மறைமலை நகரில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டுத் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் காலங் கருதி நிறைவேற்றப்பட்டவை.
1929 செங்கற்பட்டு மாநாடு இன்றளவும் பேசு பொருளாக இருப்பதுபோல், மறைமலைநகர் மாநாட்டுத் தீர்மானங்களும் பேசப்படும் என்பதில் அய்யமில்லை.
குறிப்பாக சமூகநீதி பற்றிய தீர்மானங்கள் முக்கிய மானவையாகும்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு (தீர்மானம் எண் – 3) ஒடுக்கப் பட்ட மக்களின் கல்வியைப் பறிக்கும் ஒன்றிய அரசின் நாசகாரச் செயல்கள் (தீர்மானம் எண் – 4) ‘கிரிமிலேயர்’ முறை ஒழிக்கப்பட வேண்டும் (தீர்மானம் எண் – 5(அ)) இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது (தீர்மானம் எண் – 6) அரசுப் பணி உயர்விலும் இடஒதுக்கீடு (தீர்மானம் எண் – 8) தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் தேசிய கல்விக் கொள்கை கூடாது (தீர்மானம் எண் – 12) ஆகிய தீர்மானங்கள் சமூகநீதியை மய்யமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டவையாகும்.
இவை எந்த அளவு தேவை என்பதை விரிவாகப் பேசப்பட வேண்டியதில்லை. காரணம் நம் கண் எதிரிலேயே நிதர்சனமாகத் தெரியக் கூடிய உண்மைகளாகும்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் என்னென்ன தரவுகள் கேட்கப்படும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் எத்தனை விழுக்காடு, அவர்களின் கல்வி, பொருளாதார நிலை எத்தனை விழுக்காடு என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்? அந்த அடிப்படையில் உரிமைக் குரலை எழுப்ப முடியும்.
மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் 52 விழுக்காடு என்று கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் கல்வி, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 27 விழுக்காடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 27 விழுக்காடு இடங்கள்கூட முழு அளவில் நிரப்பப்படவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கூறும்போது, ‘ஒன்றிய அரசில் உள்ள 90 செயலாளர்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) வெறும் மூன்று இடங்கள் மட்டுமே’ என்ற உண்மையைப் போட்டு உடைத்தார்; தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையாளர்கள் நிலைமையும் இதுதான்.
‘கிரீமிலேயர்’ என்ற அளவுகோல் அறவே நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் (மாநாட்டில்) தீட்டப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டபோதே வரையறுக்கப்பட்டு விட்டது.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and Educationally) பின் தள்ளப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என்ற முதல் திருத்தமே ‘பெரும்பான்மை ஆதரவு’ என்ற அடிப்படையில் முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்தக் ‘கிரீமிலேயர்’ எங்கே இருந்து குதித்தது?
‘பொருளாதார அளவுகோலின்படி 10 விழுக்காடு இடஒதுக்கீடு குறிப்பிட்ட சதவிகிதம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசு கொண்டு வந்தபோதுகூட உச்சநீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து விட்டதே!
பிஜேபி ஆண்ட குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களும் குறிப்பிட்ட விழுக்காடு இடங்கள் பொருளாதார அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும் என்ற முடிவை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் மண்டல் குழு பரிந்துரை பற்றிய இந்திரா சஹானி வழக்கில் (16.11.1992) முதன் முதல் ‘கிரீமிலேயர்’ (பொருளாதாரம்) என்ற சொல்லாடலைத் திணித்தது.
எந்த நோய்க்கு என்ன மருந்து என்று இருக்கவில்லையா? அம்மை நோய்க்கு, காலராவுக்கான மருந்தைக் கொடுக்க முடியுமா? நிமோனியாவுக்கு நீரிழிவுக்கான மருந்தைக் கொடுத்தால் நோய்த் தீருமா?
அதேபோல் தானே ஆண்டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயம் எது? அது எந்த அடிப்படையில் நடந்தது என்று கண்ணோட்டம் செலுத்தாமல் ‘பொருளாதாரம்’ எ்னற புதுக்கரடியை உள்ளே நுழைக்கலாமா?
பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்ததால்தான் பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி கற்க முடியாமல் போயிற்றா? பொருளாதாரத்தில் பார்ப்பனர்கள் உயர்ந்து இருந்ததால்தான் அவர்கள் நூற்றுக்கு நூறு படித்தவர்களாக இருக்க முடிந்ததா?
இல்லையே! இந்த நிலையில் ‘கிரீமிலேயர்’ என்ற ஒன்றைக் கொண்டு வந்தது – மூலகாரணத்தை ஆய்வு செய்யாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகும்.
‘50 விழுக்காடுக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது’ என்று ஒரு பக்கத்தில் கூறி விட்டு, பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு அளித்தது எப்படி? இந்த10 விழுக்காட்டையும் சேர்த்தால் இடஒதுக்கீட்டின்அளவு 60 விழுக்காட்டை எட்டவில்லையா? 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று சொன்ன அதே உச்சநீதிமன்றம் இந்த 60 விழுக்காட்டை ஏற்கிறது என்றால், இந்தக் கேலிக் கூத்தை என்னவென்று சொல்லுவது!
நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்ற முடிவுக்கும், முயற்சிக்கும்தான் கொண்டு போய் விடுகிறது.
மறைமலைநகர் மாநாட்டில் தனியார்த்துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார்த்துறைகள், விரிந்து பரந்து செல்லும் இந்தக் கால கட்டத்தில் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்று சொல்லாமலேயே விளங்கக் கூடியதாகும்.
மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சமூகநீதிக் தொடர்பான தீர்மானங்கள் செயல்படுத்தப்படுவது அவசியமாகும்.
ஒன்றிய அரசை இத்திசையில் வலியுறுத்தி வெற்றி பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.