புதுடில்லி, அக்.6- சுங்கச்சாவடிகளில் கட்ட ணத்தை ரொக்கமாக செலுத்தினால் இருமடங் காகவும், யு.பி.அய். மூலம் செலுத்தினால் கூடுதலாக கால் பங்கும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
‘பாஸ்டேக்’ நடைமுறை
தேசிய நெடுஞ்சாலை களில் செல்லும் வாக னங்களுக்கு அங்காங்கே சுங்கக்கட்டணம் வசூலிக் கப்படுகிறது. முன்பு, இந்த சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறை இருந்தது. இந்த ரொக்க நடைமுறையால் சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதில் வாகனங்கள் காலதாமதத்தை சந்தித்து வந்தன. இதனைத் தவிர்க்க ‘பாஸ் டேக்’ கட்டண முறை கொண்டு வரப்பட்டது. இதனால் வாகனங்கள் வெகுநேரம் காத்து நிற்காமல் வேகமாக சென்று வருகின்றன. ‘பாஸ்டேக்’ நடைமுறைப்படுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆகி விட்டாலும் இன்னும் அது முழுமையாகவில்லை. பல வாகனங்கள் இன்னும் ரொக்கமாகவே பணத்தை செலுத்துகின்றன.
புதிய நடவடிக்கை
எனவே பாஸ்டேக் நடைமுறையை முழுமையாக்கவும், ரொக்க நடைமுறையை தவிர்த்து, டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப் பட்டு உள்ளன.
இந்த திருத்தத்தின் படி, பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழையும் வாகனங்கள் ரொக்கமாக பணத்தை செலுத்தினால் இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். அதே நேரத்தில் யு.பி.அய். மூலம் செலுத்தினால் கூடுதலாக கால்பங்கு கட்டணத்தை சேர்த்து செலுத்த வேண்டும்.
உதாரணமாக, 100 ரூபாய் கட்டணம் என்றால், ரொக்கமாக செலுத்துபவர்களுக்கு அது ரூ.200 ஆகும். யு.பி.அய்.யில் செலுத்துபவர்களுக்கு ரூ.125-ஆக கட்டணம் இருக்கும்.
அடுத்த மாதம் முதல்…
இந்த புதிய கட்டண நடை முறை அடுத்த மாதம் (நவம்பர்) 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு லாபம் என்ற நிலை உருவாகி உள்ளது. அதிலும் ஆண்டு ‘பாஸ்’ வைத்திருந்தால் அதிக பணம் மிச்சமாகும். ஆனால் ரொக் கமாகவும், யுபிஅய் முறையிலும் செலுத்தினால் முறையே இருமடங்கு, கால்பங்கு கட்டணம் உண்டு என்பது குறித்து வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.