அபுஜா, அக்.9- மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் அதிபராக பொலா டினும்பு செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, அந் நாட்டு அமைச்சரவை யில் யுச்சி நிஜி இடம் பெற்றிருந்தார். அவர் 2023ஆம் ஆண்டு முதல் அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
அதேவேளை, யுச்சி நிஜி போலி கல்வி சான்றிதழை கொடுத்து அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதாக புகார் எழுந்தது. ஆனால், தான் 1985ஆம் ஆண்டு நைஜீரியா பல்கலைக்கழகத்தில் இளநிலை மைக்ரோ பயாலஜி கல்வி பயின்று பட்டம் பெற்றதாக யுச்சி நிஜி கூறி வந்தார். ஆனால், அந்நாட்டை சேர்ந்த செய்தித்தாள் நிறுவனம் நடத்திய ஆய்வில், யுச்சி நிஜி 1981ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார் என்பதும் ஆனால் அவர் படிப்பை நிறைவு செய்யவில்லை, அதற்கான பட்டமும் பெறவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து அமைச்ச ரவையில் இடம் பெற்ற யுச்சி நிஜி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட் டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், நைஜீரியாவின் அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியை யுச்சி நிஜி நேற்று (8.10.2025) விலகினார். நிஜியின் பதவி விலகல் கடிதத்தை அதிபர் ஏற்றுக்கொண்டார். அதேவேளை, யுச்சி நிஜி எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்பட்டதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் குற்றஞ்சாட் டியுள்ளார்.