புதுடில்லி, அக்.9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது அண்மையில் மூத்த வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.
இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய கவாயின் தங்கை, “இது ஒரு நபரின் தனிப்பட்ட தாக்குதல் அல்ல, மாறாக ஒரு நச்சு சித்தாந்தத்தால் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இந்த வகையான அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதலை நாம் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பிற்கு எதிராக யாராவது செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம் ஆகும்” என்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்குரைஞருக்கு பா.ஜ.க. தலைவர் புகழாரம்
புதுடில்லி, அக்.9 தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்யை காலணியால் தாக்க முயற்சித்த வழக்குரைஞரை கருநாடக பாஜக நிர்வாகியும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான பாஸ்கர் ராவ் பாராட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற அறைக்குள் கடந்த திங்கள்கிழமை விசாரணையின்போது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது கால ணியை வீசுவதற்கு முயற்சித்த வழக்குரைஞர் ராகேஷ் கிஷோா் (71) என்பவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, ”காலணியை வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதைச் செய்வதற்கு கடவுள்தான் என்னை தூண்டினார்” என்று வழக்குரைஞர் ராகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ராகேஷ் கிஷோா் பெயரில் இருந்த போலி எக்ஸ் கணக்கு ஒன்றில், உரிமம் ரத்து செய்யப்பட்ட செய்தியைப் பகிர்ந்து, ’எந்த வருத்தமும் இல்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை ராகேஷ் கிஷோரின் பதிவு என நினைத்து, “சட்டப்படி தவறாக இருந்தாலும், இந்த வயதில் விளைவுகளைப் பொருட்படுத்தாமல், ஒரு நிலைபாட்டை எடுத்து அதன்படி வாழும் உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்” என்று பாஸ்கர் ராவ் பதிவிட்டுள்ளார்.
பின்னர், அது போலி கணக்கு எனத் தெரிந்தவுடன் தனது கமெண்ட்டை பாஸ்கர் ராவ் நீக்கியுள்ளார். இருப்பினும், ராகேஷ் கிஷோரின் பேட்டி காணொலியை தனது எக்ஸ் தளத்தில் பாஸ்கர் ராவ் பகிர்ந்துள்ளார்.
”தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல், அனைத்து இந்தியர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், கருநாடகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி, வழக்குரைஞருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
பாஸ்கர் ராவ், முன்னாள் அய்பிஎஸ் அதிகாரி ஆவார். பெங்களூரு மாநகரக் காவல்துறை ஆணையராகப் பதவி வகித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு ஆம் ஆத்மியில் இணைந்த பாஸ்கர், சில மாதங்களில் பாஜகவில் சேர்ந்தார்.