புதுடில்லி, அக்.10- பாலியல் கல்வியை 9-ஆம் வகுப்பில் இருந்து அல்ல, மிக இளம் வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
15 வயது சிறுவன்
‘போக்சோ’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனுக்கு ஜாமீன் கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376-வது பிரிவின்கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப் பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சிறுவனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், பரபரப்பு கருத்துகளையும் தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது:- ‘‘குழந்தைகளுக்கு 9-%ம் வகுப்பில் இருந்து இல்லாமல், மிக இளம் வயதில் இருந்தே பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து. மேல்நிலைப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
ஹார்மோன் மாற்றங்கள்
அப்போதுதான், பருவம் வந்த பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்து இளம் பருவத்தினர் தெரிந்து கொள்ள முடியும். அது தொடர்பாக செலுத்த வேண்டிய கவனமும், பின்பற்ற வேண்டிய எச்சரிக்கையும் தெரிய வரும். உரிய அதிகாரிகள், இதில் தங்களது மனதை செலுத்தி, சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.’’
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.