இந்துத்துவாவின் உடலரசியல்!

– ஜமாலன் –

(இக்கட்டுரையின் முதல் பகுதி 7.8.2025 நாளிட்ட ‘விடுதலை’, 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது).

காந்தி கொல்லப்பட்டப் பிறகு,  அவ்வமைப்பைத் தடை செய்ய அரசு கூறிய காரணம் “சங் அமைப்பினர்கள் விரும்பத்தகாத அல்லது அபாயகரமான செயல்களில் ஈடுபடுகின்றனர், ராஷ்டீரிய சுயம்சேவக் சங்கின் தனிப்பட்ட உறுப்பினர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தீ வைப்பு, திருட்டு, கொள்ளை, கொலை போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதாகவும், சட்டவிரோதமாக ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் சேகரிப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. பயங்கரவாத முறைகளில் ஈடுபடு மாறும், ஆயுதங்களைச் சேகரிக்குமாறும், அரசுக்கு எதிராக அதிருப்தியை உண்டாக்குமாறும், காவல்துறையையும், ராணுவத்தையும் தவறு செய்யத் தூண்டுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தும் துண்டறிக்கைகளை விநியோகிப்பதும் தெரிய வந்தது. இந்தச் செயல்பாடுகள் ரகசியமாக நடக்கின்றன; சங் அமைப்பையும், அதன் கூட்டுச் செயல்பாட்டுத் திறமையையும் எப்படிக் கையாள்வது என அரசு அவ்வப்போது சிந்தித்து வருகிறது.” (பிப். 4, 1948 அன்று ஆர்.எஸ்.எசைத் தடை செய்து அரசு வெளியிட்ட செய்தி. (2022, 641)) ஆளும் அரசதிகாரத்தைப் பெற்ற, இன்றுவரை மேற்கூறிய காரணங்கள் எதுவும் மறுக்கப்பட முடியாத நிலையில்தான் அந்த அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. அதன் நோக்கம் அரசோ, அதிகாரமோ அல்ல, ஒட்டுமொத்த உலகையும் தனது தலைமையில் அதாவது ‘விஷ்வ குருவாக’ இருந்து உலகைப் ‘‘பார்ப்பன ஸநாதன வருண தர்மத்திற்கு’’ அடிமையாக ஆக்க வேண்டும் என்பதே! அது இந்த உலகை ‘வசுதேவ குடும்பம்’ என்று கூறுவதில் வெளிப்படுவது உலகளாவிய அதிகாரத்திற்கான உடலரசியல் வேட்கையையே!

இவ்வமைப்பு துவக்கப்பட்டதே பிரித்தானிய இந்தியாவில் உருவான – குறிப்பாக மகாராட்டிராவில் ஜோதிராவ் பூலே, அம்பேத்கராலும், தென்னிந்தியாவில் உருவான நீதிக்கட்சி, பெரியாரால் ஏற்பட்ட தலித் எழுச்சி, பிற்படுத்தப்பட்டோர் விழிப்புணர்வு ஆகியவற்றின் பார்ப்பனிய எதிர்ப்பில் அச்சமுற்ற படித்த மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது. இந்த சித்பவன் பார்ப்பனர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து கொங்கன் பகுதியிலும், பிற்காலத்தில் சிவாஜியின் அரசில் பூனாவிலும் குடியேறியவர்கள். இங்குள்ள பூர்வீக ஆரிய வந்தேறிகளான  பார்ப்பனர்களோடு தொடர்பற்ற பிற்காலக் குடியேறிகள்! மராட்டியில் இவர்கள் சிவாஜிக்குப் பிந்தைய அரசில் பேஷ்வாக்களாக மாறி அதிகாரத்தில் அமர்ந்து மநு மற்றும் ஸநாதன வருண தருமத்தைக் கொண்டு ஆட்சி நடத்தியவர்கள்.  இவர்கள் அவுரங்கசீப் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்தார்கள்.  பின்னால் பிரித்தானிய குடியேற்ற அரசில் மநு தருமத்தை மீறி கடல்தாண்டிச் சென்று ஆங்கிலக் கல்வி பயின்று தங்களை ஒரு மேட்டிமையாளராக, மத்திய தரவர்க்க அறிவாளிகளாக வளர்த்துக் கொண்டு பிரித்தானிய அரசில் தொண்டூழியும் புரிந்து அதிகாரத்தைத் திரும்ப பெற்றார்கள். இந்த சூழலில் இவர்கள் கண்ட நவீன அரசியல் கருத்தியலே ‘இந்து மதம்’ என்பதும், அதன் இந்திய தேசிய இனம் என்ற பொருளில் உருவாக்கிய இந்துத்துவா உடலரசியலும்!

ஆர்.எஸ்.எஸ்.சும்
உடலை ஒழுங்குறுத்துதலும்

1925 இல் நாக்பூரில் இருந்த ‘அகாரா’க்கள் (Akharas) எனப்படும் உடற்பயிற்சிக் கூடங்களில் மற்றும் வியாயாஸாலா (Vyayamshalas) எனப்படும் மல்யுத்தப் பயிற்சி நிலையங்களில் (2008, 6) தேர்ந்தெடுக்கப்பட்ட பலம் கொண்ட இளைஞர்களை இணைத்து ‘ஷாகா’ எனப்படும் தினசரிப் பயிற்சியின் வழியாக உருவாக்கியவர் மிருக வைத்தியரான மருத்துவர் ஹெட்கேவர். இவர் இந்து தேசியத்தின் தாயகமாக விளங்கிய அன்றைய கல்கத்தாவில் படித்தவர். காங்கிரஸ் இயக்கம் பசுவதையைத் தடை செய்ய மறுப்பதால் அதிலிருந்து வெளியேறியவர். (2008, 7)

காலை, மாலை இரு நேரங்களிலும் ஷாகா நடை பெறும். கட்டாயம் ஏதோ ஒன்றில் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும். திறந்தவெளியில்   கொடி வணக்கம், தேசபக்த உறுதிமொழி ஆகியவை சமஸ்கிருதத்தில் நடத்தப்படும். சூரிய நமஸ்காரம், யோகா, உடற்பயிற்சி, விளையாட்டுகள், புராண, இதிகாச அறிவை போதித்தல், நேரம் தவறாமை, உடலை ஒழுங்குறுத்தல், வலுப்படுத்தும் பயிற்சிகள், கையில் தடியுடன் இராணுவ ஒழுங்கமைப்பில் பயிற்றுவித்தல் என 1 மணிநேரம் நேர ஒழுங்குடன் நிகழ்த்தப்படுகிறது. ஒருவரை ஒருவர் சந்தித்து, தான் தனியர் அல்ல ஆர்.எஸ்.எஸ். என்ற பேருடலின் ஒரு சிறு உறுப்பு என்பதை நனவிலியில் பதிவு செய்வதே ஷாகாவின் முக்கியத்துவம். ஆண்டின் 365 நாள்களும் ஷாகாக்கள் உண்டு. அதற்கு விடுமுறையே கிடையாது. அதுதான் ஆர்.எஸ்.எஸின் அடிப்படை அலகு.

ஷாகா என்றால் ஹிந்தியில் கிளை என்று பொருள். ஆர்.எஸ்.எஸ். என்ற ஆலமரத்தின் கிளை அதுதான். மரம் சாய்ந்தாலும் அதன் கிளைகள் வலுவுடன் அதை தாங்கி நிற்கும் ஓர் இந்துத்துவ உடலை  உருவாக்குவதே ஷாகா. நான்கு வகையான ஷாகாக்கள் உள்ளன. 1.  5 வயதிற்கு உட்பட்டவர்கள் சிசு (Shishu), 2. 6-12 வயதிற்கு உட்பட்டவர்கள் பால (Baal), 3. 13-18 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர் (Adolescent), 4. 18 வயதிற்குமேற்பட்ட வயதானவர்கள் (Praud) (2008, 20).  இதைத் தவிர இன்றைய உலகிற்கு ஏற்ப அய்.டி. ஷாகா (IT Shakhas) என்று மெய்நிகர் ஷாகாக்கள் அய்.டி. தொழில் வல்லுநர்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது (2008, 20). இது இணையவழி தொடர்பில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி ஷாகா பயிற்சிகளைச் செய்யும் அமைப்பு. மெய்யுலகில் மட்டுமின்றி மெய்நிகர் உலகிலும் இவர்கள் தங்கள் இந்துத்துவ அரசியலையும், அதற்கான உளவியல் தயாரிப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த ஒழுங்குமுறை இராணுவத்திற்கு ஆள் சேர்த்து ஒரு போர் எந்திரமாக  (War Machine) உடலைக் கட்டமைப்பதற்கு நிகரானதாக அமைந்துள்ளது. அடிப்படையில் அனைத்து உடல்களையும் ஒரு போர் எந்திர உடலாக மாற்றுவதே இவ்வமைப்பின் நோக்கம்.

ஷாகாவில்  13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், 18 வயது வரையிலான இளைஞர்களின் அமைப்புகளை உருவாக்கிய ஆர்.எஸ்.எசின் நோக்கம்; அரசியல் அறியாத, உலகை அறியாத நுகர்வு வேட்கைக் கொண்ட சிறார்களின் உளவியல் மற்றும் இளைஞர்களின் உளவியலைக் குறிவைத்து உருவாக்கப்பட்டதே! அவர்களது பால்ய கால இன்ப நுகர்ச்சியை முழுக்க மதம் சார்ந்ததாக மடைமாற்றுவதே அதன் பணி. அதாவது உடல்களை மதவெறி கொண்ட ‘இயல்பு’ உடல்களாக வடித்தெடுப்பதற்கே! உடற்பயிற்சிக் கழகங்களில் உள்ள உடற்பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்ததே இதன் உடலரசியல் அடிப்படையைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.

பார்ப்பனரல்லாதோர் எழுச்சி,
திராவிட அரசியல் ஆகியவற்றிற்கு எதிராகக் கட்டப்பட்ட பார்ப்பனிய பாதுகாப்பு அமைப்பே ஆர்.எஸ்.எஸ்.!

இந்திய குடியேற்ற ஆட்சிக் காலத்தில் பரவலாகி வரும் பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனரல்லாதோர் எழுச்சி, ஆரிய எதிர்ப்பாக உருவான திராவிட அரசியல் ஆகியவற்றிற்கு எதிராகக் கட்டப்பட்ட பார்ப்பனிய பாதுகாப்பு அமைப்பே ஆர்.எஸ்.எஸ்.! வந்தேறிகளான பார்ப்பனர்கள் தங்களுக்கு என்று நிலமற்ற, பூர்வீகமற்ற நிலையில் ஸநாதன வருண தர்மத்தை, புராணக் கதைகளை வைத்துக் கொண்டு இந்திய ஆதிக் குடிகளை ஆண்டுவந்த கதை அம்பலமானதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கண்டடைந்ததே ‘மாத்ரு பூமி’, ‘பித்ரு பூமி’, ‘புனித பூமி’ ஆகியவை.  இந்தியாவை ஒற்றை நாடாக அதாவது ‘பாரத்’ ஆக கட்டுவதன்மூலம் ஏற்கெனவே உள்ள மொழிவழி, இனவழி மாநிலங்களை ஒழித்து, ஒற்றைத் தேசத்தை உருவாக்கி அதனை தங்களது நிலமாக மாற்ற முயல்கிறார்கள். இங்குதான் திராவிட மாதிரி அரசியல் இந்தியாவின் முக்கியமான அரசியலாக மாறி உள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். அதன் பன்முகத்தன்மையும், பல் தேசியங்களின் கூட்டமைப்பைக் கொண்ட கூட்டாச்சித் தத்துவமும் முக்கியத்துவம் அடைகின்றன. அடிப்படையிலேயே திராவிட அரசியல் இந்துத்துவ அரசியலுக்கு எதிரானது.

1925–களில் நாக்பூரில் நடந்த ஒரு கலவரத்தில் இக்கூட்டத்தினர் சோதனை முயற்சியாக இறக்கப்பட்டு அதில் பெற்ற வெற்றியே இவர்களது ‘பரவலாக்க உத்தி’யாக மாறியது. இவ்வமைப்பின் வேர்க்கால்மட்ட அமைப்பு மேலே குறிப்பிட்ட ஷாகா எனப்படும் தினசரி உடல், மன மற்றும் ஆன்மீகப் பயிற்சியே. இதில் தேசபக்தி, தெய்வபக்தி என்ற பெயரில் முழுமையாக வெறுப்பரசியலை ஒவ்வொரு உடலின் ஆழ்மனப் பரப்பில் பதிவு செய்வதே இதன் முக்கியப் பணி. இவ்வமைப்பு உலக மனித உரிமைக்கு எதிராகப் பாலர்களை, சிறார்களைத் தங்களது ஷாகாவில் பயிற்றுவித்து வளர்த்தெடுக்கிறது. இச் சிறார்களின் உளவியலை, மூளையில் உருவாகும் வேதிவினைப் பதிவுகளை முழுக்க மதவெறி கொண்டதாக உருவாக்குகிறது. அவ் வுடல்கள் வேறு எந்த சிந்தனைக்கும், உணர்வுக்கும் ஆட்படாத ஒரு மதவெறி எந்திரமாக கட்டமைக்கப்படுகிறது.  நவீன கணிப்பொறி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ‘சைபோர்க்’ மனித இயந்திரங்களைப்போல, சுய சிந்தனையற்ற மதவாத சைபோர்க்குகளை அதாவது ரைபோரக்குகளை (Ri-borg (ரைபோர்க்) = Religious Cyborg) உருவாக்குவதே அடிப்படை. அதாவது, வலுவான சண்டைக்குத் தயாரான மதவெறி ஊட்டப்பட்ட சுயசிந்தனையற்ற உடல்கள். அவர்களது தேவை மனிதர்கள் அல்ல. இந்துத்துவா என்கிற கருத்தியலுக்காக தன்னார்வலராக (ஸ்வயம்சேவக்காக) தானம் செய்து கொள்ளக்கூடிய உடல்கள் மட்டுமே.

இந்துத்துவா உடல்கள் என்பன முழுக்க ஸநாதன வருண தருமத்தால் கட்டமைக்கப்பட்ட உடல்கள். பார்ப்பன, சத்ரிய, வைசிய வருணத்திற்காக தங்கள் உடலை சேவை உடல்களாக அடிமை உடல்க ளாக கட்டமைத்துக் கொண்ட சூத்திர மற்றும் பஞ்சமர் உடல்கள். இந்துமதம் என்ற பெயரில் ‘பிராமண’ வேத மதத்தால் கட்டப்பட்ட உடல்கள். இவர்களுக்குள் இந்துத்துவா கருத்தியலால் கட்ட மைக்கப்பட்ட தன்னிலையானது இந்த உலகை ஸநாதன வருண தரமம் உருவாக்கிய ‘பிராமண’ மேலாதிக்க உலகாக கட்டமைத்துக் காட்டுவதே! அவ்வமைப்பின் முழுநேரமாக அர்ப்பணித்துக் கொண்ட தன்னார்வலர்களான ‘பிரச்சாரக்’குகள் பல ஊர்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், இளைஞர் அமைப்புகளில் ஊடுருவி அந்த அமைப்பை ஷாகாவாக மாற்றிவிடுவதே இதன் இயக்கப்பணி. (பிரதமர் மோடியே ஒரு பிரச்சாரக் ஆக பணியாற்றியவர்தான்) இப்பணிகள் வழியாக உலகம் முழுவதும் ஒரு கொடூர  ‘ஆக்டோபஸ்’ போன்ற வலைப்பின்னலை உருவாக்கி உள்ளது இவ்வமைப்பு!

ஆர்.எஸ்.எஸ். எனும் ஆக்டோபஸ்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆக்டோபஸ் போன்ற ஒரு பெரிய வலைப்பின்னலை இந்திய சமூகத்தின் வேர்க்கால் மட்டங்களில் உருவாக்கியுள்ளது.  ஆனால், அதனை ஒரு திட்டமிட்ட அமைப்பு வடிவமாக அவை வெளிப்படுத்துவதில்லை. அதற்கான உறுப்பினர்கள் யாருக்கும் அடையாள அட்டைகூட வழங்கப்படுவதில்லை.  அவ்வமைப்புச் சட்டம் பிரிவு 7(ஆ) ‘‘ஒவ்வொரு ஷாகாவும் அதில் செயல்படும் அல்லது செயல்படாத ஸ்வயம்சேவக்குகளின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டினைப் பராமரிக்க வேண்டும்” என்கிறது. ஆனால், அப்பகுதிகளில் நடைபெறும் கலவரங்களின் விசாரணைகளின்போது அப்பதிவேடுகள் இல்லை என்பதாக கமிஷன் முன் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.  அவ்வமைப்பு உருவாக்கப்பட்டது 1925 இல் என்றாலும், அது காந்தியார் படுகொலைக்குப் பின் தடை செய்யப்பட்ட 1947 ஆம் ஆண்டு வரை அதற்கென்று ஓர் அமைப்புச் சட்டமே கிடையாது. முழுக்க தனிநபர்கள் வழியாக தொடர்புகளைக் கொண்டதாக அது அமைந்துள்ள ஒரு ரகசியமான அரசைக் கவிழ்க்கும் பண்டைய கால சதிகார அமைப்பைப் போலவே அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன.  1948 இல் அதன் தடைநீக்கத்திற்கு அரசு முன்வைத்த நிபந்தனைகள் அதன் அமைப்புத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும், அது தனது வடிவத்தை வெளிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுமே!  1948 இல்தான் கோல்வால்கர் தலைமையில் அதன் அமைப்புத் திட்டம் வழக்கம்போல் பல உள் முரண்பாடு களையும், குழப்பத்தையும், அவர்களுக்கே உரிய வினோத விளக்கங்களையும் கொண்டதாக ஒன்றை சமர்ப்பிக்கிறது. அவ்வமைப்புச் சட்டம் அடிப்படை யில் நவீனத்துவம் உருவாக்கிய அரசியல் கட்சி என்கிற வரையறைக்குள் வராத ஓர் உடலரசியல் அமைப்பிற்கான வேட்கையாக உள்ளது.

மூவர்ண தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தா மல் தங்களது ‘பக்வா த்வஜ்’ என்கிற காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்தி வந்த அந்த அமைப்பு முதன்முறையாக மூவர்ணக்கொடியை “தேசியக் கொடிக்கு விசுவாசமாக இருந்து மரியாதை செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என அங்கீகரிக்கும் அதே நேரத்தில், சங் அமைப்பிற்கென்று ஒரு கொடி இருக்கிறது, பக்வா த்வஜ் எனப்படும் அக்கொடி இந்துக் கலாச்சாரத்தின் புராதன சின்னம்” என்கிறது பிரிவு 5 இல்! ஆனால், இதுநாள்வரை சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கூட ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தியதில்லை.  அரசு கேட்டதற்கு இணங்க நிர்வாகிகளின் தேர்தல் முறையை அறிவித்தது.  ஆனால் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை குறித்து எந்தவித அமைப்பு விதிகளும் அதில் இல்லை.  ஒருவர் அவ்வமைப்பில் உள்ளாரா இல்லையா என்பதை அவரே சொன்னால் ஒழிய யாரும் அறிந்துகொள்ள முடியாது. அது தன்னை ஒரு வெளிப்படையான அமைப்பாக, தனது அரசியலை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் ஒன்றாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதனது ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கிளை அமைப்புகள் குறித்தும், அதற்கும் அவ்வமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், எதுவும் அவ்வமைப்புச் சட்டத்தில் இல்லை. ஆனால் இந்திய ஒன்றியத்தை மிகவும் நுட்பமாக 11 மாகாணங்களாக (ஷேத்ரா) பிரித்து தனது அமைப்பு வடிவத்தை உருவாக்கி உள்ளது (2008, 14).  இதன்பொருள், அடிப்படையில் மொழிவாரி மாநிலங்கள் என்கிற அமைப்பை அது ஏற்கவே இல்லை. அதன் உள்தர்க்கம் ஒன்றுதான் ஏக இந்தியா அதாவது பாரத்.  இந்துக்களின் புனித பூமி என்பது!

அமைப்பு வடிவம் என்பது வழக்கமான பல்வேறு அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் போல இல்லாமல் ஒரு நுட்பமான அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டிருப்பதைக் காணமுடியும். அது ஒன்றியத்தின் இந்து என்று ஆங்கிலேயர்களால் அடையாளமிடப்பட்ட பெரும்பான்மை மக்களை ஆரிய ஸநாதன தர்மாவிற்கும், பண்பாட்டிற்குள்ளும் ஏற்ப தகவமைத்தல் அல்லது ஒரு புதிய இந்துத்துவ உடலாக அவர்களை உருவாக்குதல் என்பதே!  அவ்வகையில் ஆர்.எஸ்.எஸ். என்பது ஓர் அமைப்பு அல்ல. அடிப்படையில் அது மனிதர்களை ஸநாதன பார்ப்பனியர்களுக்கான அடிமைகளாக மறுவார்ப்பு செய்யும் ஒரு ஸ்யம்சேவக் உடலரசியல் தொழிற்சாலை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.  அரசியலில் இரண்டுவகை உண்டு. ஒன்று பாரிய அரசியல் (macro politics) மற்றது நுண்அரசியல் (micro politics). ஆர்எஸ்எஸின் அரசியல் நுண்அரசியல் தன்மைக் கொண்டது. நுண் அரசியல் என்பது வெளிப்படையாகத் தெரியாது.  அது ஒரு நிறுவனமாகக் கட்டமைக்கப்படும் உடலரசியல்.

பெரும்பான்மைவாதம் எனும் உடலரசியல்

இந்திய ஒன்றியத்தில் உள்ள பெரும்பான்ைமவாதம் என்பது ஒருவகை இந்துத்துவ உடலரசியலே.  உண்மை யில் ஆர்.எஸ்.எஸ். ஒன்றியத்தின் பெரும்பான்மை மக்களாக உள்ள பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களின் ஒருங்கிணைப்போ அவர்களை பிரதிநிதித்துவம் செய்வதோ அல்ல.  மாறாக, மீச்சிறு சிறுபான்மையான பார்ப்பனர்களின் கருத்தியலை ஆழ்மன அளவில் ஏற்ற உடல்களாகக் கட்டமைக்கப்பட்ட பார்ப்பனிய நகல் உடல்களே இங்கு பெரும்பான்மை உடல்களாக கருதப்படுகிறது. அவை அனைத்துமே நுண்பாசிச உடல்கள்.  அதாவது அளவில் சிறுபான்மையாக உள்ள பார்ப்பனர்கள், ஆளும் கருத்தியல் என்ற பண்பில் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதே! சற்று நிதானித்துச் சிந்தித்தால், சொல்லவரும் கருத்து புரிந்துகொள்ள எளிமையானதே!

மார்க்சியக் கோட்பாட்டில் கூறினால், பண்பாட்டு மூலதனம் (Cultural Capital) பார்ப்பனியரிடமும், பொருளியல் மூலதனம் (Economic Capital) பனியாக்களிடமும் குவிக்கப்பட்டுள்ளதால்தான் இன்றைய பாஜக அரசு அனைத்து அறமற்ற உத்தி களையும் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது.  இதற்கு மூளையாகச் செயல்படுவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வடிவமற்ற வடிவமே!  இந்த வடிவமற்ற வடிவம் என்பது ஒவ்வொரு இந்து, இஸ்லாமிய, கிறித்துவ மதஉடலாக தன்னுட லைப் பெருமிதமாக எண்ணும் அனைத்து மத உடலுக்குள்ளும் உட்திணிவாக்கப்பட்டுள்ளது (internalised).  சைவ சித்தாந்திகள் இதனை உள் உரு (subtle body) என்பார்கள். இதனை தன் நுண்ணு ணர்வால் கண்டுகொண்ட பெரியார் ‘‘பார்ப்பனியமே முதன்மையான எதிரி’’ என்பதைக் கண்டுணர்ந்து அறிவித்தார்.

பார்ப்பனியம் ஒவ்வொரு உடலுக்குள்ளும் உள்ள நுண்ணுடலான பார்ப்பன உடலே!  அதுதான் இந்துத்துவாவின் உடலரசியல். ஒவ்வொரு இந்திய ஒன்றிய உடலுக்குள்ளும் ஒரு ஸநாதன வர்ண பார்ப்பன உடலை உள் உருவாகக் கட்டமைப்பது. நமக்குள் இருக்கும் இந்தப் பார்ப்பன உடலை அறிந்து அதனை முற்றிலுமாக வெளியேற்றாமல் எந்தவித மாற்றமும், மாற்று அரசியலும் சாத்தியமில்லை. பார்ப்பனிய நலனை பாரப்பனரல்லாத பெரும்பான்மை மக்கள் தங்கள் நலனாகக் கருதி வாதிடுவதும், அதற்காகப் போராடுவதும் ஏன் உயிரைவிடவும் தயாராக இருப்பதற்குக் காரணம், நமக்குள் உட்கார்ந்து கொண்டு நம்மை இயக்கும் இந்த பார்ப்பன உள் உடலே! அது ஏற்படுத்தும் இறைசார், மதம்சார் கிளர்ச்சியைப் பக்தியாகக் கருதும் ஒரு நுண்ணரசியலே இதன் அரசியலாக உள்ளது.

பயன்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகள்

  1. 2005, பகவான், தமிழில் முனைவர் சிவ. சண்மு கம், ஆதி சங்கரரின் மக்கள் விரோதக் கருத்துகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை – 24
  2. 2008, Arun Anand, Know About RSS, Prabhat Books
  3. 2019, Sunil Ambekar, The RSS Roadmaps for the 21st Century, Rupa Publishing India Pvt. Ltd, New Delhi
  4. 2019, ஜமாலன், தலித் சினிமா, நிழல், சென்னை – 83
  5. 2020, ஜமாலன், உடலரசியல், காலக்குறி, சென்னை – 66
  6. 2022, ஏ.ஜி. நூரானி, தமிழில் ஆர். விஜயசங்கர், ஆர்எஸ்எஸ்: இந்தியாவுக்கு ஓர்அச்சுறுத்தல், பாரதி புத்தகாலயம், சென்னை – 18.

நன்றி: ‘காக்கைச் சிறகினிலே’,
செப்டம்பர் 2025 இதழ்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *