கோவை, அக்.10- கோவை-அவினாசி சாலையில் 10 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,791 கோடியில் அமைக்கப்பட்ட தமிழ் நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அவினாசி சாலை மேம்பாலம்
கோவையின் தொழில் வளர்ச்சிக்கு ஏதுவாக, மாநகரின் முக்கிய நுழைவு வாயிலாக அவினாசி சாலை உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1கி.மீ.தூரத்துக்கு ரூ.1,791 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டிலேயே மிக நீளமானது.
இந்த மேம்பால திறப்பு விழா, நேற்று (9.10.2025) காலை நடைபெற்றது. இதற்காக கோல்டு வின்ஸ் பகுதியில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள மேம்பால தடுப்புச்சுவர்களில் சிறிது தூரத்துக்கு வாழை, கரும்பு மற்றும் பல்வேறு பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
முதலமைச்சர் திறந்து வைப்பு
கோவையில் நடந்த உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைக்க நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு மேம்பாலத்தை திறந்து வைக்க கொடிசியா வளாகத்தில் இருந்து கார் மூலம் கோல்டுவின்ஸ் பகுதிக்கு வந்தார். பின்னர் விழா மேடைக்கு வந்த அவர், ‘ஜி.டி.நாயுடு மேம்பாலம்’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்த உயர் மட்ட மேம்பாலத்தை பொத்தானை அழுத் தியும், ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.
காரில் பயணித்தார்
தொடர்ந்து அவர் மேம்பாலத்தின் மீது சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது மேம்பாலத்தின் ஒருபுறத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் கைகளை அசைத்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் தனது காரில் ஏறி மேம்பாலத்தில் பயணித்தார். தொடர்ந்து மற்ற வாகனங்கள் மேம் பாலத்தில் சென்றன.
மேம்பாலத்தின் மீது காரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகளை ரசித்தபடியும், அமைக்கப்பட்டு உள்ள ஏறுதளம் மற்றும் இறங்குதளத்தை பார்வையிட்டபடியும் சென்றார். விழாவில் அமைச்சர்கள் எ.வ. வேலு, சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏறுதளம், இறங்குதளம்
இந்த மேம்பாலம் புதுமையான பொறியியல் கட்டுமானம் மூலம் போக்கு வரத்தை பாதிக்காமலும், சுற்றுப்புற சூழல் மாசுபடாதவாறும் கட்டப்பட்டு உள்ளது. மேம்பாலத்தில் விமான நிலைய சந்திப்பு பகுதியில் தலா ஒரு ஏறுதளம் மற்றும் இறங்குதளமும், ஹோப் காலேஜ், நவஇந்தியா, அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் தலா ஒரு ஏறுதளமும், ஒரு இறங்குதளமும் 5 அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அண்ணாசிலை ஏறுதளம் வழக்கு காரணமாக திறக்கப்படாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேம்பாலம் 4 வழிச்சாலையாகவும், மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள தரைத்தள சாலை 6 வழிச்சாலையாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் புதிய தொழில்நுட்பங் களுடன் ஒலிகுறைப்பு உள்ளிட்ட வசதிகளுடனும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மேம்பாலம் மூலம் கோவை மாநகர பகுதியான உப்பிலி பாளையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு செல்லும் பயண நேரம் 45 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைகிறது. இது போக்குவரத்து நெரிசலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.