கருஞ்சட்டைத் தோழர்களின் பார்வையில்… சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா!

13 Min Read

ுயமரியாதை இயக்கம் நூற்றுக்கணக்கான மாநாடுகளை தன்னகத்தே கொண்டது! அந்தச் சுயமரியாதை இயக்கத்திற்குத் இப்போது வயது 100. பல மாநாடுகளைத் தமிழ்நாடு பெற்றிருந்தாலும், 1929 இல் நடைபெற்ற முதல் மாநாட்டிற்கு எப்போதுமே ஒரு தனித்துவம்தான்!

தந்தை பெரியாரும்! தனயரும்!

தமிழ்நாட்டிற்கே திருப்புமுனையான அந்த மாநாட்டைத் தந்தை பெரியார் எப்படி வரலாற்றுச் சிறப்புமிக்கதாக ஆக்கினாரோ, அதே சிறப்பை நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிலும் ஏற்படுத்திவிட்டார் அவர்தம் தனயர் ஆசிரியர் அவர்கள்!

நீங்களே யோசித்துப் பாருங்களேன்! 1929 ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் சிறப்பை 100 ஆண்டுகளாக யாராவது பேசிக் கொண்டிருப்பார்களா? அப்படி ஒரு அமைப்பு இந்த உலகத்தில் வேறு எங்காவது இருக்கிறதா? அந்த மாநாடு குறித்துப் பேசிக் கொண்டிருப்பது ஒருபுறம்; அந்த மாநாட்டை நடத்திய இயக்கத்தின் நூறாவது ஆண்டையும் கொண்டாடுவது என்பது எவ்வளவு பெரிய நிகழ்வு! அது ஒரு உலக சாதனை அல்லவா!

ஒரு குடும்பத்தை மேன்மையாக்க ஒரு தனி மனிதர் போராடுவது, சிரமப்படுவது, மடிவது என்பதெல்லாம் இயல்பான நடைமுறை. ஆனால் ஒரு இயக்கம், அதுவும் நூறு ஆண்டுகளாகத் தொடரும் இந்த இயக்கத்திற்குப் பல்லாயிரம், பல்லாயிரம் தோழர்கள் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து, அமைதிப் புரட்சி செய்து, இந்த மண்ணில் மடிந்துள்ளார்களே… அதுவெல்லாம் உலக சாதனைப் பட்டியலில் வராதா?

திராவிடர் கழகம்

பெரியார் மண் என்பது உணர்ச்சிப் பெருக்கல்ல!

“எங்களை ஆழம் பார்க்க நினைக்காதீர்கள்… பார்க்க நினைத்தால், உங்கள் தத்துவத்தைப் பெரியார் மண் மூடிவிடும்”, என 93 வயது சிங்கமாய் கர்ஜித்தாரே ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! பெரியார் மண் என்பது ஏதோ… உணர்ச்சிப் பெருக்கல்ல! நூறாண்டு காலத் தோழர்களின் உடல்கள் இம்மண்ணில் விதைக்கப்பட்டுள்ளன! அந்த வேரும், வேரடி மண்ணும், அந்த வேர்களால் உருவான விழுதுகளின் பெயர்தான் பெரியார் மண்!

மாலை அரங்கில் நடைபெற்ற மாநாட்டில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பேச்சு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது; புது ரத்தம் பாய்ச்சியது! தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கூட பிரமிப்பாய் பார்த்ததை நாம் கண்டோம்! இதைச் சுட்டிக் காட்ட கூடுதல் காரணமும் உண்டு. காதில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதற்காக  அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர், சிறிது நாட்கள் ஓய்வில் இருந்தார்கள். ஆனால் அவர் படிப்பதற்கும், எழுதுவதற்கும் எப்போதும் ஓய்வில்லை என்பது தனிச் செய்தி!

திராவிடர் கழகம்

எரிமலையாய் சிதறிய வார்த்தைகள்

ஆக மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க பயணங்கள் கூடாது, நிகழ்ச்சிகள் கூடாது என்கிற நிலையில், இந்த மாநாட்டின் பேச்சு உணர்ச்சிப் பிழம்பாய், எரிமலையாய் வெடித்துச் சிதறின! அந்தப் பேச்சின் வீச்சு, இன்னும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றது. உலகம் முழுவதும் இருக்கிற தோழர்களும் அந்தப் பேச்சைக் காணொலி வழி கேட்டு, தத்தம் பூரிப்புகளை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாடு குறித்துத் தோழர்கள் பலரும் தங்கள் பார்வையில் விடுதலையில் எழுதி வருவதை ரசித்து வருகிறோம். இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்ற தோழர்களில் சிலர், குறிப்பாக இளம் தோழர்கள் தங்கள் அனுபவங்கள், எண்ணங்களை “விடுதலை”க்காகப்  பகிர்ந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

ஒருநாளில் 20 ஆயிரம் இழப்பு!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜப்பான் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் ரா.செந்தில்குமார் கூறும்போது, “ஜப்பானில் இருந்து அவசர வேலையாக, நான்கு நாட்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தேன். 03.10.2025 வெள்ளிக்கிழமை இரவு ஜப்பான் திரும்புவதற்கு விமானச் சீட்டு முன்பதிவு செய்திருந்தேன்.’’

‘‘இந்நிலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா செங்கல்பட்டு, மறைமலை நகரில் நடக்க இருப்பதை அறிந்தேன். உடனே பயணச்சீட்டு தேதியை மாற்றினேன். இதனால் 20 ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் ஏற்பட்டது. அது எனக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை. ஏனெனில் இன்னொரு நாளில் நான் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவைப் பார்க்க முடியாது!’’

‘‘காலை நிகழ்ச்சிக்கே அரங்கம் சென்றுவிட்டேன். தரைத்தளத்துடன், இரண்டு மாடிக் கட்டடம். மொத்தமுமாகக் கருப்புச் சட்டைத் தோழர்கள் குவிந்திருந்தனர். ஒவ்வொருவரின் பேச்சையும் அவ்வளவு ஆர்வமாகக் கேட்டேன். அனைத்துமே அற்புதமான உரைகள்.’’

‘‘இதற்கிடையில் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வணக்கம் சொல்லிவிடலாம் என அய்யாவைப் பார்த்தேன். அடுத்த 5 நிமிடத்தில் மேடைக்கு அழைக்கப்பட்டேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், “உலகத் தலைவர் வாழ்க்கை வரலாறு (தொகுதி-12) நூலை அந்த மேடையில் வெளியிடுவதாக இருந்துள்ளது. அதனைப் பெற்றுக் கொள்ளும், பெரும் வாய்ப்பை அந்த நிமிடத்திலேயே முடிவு செய்து, அதனை எனக்கு வழங்கினார் ஆசிரியர்!’’

‘‘ஒரு பெரும் மாநாடு, பல தலைவர்கள் மேடையில் இருக்கிறார்கள், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமி இருக்கிறார்கள், எண்ணங்களில் பல்வேறு சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும், இந்நிலையில் ஓரிரு நிமிடங்களில் முடிவு செய்து, அந்நூலைப் பெறும் வாய்ப்பை, எனக்கு வழங்கிய ஆசிரியரின் கணினி போன்ற விரைவுச் செயல்பாட்டை எப்போதும் போல  அதிசயமாய் நினைத்துப் பிரமிக்கிறேன்”, என்று ஜப்பான் தோழர் ரா.செந்தில்குமார் கூறினார்!

அதிக மகளிர் வரும் காரணம்!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரேவதி கூறும்போது, ”

எங்கெங்கு காணினும் கருஞ்சட்டைக் குடும்பங்கள் அணிதிரண்டு, செங்கல்பட்டு மறைமலை நகரை நிறைத்தி ருந்தனர். வீரமிகு பெரியார் சமூகக்காப்பு அணிவகுப்புடன், கழகக் கொடியை, ஆசிரியர் அவர்கள் ஏற்றி வைத்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. முழு நாளும் பல்வேறு அரசியல் ஆளுமைகளின் பயனுள்ள பகுத்தறிவுக்  கருத்துகளுடன் அமர்வுகள் நடைபெற்றன.

எழுச்சிமிக்க இன எழுச்சிப் பேரணி நகர வீதிகள் அதிர, சுயமரியாதை முழக்கங்களோடு நடைபெற்றது பெருமகிழ்ச்சி. பொதுவாக நமது பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், கலந்துரையாடல்கள் எதுவாயினும் மகளிர் தோழர்களை இயல்பாகப் பாவித்தும், முக்கியத்துவம் கொடுத்தும், எந்த வரம்பு மீறலும் இல்லாமல், இன்னும் சொன்னால் பாதுகாப்பு அரணாக கருஞ்சட்டைத் தோழர்கள் இருப்பார்கள். மகளிர்அதிகளவு பங்கேற்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். எந்த ஒரு பண்டிகையோ, குடும்ப  நிகழ்ச்சிகளோ தராத ஒரு உற்சாகத்தை, கருஞ்சட்டைப் படையைக் காணும் போது பெறுகிறோம். பகுத்தறிவு மனப்பான்மையை மேலும் பட்டைத் தீட்டிக் கொள்ளவும், பெரியாரிய வாழ்வியலைச் செழுமைப்படுத்தி கொள்ளவும் இது ஓர் அரிய வாய்ப்பு! அந்த வகையில் இந்த மாநாட்டைக் கொண்டாடி மகிழ்ந்தோம்”, என உணர்வு கொப்பளிக்க விவரித்தார் தோழர் ரேவதி.

காரைக்குடி மாநகரச் செயலாளர் தோழர் அ.பிரவீன் முத்துவேல் பேசும்போது, “வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் கலந்து கொண்டதை பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். தமிழர் தலைவர் ஆசிரியர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், அ.இராசா, தொல். திருமாவளவன், கனிமொழி கருணாநிதி ஆகியோரின் கருத்துரைகளைக் கேட்டு மனம் மகிழ்ந்தேன். அதில் ஆசிரியர் பேசும்போது, “திராவிட மாடல் ஆட்சியை எந்தக் கொம்பனும் வீழ்த்த முடியாது என்றும், உங்களைக் கோட்டைக்குள்ளே அனுப்புவது எங்கள் வேலை, அதாவது Entry உங்களது, Sentry எங்களது”, எனக் கூறியதை ரசிக்க முடிந்தது.

மாநாட்டில் தோழர்களுக்குத் தண்ணீர், நொறுக்குத் தீனி, உணவு போன்றவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன நிறைவான மாநாட்டைத் தந்த தலைமைக் கழகத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்”, எனப் பிரவீன் கூறினார்.

திராவிடர் கழகம்

‘‘வடை, பாயாசத்துடன் அறுசுவை உணவு!’’

திருச்சி மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ.க.யாழினி தம் கருத்தைப் பதிவு செய்யும் போது,” ஒரு இயக்கம் நூற்றாண்டைக் கடந்து வர எத்தனைத் தடைகள், வசைச் சொற்கள், ஏச்சுக்கள், பேச்சுக்கள். அப்பேர்ப்பட்ட இயக்கத்தில் தந்தை பெரியாரைப் பார்க்காத தலைமுறை, தமிழர் தலைவர் ஆசிரியர் தாத்தாவைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றோம்.’’

‘பல்லாயிரம் பேருக்கும் பசியாற, வயிறார மதிய உணவு கிடைத்தது. அதிலும் அன்று எங்கள் அம்மா க.அம்பிகா அவர்களுக்குப் பிறந்தநாள் வேறு! வடை, பாயாசத்துடன் அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தோம். அதிலும் அனைவருக்கும் சாப்பாடு இருக்கிறதா என்பதை அறிய ஆசிரியர் அவர்கள் உணவுக் கூடத்திற்கு வந்தார்கள். எந்தத் தலைவர் இப்படியெல்லாம்  விசாரிப்பார்கள்?’

‘இதுதவிர ஒவ்வொரு இருக்கையிலும் குடிநீர், பிஸ்கட், பழச்சாறு, இனிப்பு, காரம் அடங்கிய பை இருந்தது. தோழர்கள் இல்லாத நாற்காலியில் கூட பை இருந்தது.

மாலையில் ஆசிரியரின் பேச்சு காந்தக் குரலில் இடி முழக்கமாய் இருந்தது. இன்னும் கேட்க வேண்டுமென தோன்றியது, மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து கால் பகுதியும், தோழர்களைப் பார்ப்பதால் வரும் உற்சாகம் முக்கால் பகுதியுமாகச் சேர்த்து, என் உடலை சரியாக்கி விடுகிறது என்று பேசியபோது நெகிழ்ந்து போனேன்”, எனத் தோழர் யாழினி கூறினார்.

திராவிடர் கழகம்

‘‘நான் தான் வீட்டின் முதல் பட்டதாரி!’’

திராவிடர் மாணவர் கழகச் செயலாளர் காரைக்கால் பி.அறிவுச்செல்வன் சொல்லும் போது, ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு மிகவும் எழுச்சியும், பூரிப்பும் நிறைந்ததாக இருந்தது. கழகத் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து  தோழர்கள் குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். எந்தவொரு இயக்கத்திலும் இப்படி நான் பார்த்ததில்லை.’’

‘‘தந்தை பெரியாராலும், அவர் கண்ட இயக்கத்தாலும் பயன்பெற்ற தமிழ்நாடு, இதை ஒரு மாநாடாக மட்டும் பார்க்கவில்லை, நன்றி காட்டும் பெரும் விழாவாகவே பார்த்தது. 1929 இல் இயற்றப்பட்ட தீர்மானங்கள் தான், இன்றைக்குச் சட்டங்களாக உள்ளன. அந்தச் சட்டங்களுக்குக் காரணமான, தந்தை பெரியார் எனும் ஆலமரத்தின் நிழலில் நிம்மதியாக வாழ்த்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற இளைஞர்கள் நன்றி காட்டுவது முக்கியக் கடமையல்லவா!’’

‘‘ஆம்! எங்கள் வீட்டின் முதல் பட்டதாரி நான்தான்! என்னுடைய பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். அவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு, எனக்குக் கிடைத்தது இந்த இயக்கத்தால் தானே? அதனால்தான் நான் கடமைப்பட்டுள்ளேன். தந்தை பெரியாரைக் காண வாய்ப்பில்லாத  எம்போன்ற இளைஞர்கள், இதே உணர்வுடன்தான் சுயமரியாதை மாநாட்டிற்கு வந்தோம்.’’

‘‘சரியாகக் குறித்த நேரத்தில் மாநாடு தொடங்கியது. தமிழர் தலைவர் ஆசிரியர் உரையும், தமிழ்நாடு முதலமைச்சர் உரையும் உணர்ச்சிப் பெருக்காக இருந்தது. சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு விழா பெரும் நன்றி உணர்ச்சியில் நிறைவடைந்தது”, என அறிவுச்செல்வன் தம் கருத்தைப் பதிவு செய்தார்.

ஆவடி மாவட்டத் திராவிட மாணவர் கழகத் தலைவர் சி.அறிவுமதி கூறுகையில், “மக்கள் எந்தளவிற்கு அரசியல் தெளிவு பெற வேண்டும், பகுத்தறிவோடும், சுயமரியாதையோடும் எப்படி வாழ வேண்டும் என்கிற பெரும் வாழ்வியலை, அரசியல் நெறிமுறைகளைத் தமிழ்நாட்டிற்கே வகுத்துக் கொடுத்தது சுயமரியாதை இயக்கம். அந்த இயக்கத்தின் நூற்றாண்டை நாம் கொண்டாடி வருகிறோம்.

‘‘தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி’’ இந்தியாவிற்கே முன்மாதிரி யாக சுயமரியாதை இயக்கம் இருந்து வருகிறது. பாசிச, சங்பரிவார் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகிறது. யாரும், யாருக்கும் உயர்வு, தாழ்வு இல்லை என்கிற தெளிவைச் சுயமரியாதை இயக்கம் ஆழமாக விதைத்தக் காரணத்தினாலேயே, எவ்வளவு பெரிய நட்சத்திரமாகத் திரையில் இருந்தாலும், அவர்களின் காவிச்சாயம் தமிழ் மண்ணில் வெட்ட வெளிச்சமாக தோலுரிக்கப்படும் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.’’

‘‘படித்த இளைஞர்களை, அரசியல் மற்றும் கொள்கை தெளிவுப்படுத்தாமல், அவர்களை கும்பலாகச் சேர்த்து, மோசமாக நடத்தும் செயலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. ஒவ்வொரு இடரிலும் தமிழ்நாடு புதுப்பார்வையை உருவாக்கும், அரசியல் தெளிவைக் கண்டறியும்.’’

‘‘அதற்குக் காரணமாக இருப்பது இந்த சுயமரியாதை இயக்கம்தான். எளிய மக்களை அரசியல்படுத்தும் சுயமரியாதை இயக்கத்தின் தேவை, உலகின் கடைசி மனிதன் இருக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அதுவரை பெரியாரும் இருந்து கொண்டே இருப்பார்”, என சி.அறிவுமதி கூறினார்.

திராவிட மாணவர் கழகத்தின் மாநிலத் துணைச் செயலாளர் சீ.தேவராஜபாண்டியன் பேசும்போது, மதுரையில் இருந்து பேருந்து மூலம் மாநாட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். இரவு 12 மணி இருக்கும், மாநாட்டிற்கான விளம்பரக் காணொலி ஒன்றினை எனது “வாட்சப் ஸ்டேட்டசில்” வைத்திருந்தேன்.

மறுநாள் அதைப் பார்த்த கல்லூரியில் என்னுடன் படித்த தோழி ஒருவர், “நீங்கள் மாநாட்டிற்கு வருகிறீர்களா?”, எனச் செய்தி அனுப்பியிருந்தார். அவரைச் சென்று நேரில் சந்தித்தால், காக்கி உடுப்பில் கம்பீரமாக நின்றிருந்தார். மாநாட்டுக் காவல் பணிக்கு அவர் வந்துள்ளார். எனக்குப் பெருமையாக இருந்தது. எங்களுடன் படித்த இன்னொரு தோழியும், விரைவில் இராணுவத்தில் சேர்வதற்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.

1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் பெரியார் என்ன தீர்மானம் இயற்றினாரோ அந்தக் காவல் பணி, இராணுவப் பணிகளில் தமிழ்நாடு மகளிர் சர்வசாதாரணமாக நுழைந்துவிட்டனர். 1929 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட  தீர்மானங்களை, 1973 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் தானே, பெண்களைக் காவலர் பணியில் அமர்த்த ஆணையிட்டார். அதேபோல ஒன்றியப் பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தபோது, “இராணுவத்தில் பெண்களைச் சேர்க்க வேண்டும்” என்று ஆசிரியர் கி.வீரமணி அய்யா வேண்டுகோள் வைத்தார். உடனே அமைச்சர் DRDO மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு,  முதல் அணியிலேயே பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி மாணவியர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.’’

‘‘இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி. இந்த இயக்கத்திற்குத் தான் இந்த நூற்றாண்டு விழா என்கிற செய்திகளை எல்லாம் காவல்துறை தோழியிடம் கூறினேன்”, என மதுரை சீ.தேவராஜபாண்டியன் தெரிவித்தார்  .

திராவிடர் கழகம்

ஆசிரியர் உரையே அனைவருக்கும் “டானிக்”

திருச்சி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் வெ.ரூபியா தம் கருத்தைப் பதிவு செய்யும் போது, ‘‘சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கம மாநாடாக இருந்தது. “பெரியார் உலகமயம், உலகம் பெரியார்மயம்”, என்பதை எதிரிகளும் உணர்த்திடும் வகையில் அமைந்தது இந்தக் கருஞ்சட்டை மாநாடு.

சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றுக் கண்காட்சி மிகச் சிறப்பாக இருந்தது. புதிய தலைமுறையினரும் அறியும் வண்ணம் சமூகநீதி, சமத்துவம், சுயசிந்தனை, சுதந்திரம் ஆகியவற்றைச் சிறப்பான காட்சிகள் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் எனும் மின்சாரத்தை, வடக்கில் இருந்து வரும் புதிய மின்மினிப் பூச்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டை அவர்கள் ஆழம் பார்க்க நினைக்கிறார்கள். அவர்களின் தத்துவத்தை, இந்தப் பெரியார் மண் மூடிவிடும்.

மாநாட்டில் ஆசிரியர் உரை என்பது ஒவ்வொரு தோழருக்கும் உற்சாக “டானிக்”. சுயமரியாதை, பகுத்தறிவு, மனுதர்மம் ஒழித்த சமதர்மச் சிந்தனை நிலவுதல், பிற மாநிலங்களும், உலகமும் தொடர்ந்து பாராட்டும் வளர்ச்சி, சமூகநீதித் துறையில் சரித்திரம் காணாத  சாதனை புரியும் இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்தால் தான், நமது மக்கள் சரியாசனம் பெற முடியும் என மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஆசிரியரின் பேச்சு இருந்தது”, என வெ.ரூபியா கூறினார்.

திராவிடர் கழகம்

உன்னத தலைவரைப் பெற்றிருக்கிறோம்!

திருவாரூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் வாகை நிலவன் கூறுகையில், முதல் நாள் இரவு பெரும் மழையையும் பொருட்படுத்தாமல் திருவாரூரில் இருந்து பயணப்பட்டோம். ஒரு இயக்கம் எப்படி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் இந்த மாநாடு. காலை தொடங்கி ஒவ்வொரு நிகழ்விலும் அது தெரிந்தது.

கருத்தரங்கத்தின் நிறைவாகப் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி எம்.பி பேசியது,  சுயமரியாதை இயக்கம் பெற்றுள்ள வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளை வெகுவாக மக்களுக்குக் கடத்தியது.

அம்மாநாட்டில் 92 வயது இளைஞர் ஆசிரியர் பேசினார். “மதவெறி மாய்க்கவும், மனிதநேயம் காக்கவும் தமிழ்நாடு முழுக்க எனது பிரச்சாரப் பயணம் தொடரும்”, என அறிவித்தார். இப்படிப்பட்ட உன்னதத் தலைவரை அல்லவா நாம் பெற்றிருக்கிறோம்! சீறும் எரிமலை போல இருந்தது அய்யாவின் பேச்சு.

தொடர்ந்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர், சுயமரியாதை இயக்க வீரர்களை நினைவு கூர்ந்தார், தமிழர் தலைவரின் சாதனைகளைப் பாராட்டினார், பெரியார் திடல் தான் வழிகாட்டி என்றார், பேச்சினூடே பெரியார் உலகத்திற்கும் நன்கொடை அறிவித்தார். முத்தாய்ப்பான முதல்வரின் பேச்சு,

கருஞ்சட்டை வீரர்களை இன்னும் வீறுகொண்டு செயலாற்றிட உத்வேகம் அளித்தது”, என வாகைநிலவன் தெரிவித்தார்.

மாநாட்டின் சமூகப் பாதுகாப்பு படைப்பிரிவில் பங்கு கொண்ட மதுரை மாவட்டம் நிலவரசி தம் கருத்தைப் பதிவு செய்தபோது,

“எனது பெற்றோர்கள் பாக்யலட்சுமி – பெரியசாமி இருவருமே 25 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். அதனால் எனக்குக் கிடைத்த சொத்து என்பது பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஜாதி, மதமற்ற தன்மை, சுயமரியாதை போன்றவை ஆகும்.

இந்தச் சமூகப் பாதுகாப்பு படைப்பிரிவில் பங்கேற்றது எனது  முதல் அனுபவம். முழுவதும் தமிழ்மொழி வாயிலாகவே கற்றுத் தரப்பட்டது. கூட்டத்தை எப்படிக் கையாள்வது, முதலுதவிகள் செய்வது குறித்தும் முதல் நாள் கற்றுத் தரப்பட்டது. ஆண், பெண் வேறுபாடுகளுக்கு அங்கு இடமே இல்லை. அதேபோல வயது மூத்த தோழர்களில் இருந்து, சமவயது தோழர்கள் வரை அனைவருக்கும் ஒரே எண்ணவோட்டம் தான். இந்த மூன்று நாட்கள், ஒரு புது உலகத்தில் வாழ்ந்த மகிழ்ச்சியில், நிறைவில் இருக்கிறேன். காலையில் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியில், மேடையின் மீது பக்கவாற்றில், பாதுகாப்புப் பணிக்காக என்னை நிற்க வைத்தார்கள். அந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் வடிக்க முடியாது. இந்த மூன்று நாளிலும் கைப்பேசி இல்லா உலகையும் அனுபவித்து மகிழ்ந்தேன். வாழ்நாளில் மறக்கவே முடியாத அனுபவம் இது. அனைத்துத் தோழர்களும் இந்த உணர்வைப் பெற வேண்டும் என்பது என் அவா”, என நிலவரசி கூறினார்.

நாம் கேட்டது பத்து தோழர்கள் என்றாலும், அவர்களிடமே இவ்வளவு செய்திகள் இருக்கின்றன என்றால், இன்னும் நூறு, நூறு தோழர்களிடம் கேட்டிருந்தால், இந்த நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு ஒரு நூலே வடிக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டிருக்கும். தமிழர் தலைவர், ஆசிரியரின் அடுத்த இலக்கு 2026 ஆண்டு மீண்டும் திராவிட மாடல் ஆட்சியைக் கொண்டு வருவது. அதற்கு ஆயிரமாயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் இப்போதே தயாராவோம் வாரீர்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *