ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

7 Min Read

* இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன!
* போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கவேண்டும்!
காசா மீதான தாக்குதலைக் கண்டித்து
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!

சென்னை, அக்.8 இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன! போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கவேண்டும்! காசா மீதான தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

காசா இனப்படுகொலகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் இன்று (8.10.2025) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, த.வா.க. தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறூப்பினர் உ.வாசுகி, மேனாள் மாநிலச் செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரை யாற்றும்போது,

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்த னமான தாக்குதல்கள், நம் எல்லோருடைய மனதை இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல, உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு

பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களையும், அய்க்கிய நாடுகள் அவையின் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறும் இந்தத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மனிதநேய பண்போடு நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து இந்தக் கண்டன கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சார்ந்த அமைப்பு இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறது! எழுச்சியோடு என்று சொல்வதைவிட உணர்ச்சியோடு இதை ஏற்பாடு செய்திருக்கிறது!

இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவிற்கும், குறிப்பாக, மாநிலச் செயலாளர் தோழர் சண்முகம் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருக்கக்கூடிய நாம் மட்டுமல்ல; மனிதநேய சிந்தனை கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரும் காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை கண்டித்துக் கொண்டிருக்கிறோம்.

பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான, மனித உரிமை ஆதரவை மனப்பூர்வமாகநாம் வழங்குகிறோம்.இதுதான் இந்தக் கண்டன இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது!

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தாக்குதல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இதுவரையில், ஏறக்குறைய 11 ஆயிரம் பெண்கள் – 17 ஆயிரம் குழந்தைகள் – 175 பத்திரிக்கையாளர்கள் – 125 அய்.நா. ஊழியர்கள் என்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள்;ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்; சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஓராண்டில் காசாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது!

ஆனாலும், இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு எதிராக, பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எல்லோருடைய இதயமும் நொறுங்கி போயிருக்கிறது!

அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுமை களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டும் என்றால்,கடந்த ஜூன் மாதத்தில்,  பட்டினியால் வாடக்கூடிய பாலஸ்தீனர்கள், உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, 45 பேரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உணவுக்காக காத்திருந்தவர்களின் உயிரையே பறித்திருக்கக்கூடிய இந்தக் கொடூரத்தை பார்த்து, எல்லோருடைய இதயமும் நொறுங்கி போயிருக்கிறது.

மனித உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமையான இந்த அநீதிகளைக் கண்டிக்காமல் – அமைதியாக கடந்து செல்ல யாருக்காவது மனது ஒப்புமா?

சில நாள்களுக்கு முன்னால், மற்றொரு செய்தி வந்தது…

காசாவில் மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டு இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு வழங்க, உணவுப் பொருள்கள் – மருந்துகள் – குழந்தைகளுக்கான பால் பவுடர்களைக் கொண்டு சென்ற, 47 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களைத் தடுத்து கைது செய்திருக்கிறது இஸ்ரேல்.

பன்னாட்டுச் சட்டங்களை மீறும் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்காமல் நம்மால் இருக்க முடியுமா?

இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்!

காசாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.

இதற்கான முயற்சிகளை, இந்திய ஒன்றி யத்தை ஆளக்கூடிய பா.ஜ.க. அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் மூலமாக எல்லோருடைய சார்பிலும் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தாக்குதல்களை நிறுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்!

ஒன்றிய பா.ஜ.க. அரசு, இஸ்ரேல் மற்றும் பிற தொடர்பு டைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்தாகவேண்டும்.

அய்க்கிய நாடுகள் சபை மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, காசாவில் அமைதியை நிலைநாட்டவும், மனிதாபிமான உதவிகளை செய்யவும், ஒன்றிய அரசு முயற்சிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

வேறொரு நாட்டு விவகாரமாகப்
பார்க்கக் கூடாது!

மனிதாபிமானம் இருக்கும் எல்லோரும் இதை வேறொரு நாட்டு விவகாரமாக நாம் பார்க்கக் கூடாது.

உலக அமைதி என்பது, எல்லோருக்கும் பொதுவானது! மனித உரிமை என்பதை எல்லோரும் காக்க வேண்டும்! மானுட உயிர்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பு இல்லாதது! இந்த மூன்றையும் காக்கின்ற கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது!

இந்த மோசமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, உணவு – மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அவசிய உதவிகளும், உடனடியாக  முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

தெளிவான வாக்குறுதிகள்
வழங்கப்பட வேண்டும்!

பாலஸ்தீனர்களின் மறுவாழ்வுத் திட்டம், காசாவை மறு கட்டமைப்பு செய்வது – மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும்!

அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

உலக நாடுகள் முன் வைக்கும் நிபந்தனைகள் – உறுதிமொழிகள், பாலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உங்களிடம்நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!

வருகின்ற14 ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும். இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும்; அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த கூட்டம் மூலமாக, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்பாவி மக்கள் உயிர் இழப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற என் விருப்பத்தை கோரிக்கையாக முன்வைத்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் உரையைத் தொடர்ந்து, காசா இனப்படுகொலையைக் கண்டித்து ஒலிமுழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

காசாவில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தாத அய்.நா.வின் போக்கைக் கண்டித்தார். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவரும் சூழலில், அமைதிக்கான நோபல் பரிசைக் குறிவைத்துத் தான் திடீரென போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவதாகக் குற்றம் சாட்டினார். காசா மட்டுமல்லாமல், இலங்கையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளான போதும் அய்.நா. அமைப்பு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இது தொடக்கம் தான்; இந்த இயக்கம் காசா மக்கள் மீட்கப்பட்டு, சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடைபெறும் என்று உரையாற்றினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாவட்டத் தலைவர்கள் இரா.வில்வநாதன், ப.முத்தையன், தளபதி பாண்டியன், வே.பாண்டு, மாவட்டச் செயலாளர்கள் செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், புரசை அன்புச்செல்வன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொதுக்குழு உறுப்பினர் தனலட்சுமி, தங்கமணி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் காஞ்சி கதிரவன், மு.இரா.மாணிக்கம், உள்ளிட்ட ஏராளமான திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். (தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முழு உரை நாளை வெளிவரும்.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *