அய்.டி. தொழிலாளர்கள் மீதான ஈவிரக்கமற்ற கார்ப்பரேட் தாக்குதல் ஒரே காலாண்டில் 38,000 ஊழியர்களை வெளியேற்றிய டிசிஎஸ்!

4 Min Read

மூன்று மாநில தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம்

சென்னை, அக். 14 – நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ஒரே காலாண்டில் 38,255  ஊழியர்களை சட்ட விரோதமாக வெளியேற்றியுள்ளது. இதன்மூலம் டிசிஎஸ் நிறுவனம், இந்திய அய்.டி.  துறையில் மனிதாபிமானமற்ற பணி நீக்கத்தின்  மோசமான புதிய அத்தியாயத்தை எழுதியுள் ளது என்று தமிழ்நாடு, கருநாடகம், கேரளத்தைச் சேர்ந்த அய்.டி. தொழிலாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

கருநாடக அய்.டி. ஊழியர் தொழிற் சங்கத்தின் (KITU) பொதுச் செயலாளர் சுஹாஸ் அடிகா, கேரள அய்.டி. ஊழியர் சங்கத்தின் (AITE) பொதுச் செயலாளர் ஏ.டி. ஜெயன், தமிழ்நாடு அய்.டி. ஊழியர் சங்கமான யுனைட் (UNITE) தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கின்  ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இது வெறும் பணி நீக்கம் அல்ல – இது தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற கார்ப்பரேட் தாக்குதல்” என்று கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

டிசிஎஸ் நிறுவனம் கடந்த 9.10.2025 அன்று வெளியிட்ட இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகள், தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக எச்சரித்து வந்த கொடூரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. மொத்தப் பணியாளர் எண்ணிக்கையில் 19,755 பேர் குறைந்துள்ளனர். புதிதாக நிய மிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் கணக்கிடும்போது, சுமார் 38,000 தொழி லாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதே  காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 65,799 கோடி  என்ற மிகப் பெரும் வருவாயை ஈட்டியுள்ளது. “ஒரு காலாண்டில் இத்தனை பெரிய வருமானத்தைச் சம்பாதித்துவிட்டு, பல்லாயிரக் கணக்கான குடும்பங்களை தெருவில் தள்ளுவது என்பது மன்னிக்க முடியாத குற்றம்” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை தலைவர் வெளியிட்ட அறிக்கையில், 38,255 விலகல்களில் வெறும் 6,000 பேர் மட்டுமே கட்டாய பணி நீக்கம் என்றும், மீதமுள்ள 32,255 பேர் “தானாக” விலகியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.  “இது அப்பட்டமான பொய். 32,000 பேர் ஒரே காலாண்டில் தானாக விலகுவார்களா? இந்த ஊழியர்கள் மீது கொடூரமான உளவியல் சித்ரவதையும், அச்சுறுத்தலும் பிரயோகிக்கப்பட்டு, பணி விலகல் கடிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. இது இந்திய அய்.டி. துறையில் இதுவரை நடந்திராத மிகக் கொடிய தாக்குதல்” என்று தொழிற்சங்கங்கள் கொதிப்புடன் தெரிவித்துள்ளன.

சித்ரவதை முகாம்களாக  மாறிய அலுவலகங்கள்

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர்களிடமிருந்து வந்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் காலையில் அழைக்கப்பட்டு, மதிய உணவு நேரத்துக்குள் பணி விலகல் செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளனர். புதிய திட்டங்களுக்கான நேர்காணல்களில் வெற்றி பெற்ற ஊழியர்களை, மனிதவளத் துறையினர் வேண்டுமென்றே மறுத்து, நிலுவையில் வைத்துள்ளனர். தீவிர உடல்நலப் பிரச்சினைகளுடன் சிகிச்சை பெற்று வந்த ஊழியர்கள் கூட, உட னடியாக பணிக்கு வரவேண்டும், இல்லையென்றால் வேலை நீக்கம் என மிரட்டப்பட்டுள்ளனர். மகப்பேறு விடுப்பில் உள்ள தாய்மார்களும், குழந்தை பிறந்து திரும்பிய பெண்களும் அலுவலகத்துக்கு வர கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். மறுத்தால் வேலையை விட்டு வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளனர். “பெண் தொழிலாளர்கள் மீதான இந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது” என்று சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பணி விலகல் செய்ய மறுத்தவர்களுக்கு, “எதிர்காலத்தில் எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காமல் பார்த்துக் கொள்வோம்” என்று நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  பிரிவுக் கூட்டங்களின்போது ஊழியர்களின் செல்பேசிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதன் நோக்கம், வற்புறுத்தலுக்கான ஆதாரங்களைச் சேகரிக்க விடாமல் தடுப்பதே எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“தாராளமான பணி நீக்கத் தொகை வழங்குகிறோம்” என்ற டிசிஎஸ் நிறுவனத்தின் அறிவிப்பும் பொய் என்று அம்பலமாகியுள்ளது. தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கிய பின்னரே இந்த அறிவிப்பு வந்தது. ஆனால், பெரும்பாலான ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட மூன்று மாத ஊதியம் கூட கிடைக்கவில்லை. பலர் ஒரு பைசா கூட இல்லாமல் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

சட்டத்தை மீறிய குற்றத்தை ஒப்புக்கொண்ட டிசிஎஸ்

“6,000 பேரை கட்டாயப் பணி நீக்கம் செய்ததை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டதன் மூலம், டிசிஎஸ் நிறுவனம் தொழில்துறை தகராறுகள் சட்டத்தை மீறிய குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டது” என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் தொழிற்சங்கங்கள், தொழில்துறை தகராறுகள் சட்டத்தின்படி, பெரிய அளவிலான பணி  நீக்கத்துக்கு முன்பு சரியான நடை முறைகளைப் பின்பற்ற வேண்டும், அரசாங்க அனுமதி பெற வேண்டும். இவை எதுவும் செய்யாமல் சட்டத்தை மீறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய – மாநில  அரசாங்கத்தின் மவுனம்

“இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் மவுனம் குற்றமானது. அய்.டி. நிறுவனங்ளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று  நாங்கள் பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். ஆனால், அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் சேவக வேலை மட்டுமே செய்கின்றன” என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். “தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மறுப்பதன் மூலம், அரசுகள் கார்ப்பரேட் கொள்ளைக்கு துணை போகின்றன. இது  ஏற்றுக்கொள்ள முடியாதது. உடனடியாகத் தலையிட்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும் பணி நீக்கங்கள் வருமா?

வருகிற காலாண்டுகளில் மேலும் பெரிய அளவில் பணி நீக்கங்கள் நடக்கலாம் என்ற அச்சம் டிசிஎஸ் ஊழியர்களிடையே பரவியுள்ளது. “இந்த அநீதியை எதிர்கொள்ள ஒரே வழி – தொழிற்சங்கத்தில் இணைவதுதான். ஒற்றுமையாகப் போராடினால் மட்டுமே நம் உரிமைகளைக் காப்பாற்ற முடியும்” என்று மூன்று தொழிற்சங்கத் தலைவர்களும் ஒரே குரலில் அழைப்பு விடுத்துள்ளனர். “எல்லா அய்.டி. ஊழியர்களும், குறிப்பாக டிசிஎஸ் ஊழியர்கள், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்த முன்வர வேண்டும். தொழிற்சங்கத்தில் இணைந்து போராடுங்கள். நமது வாழ்வாதாரத்தையும் கண்ணியத்தையும் காப்போம்” என்று அவர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *