ஒ |
ரு நூற்றாண்டுக்கு முன், இந்திய மண்ணில் மூன்று தத்துவங்கள் உருவாயின. ஒன்று, தெற்கிலிருந்து உதித்தது. மற்றொன்று வடக்கிலிருந்து வந்தது. மூன்றாவது, உலகளாவியப் பார்வையுடன் நம் மண்ணுக்குள் வந்தது. முதல் தத்துவம், சமூக நீதி. அதை முன்வைத்தது சுயமரியாதை இயக்கம். இரண்டாவது தத்துவம், இந்துத்வா. அதை முன்னெடுத்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். மூன்றாவது தத்துவம், பொதுவுடைமை. சோவியத் நாட்டில் நடந்த புரட்சியின் விளைவால், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானது.
அனைவருக்குமான உரிமையை முன்னிறுத்தியது சுயமரியாதை இயக்கம். அனைவருக்குமான உடைமையை முன்வைத்தது பொதுவுடைமை இயக்கம். இவை இரண்டுக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவை நட்புமுரணாகவே இருந்தன. இந்த இரண்டு இயக்கங்களுக்கும் நேரெதிரானதும், மனித சமுதாயத்திற்கே பகை முரணாகவும் விளங்குவதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.
பிறப்பால் மனிதர்களை உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்று பிரித்துப் பார்க்கும் ஸநாதன-வருணாசிரமக் கோட்பாட்டைக் கொண்ட-மதவாத அரசியலுக்கான அடித்தளம்தான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம். அது ஈன்ற குட்டிதான், இன்று இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்யும் மதவாத அமைப்பான பா.ஜ.க.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தன் அதிகாரத்தைச் செலுத்தும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கூட்டத்திற்கு இன்றளவும் No Entry பகுதிகளாக இருப்பவை சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்யும் தமிழ்நாடும், பொதுவுடைமைத் தத்துவ வழியில் அரசியல் செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் கேரளாவும்தான்.
இந்த இரண்டு தத்துவங்கள் வழி வந்த அரசியல் இயக்கங்களும் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் ஓரணியில் நிற்கின்றன. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கு சவாலாக இருக்கின்றன. அதிலும், பொதுவுடைமைத் தத்துவத்தின் வழி ஆட்சி நடத்தி, சோவியத் யூனியனை வல்லரசாக்கிய தலைவரின் பெயர் கொண்ட சுயமரியாதை இயக்க வழிவந்த திராவிட அரசியல் பேரியக்கத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்றாலே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது.
தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த மானமிகு கலைஞர்
தன்னை ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று வெளிப்படுத்தியவர் தமிழ்நாட்டை அதிகக் காலம் ஆட்சி செய்த முதலமைச்சரான முத்தமிழறிஞர் கலைஞர். அய்ந்து முறை அவர் மாண்புமிகு முதலமைச்சராக இருந்த போதும், மானமிகு என்கிற சுயமரியாதை உணர்வையே தன் அடையாளமாகக் கருதியவர். அவரது மகனும், கொள்கை வாரிசுமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பாவுக்குத் தப்பாமல் செயல்படுவதால், Stalin is more dangerous than Karunanidhi என்று ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை அலறவிடுகிறார். இதுதான் நூற்றாண்டு கால சுயமரியாதை இயக்கத்தின் மீதான மதிப்பீடு.
சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய தந்தை பெரியார் சொன்னதுபோல, எதிரிகள்தான் நமக்கான விளம்பரத் தூதுவர்கள். எதிரிகள்தான் நம் புகழை எல்லாத் திசையிலும் பரப்புகிறவர்கள்.
தந்தை பெரியார்-அன்னை மணியம்மையார் ஆகியோருக்குப் பிறகு, திராவிடர் கழகத்தை வலிமை குன்றாமலும் வளரும் தலைமுறையினருக்கேற்ற வேகத்துடனும் தலைமையேற்று வழிநடத்தும் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நடைபெற்றது மிகச் சிறப்பும் பொருத்தமும் வாய்ந்த வரலாற்று நிகழ்வாகும்.
செங்கல்பட்டில் முதல் மாகாண மாநாடு
பெரியார் அவர்கள் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு செங்கல்பட்டில் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதே செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகரில் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு 2025 அக்டோபர் 4ஆம் நாள் சனிக்கிழமையன்று எழுச்சியுடன் நடந்தது.
திராவிடர் கழக மாநாட்டின் சிறப்பு!
திராவிடர் கழகத்தின் எந்தவொரு மாநாடாக இருந்தாலும் கருஞ்சட்டைப் பட்டாளத்தினரின் ராணுவத்திற்கு இணையான கட்டுப்பாடு மிக்க பணிகள், அனைத்து அமைப்புகளுக்கும் பாடமாக அமைபவை. மாநாட்டு ஏற்பாடுகளை ஒரு மாத காலத்திற்கு மேலாகத் திறம்பட மேற்கொண்டு, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு வகையிலான பரப்புரைகளை நடத்தி, மக்களிடம் கொள்கை விழிப்புணர்வை ஏற்படுத்திய திராவிடர் கழகத் தோழர்கள், நவம்பர் 3ஆம் தேதி இரவே தங்கள் குடும்பத்துடன் புறப்பட்டு, கொள்கை குடும்பத்தினருடன் கலந்து, பேருந்து – வேன் போன்ற வாகனங்களில் மாநாட்டுக்குப் புறப்பட்டு வந்த காட்சி, ஒரு கொள்கைத் திருவிழாவின் அற்புதமான அடையாளமாக அமைந்தது.
நவம்பர் 4 அன்று காலையில் 60 அடி உயரக் கம்பத்தில் ஆசிரியரின் கொடியேற்றம், பெரியார் சமுகக் காப்பு அணியின் ராணுவ மிடுக்
குடனான அணிவகுப்பு, 102 வயது கருஞ்சட்டை வீரர் பொத்தனூர் சண்முகம் முதல் கருப்புடை அணிந்த கைக்குழந்தைகள் வரையிலான கொள்கைக் குடும்பத்தினரின் வரவேற்பு என உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கிய போதே, அடுத்தடுத்த நிகழ்வுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.
மாநாட்டைத் திறந்து வைத்த தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ஆ.இராசா அவர்களின் உரையும், அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்களின் உரையும் இரு தத்துவங்களின் நட்புமுரணை வரலாற்று நோக்கில் முன்வைத்து, பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்கிற சிந்தனையைத் தூண்டின. வி.சி.க தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் சமூக நீதிப்பார்வையிலான எழுச்சியுரை, மனிதநேய மக்கள் கட்சியின் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்களின் கருத்துரை ஆகியவை இந்தியா இன்று பாசிசக் கொடுங்கரத்தின் பிடியில் இருப்பதையும் சுயமரியாதைக் கொள்கையால் தமிழ்நாடு தனித்துவமாக இருப்பதையும் எடுத்துரைத்தன.
மதிய உணவுக்குப் பிறகு தொடங்கிய கருத்தரங்கை திராவிடர் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி தொடங்கிவைக்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. நிறைவு செய்தது, சுயமரி யாதை இயக்கம் முன்வைத்த பெண்ணுரிமையின் விளைவாக அமைந்தன.
புதிய அத்தியாயம் படைத்த பேரணி
கருஞ்சட்டையினரின் கொள்கை முழக்கத்துடனான ஊர்வலம் மாலையில் மறைமலைநகரில் புதிய அத்தியாயத்தைப் படைத்து, மாநாட்டுப் பந்தலை அடைந்தது. மாநாட்டில் சிறப்புரையாற்ற வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பெரியார் சமுகக் காப்பு அணியின் அணிவகுப்பு மரியாதையுடனும், உணர்ச்சி முழக்கங்களுடனும் வரவேற்பளிக்கப்பட்டது.
தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் நிகழ்வுகளில் தி.மு.க. தலைவரான முதலமைச்சர் எப்போதுமே கூடுதல் உற்சாகத்துடன் பங்கேற்பது வழக்கம். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா என்பது தாய்க் கழகத்தின் தாய் இயக்கத்தின் விழா. அதாவது, பாட்டி வீட்டு விழா.
பாட்டி வீட்டுக்குச் செல்வதென்றால் எல்லாருக்குமே பிடிக்கும். அது நமக்கு சுதந்திரமான இடம். உரிமையோடு கேட்டுப் பெறுகின்ற இடம். வீட்டில் எங்கு வேண்டுமானாலும் விருப்பப்படி செல்லலாம். அங்கே உள்ள சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பழைய படங்களின் மூலம் நம் முன்னோர்கள் யார், நாம் அன்று எப்படி இருந்தோம், இன்று எப்படி இருக்கிறோம் என்று ஒப்பிட முடியும். நம் வளர்ச்சியை சரியாக அளவிட முடியும். இழந்தவற்றை மீட்கவும், புதியவற்றை அடையவும் சிந்தனையைக் கிளறும் பாட்டி வீடு போல, சுயமரியாதை இயக்க மாநாட்டில், தாய்க் கழகத்தின் தலைவரான ஆசிரியர் அய்யா அவர்களுடன் பங்கேற்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வரலாற்றுக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
வரலாற்றுக் கண்காட்சி – ஓர் அரிமா நோக்கு!
அரிமா நோக்கு என்று சொல்வார்களே, காட்டில், தான் பயணித்த பாதையைப் பெருமையுடன் திரும்பிப் பார்க்கும் சிங்கம் போல திராவிட இயக்கம் தன்னுடைய ஒரு நூற்றாண்டு காலத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் வரலாற்றுக் கண்காட்சி அமைந்திருந்தது..
சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பலவும் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன. சுயமரியாதை திருமணத்திற்கு அறிஞர் அண்ணா சட்டவடிவம் கொடுத்தார். குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்ற சட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றினார். காவல்துறையில் பெண்கள் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் உயர்கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் நிலை உருவாகியிருக்கிறது. ஆண்களின் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டங்கள் ஒழிந்து, ஆண்-பெண் இருவருடைய பெயருக்குப் பின்னாலும் ஒன்றுக்கு இரண்டு மூன்றாக அவர்கள் படித்து வாங்கிய பட்டங்கள் போடப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அனைத்து சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் வாழக்கூடிய சமத்துவபுரங்கள் தந்தை பெரியாரின் பெயரிலே அமைக்கப்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. இந்த இலக்கை எளிதாக அடைந்து விடவில்லை. இலக்கும் இன்னும் முழுமையாக நிறைவடைந்துவிடவில்லை. இந்த இலக்குகளுக்கு நேர் எதிரான ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் அதிகார பலத்துடன் சண்டையிட வேண்டிய களமாக அரசியல் சூழல் அமைந்திருக்கிறது. ஆரிய-திராவிட யுத்தம் தொடர்கிறது. அதுதான் ஆசிரியரின் தலைமையுரையும், முதலமைச்சரின் விழாப் பேருரையும் விடுத்த செய்திகளாகும்.
கொள்கை எதிரிகள் பற்றி ஆசிரியர்
“பெரியாரின் கொள்கை வழியில் நின்று தமிழ்நாட்டை தலைகுனிய விடமாடோம் என்பதில் உறுதியாக இருக்கும் முதலமைச்சருக்கு ஆயிரம் முத்தங்கள்” என்ற ஆசிரியர் அவர்கள், கொள்கை எதிரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை விளக்கி, பெரியார் கொள்கைகள் மூலம் அதனை வெல்லமுடியும் என்பதை உணர்த்தி, “2026இல் உங்களை மீண்டும் கோட்டைக்குள்ளே அனுப்புவதுதான் எங்கள் வேலை. உங்கள் வேலை Entry. எங்கள் வேலை Sentry’’ என்றபோது, ஆசிரியருக்கு வயது 92ஆ, 29ஆ என முதலமைச்சர் உள்பட எல்லாரும் வியந்தனர்.
மாண்புமிகு முதலமைச்சர் தன் பேச்சிலும் ஆசிரியரின் வயதையும் அவரது அயராத உழைப்பையும் கொள்கை உணர்வையும் பாராட்டியதுடன், “கருப்புச் சட்டைக்காரர்கள், காவலுக்கு கெட்டிக்காரர்கள். ஒரு கருப்புச்சட்டைக்காரர் ஓர் ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர்” என வர்ணித்து, திரண்டிருந்த திராவிடர் கழகத் தோழர்களைப் பார்த்து, “கருப்புச்சட்டைக்காரர்களுக்கு ஒரு சல்யூட்” என்றபோது மாநாட்டுப் பந்தல் உணர்வலையால் அதிர்ந்தது.
ஒரு நூற்றாண்டு காலத்தில் பெரியார்-அண்ணா-கலைஞரால் தமிழ்நாடு அடைந்த முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட முதலமைச்சர், “நம்மை ஒரு நூற்றாண்டுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல நுணுக்கமாகவும், தீவிரமாகவும் முயற்சி நடக்கிறது’’ என்று பாசிச சக்திகளின் செயல்பாடுகள் குறித்த எச்சரிக்கையை விடுத்து, “வரப்போவது அரசியல் தேர்தல் கிடையாது. தமிழ்நாடு தன்னை காத்துக்கொள்ள வேண்டிய தேர்தல்” என்று திராவிட மாடல் 2.0வுக்கு கட்டியம் கூறினார்.
தன்னுடைய ஒரு மாத ஊதியம் உள்பட, தி.முக.. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தையும் சேர்த்து ஒரு கோடியே அய்ம்பது இலட்ச ரூபாயை திருச்சி சிறுகனூரில் அமைகின்ற பெரியார் உலகத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழங்குவதாக முதலமைச்சர் உறுதியளித்தபோது பெரும் கைத்தட்டல் எழுந்தது.
பெரியாரை உலக
மயமாக்குவோம்
மயமாக்குவோம்
‘பெரியாரை உலக மயமாக்குவோம் – உலகைப் பெரியார் மயமாக்குவோம்’ என்ற ஆசிரியரின் இலட்சியம் நிறைவேறத் துணை நிற்போம் என்று கூறிய முதலமைச்சர், “பெரியார் திடல்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை இயக்குகிறது’‘ என்றபோது, ஒரு நூற்றாண்டு காலத் தத்துவத்தின் வலிமையையும் அதன் இன்றையத் தேவையையும் உணர முடிந்தது.