கரூர், அக்.14- கரூர் சம்பவத்தில் சி.பி.அய். விசாரணை கோரி தங்க ளுக்குத் தெரியாமல் வழக்கு தொட ரப்பட்டதாக பாதிக்கப்பட்ட 2 குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கூட்ட நெரிசல் சம்பவம்
கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரி தாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வு குழுவினர் கடந்த 5 ஆம் தேதி முதல் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதற்கி டையே, இந்தவழக்கை சி.பி.அய். விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை சி.பி.அய். விசாரணைக்கு மாற்றி நேற்று (13.10.2025) உத்தர விட்டது.
இந்த நிலையில் கூட்ட நெரி சலில் உயிரிழந்த கரூர் அருகே ஏமூர் புதூரைச் சேர்ந்த சிறுவன் பிரித்திக்கின் (வயது 10) தாயார் ஷர்மிளா கூறுகையில், ‘நானும், பன்னீர்செல்வமும் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். பிரித்திக்கின் உடல் அடக்கம் செய்யும் இடத்திற்கு கூட பன்னீர்செல்வம் வரவில்லை. ஆனால் எனக்கு தெரி யாமல் அவர் உச்சநீதிமன்றத்தில் சி.பி.அய். விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்’ என்றார்.
இலவச சட்ட உதவி
இதேபோல் நெரிசலில் உயிரி ழந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்திராவின் கணவர் செல்வராஜ் கூறுகையில், ‘எனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வழக்குரைஞர்கள் கையெழுத்து வாங்கினர். ஆனால், உச்சநீதிமன்றத்தில் சி.பி.அய். விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து தாமதமாகவே தெரியவந்தது’ என்றார்.
இந்த நிலையில் பிரித்திக் கின் தாய்ஷர்மிளா, ஷர்மிளாவின் சகோ தரர் சந்துரு மற்றும் உயிரிழந்த சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோர் நேற்று (13.10.2025) கரூர் அய்ந்து ரோடு பகுதியில் உள்ள இலவச சட்ட உதவி மய்யத்திற்குச் சென்றனர்.
அங்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான அனுராதாவிடம், கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தங்களது தரப்பில் வாதாட வழக்குரைஞர் கோரி மனு கொடுத்தனர்.