவு வருமேயானால், அப்போது என்ன செய்வார்கள்? இதுபோன்ற கேள்விகள் இருக்கின்றன.

ஆங்கில ஏட்டின் அருமையான தலையங்கம்!

பிரபலமான ஓர் ஆங்கில நாளேடு இன்றைக்குத் தலையங்கம் எழுதியிருக்கிறது. ‘‘Flawed order: On the transfer of the Karur stampede case to the CBI’’ – தவறான உத்தரவு, சரியான உத்தரவு அல்ல என்று.

முதலில் சிரிப்பது என்பது முக்கியமல்ல; இறுதியில் சிரிப்பது யார் என்பதுதான் முக்கியம்.

அந்த ஆங்கில நாளேட்டின் தலையங்கத்தில்  ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

கரூர் பிரச்சினைக்குரியவராக இருக்கக்கூடிய அந்த நடிகர், அவருக்கு என்ன பொறுப்பு? பிரச்சாரக் கூட்டம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதுவும் கூறவில்லை.

கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டவுடன், அவசர அவசரமாக அந்த நடிகர் கரூரிலிருந்து உடனடியாகப் புறப்பட்டு, சென்னையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று தன்னை பாதுகாத்துக் கொண்டார்.

காவல்துறையினர் சொன்னார்கள், அதனால்தான் நான்  வந்துவிட்டேன் என்கிறார். உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கலாமே!

பாதிக்கப்பட்ட பகுதிக்கு வேகமாகச் சென்றவர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்!

ஆனால், கரூருக்கு உடனடியாக வேகமாகச் சென்றவர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். இரவு 8 மணிக்குத் தொடங்கிய முதலமைச்சரின் பணி, அடுத்த 12 மணிநேரத்தில் அவர் செய்த பணிகள் மிக அதிகம்.

இந்தப் பிரச்சினையை அரசியல் மூலதனமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தவர்கள், கூட்டணிக் கதவைத் திறந்து வைத்திருக்கின்றவர்கள் , ‘அவர் வருவாரா? இவர் வருவாரா? என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்கள். யாரும் வரவில்லை என்றவுடன், இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

இது எங்கே போய் முடியப் போகிறது என்பதுதான் மிகவும் முக்கியம்.

எப்போது பொதுவாழ்க்கைக்கு வந்தோமோ, அப்போதிலிருந்தே கலைஞரோ, அண்ணாவோ, தந்தை பெரியாரோ, திராவிடர் கழகத்துக்காரர்களோ மற்றவர்களோ ஒளிந்துகொள்வது கிடையாது.

அதற்கு உதாரணம், பல ஆண்டுகாலம் முன்பு நெருக்கடி நிலை காலத்தில், எங்களையெல்லாம் கைது செய்கிறார்கள். கலைஞர் வீட்டிற்குச் சென்று, ‘‘எங்கே ஸ்டாலினை ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்கிறார்கள்.

‘‘நான் ஒளித்து வைக்கவில்லை; கூட்டத்தில் பங்கேற்க வெளியூர் சென்றிருக்கின்றார். அவர் வந்ததும், நானே கொண்டுவந்து ஒப்படைக்கிறேன்’’ என்று சொன்னார்.

பதுங்குவதோ, ஓடுவதோ, ஒளிந்துகொள்வதோ திராவிட இயக்கத்தில் இல்லை!

ஆகவே, பதுங்குவதோ, ஓடுவதோ, ஒளிந்துகொள்வதோ என்பது திராவிட இயக்கத்திற்குச் சம்பந்தப்பட்டதே  கிடையாது.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள், சங்கடங்கள் நேரலாம். அது நியாயமானதா? தவறானதா? என்பதைவிட, அதை எதிர்க்கொள்ளக்கூடிய துணிவும், தன் கீழ் இருக்கக்கூடிய தொண்டர்களுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லுவதும் முக்கியமானதாகும். கட்டுப்பாடு உள்ள ஓர் அமைப்பாக உருவாக்குவதற்குப் பதிலாக, கட்டுபாட்டை இழந்ததை நியாயப்படுத்தக் கூடிய அளவிற்குச் சென்றால், இது அவருடைய கட்சிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பொதுவாழ்க்கைக்கும், பொது ஒழுக்கத்திற்குமே விரோதமானதாகும்.

ஓடி ஒளிகின்றவர் எப்படி பெரியாரின் பேரன் என்ற பாடல் வரிகளுக்குத் தகுதியாவார்?

செய்தியாளர்: த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படப் பாடலில், பெரியாரின் படத்தைப் பயன்படுத்துகிறார்; பெரியாருடைய பேரன் என்று சொல்கிறார்.  ஓடி ஒளிகின்றவர் எப்படி பெரியாரின் பேரன் என்ற பாடல் வரிகளுக்குத் தகுதியாவார்?

பெரியாரைப் பரப்புவதைவிட, பெரியாரைப் பாதுகாப்பதுதான் மிகவும் முக்கியம்!

தமிழர் தலைவர்: பல பேர், சரக்குகளைத் தயார் செய்து, சரக்குகள் எப்படி இருந்தாலும், ரகசியமாக வேறு லேபிளை ஒட்டிவிடுவார்கள்.

ஆகவே, லேபிள் ஒட்டுபவர்களே தவிர, இவர்கள் கொள்கைக்காரர்கள் கிடையாது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

பெரியாரை சொன்னால்தான், மற்றவர்கள் வருவார்கள் என்பது உறுதியாகி இருக்கின்றது.

அதனால், எங்களைப் பொருத்தவரை, பெரியாரைப் பரப்புவதைவிட, பெரியாரைப் பாதுகாப்பதுதான் மிக முக்கியப் பணி என்று பணியாற்றுபவர்கள்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *