மகாலங்கூர்,அக்.7- எவரெஸ்ட் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில், 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
உலகின் மிக உயரமான மலைப்பகுதி எவரெஸ்ட் சிகரம். நேபாளம் மற்றும் சீனா எல்லையில் இந்த சிகரம் அமைந்துள்ளது. இரு நாடுகளில் இருந்தும் இந்த மலைச்சிகரத்துக்கு மலையேற்ற வீரர்கள் செல்கின்றனர்.சீனாவில் தற்போது ‘கோல்டன் வீக்’ எனப்படும் 8 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி, மலையேற்றத்துக்கு இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. 1,000க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் மலையேறி, முகாம் அமைத்து தங்கியுள்ளனர்.
அப்போது, இந்த எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள சீனாவின் திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப் புயல் வீசியது. இதில், முகாமில் தங்கியிருந்த 1000க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்களும் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 350க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ் சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.