உலகம் போற்றும் முதலமைச்சரைக் கண்டு தாய்க்கழகம் பூரிக்கிறது!
‘தலைகுனிய விடமாட்டேன்’ என்ற முதலமைச்சருக்கு ஆயிரம் முத்தங்கள்!
2026 ஆம் ஆண்டிலும் நீங்கள் கோட்டைக்குள்ளே போகவேண்டும் –
அது உங்களுக்காக அல்ல – எங்களுக்காக அல்ல – மக்களுக்காக!
‘தலைகுனிய விடமாட்டேன்’ என்ற முதலமைச்சருக்கு ஆயிரம் முத்தங்கள்!
2026 ஆம் ஆண்டிலும் நீங்கள் கோட்டைக்குள்ளே போகவேண்டும் –
அது உங்களுக்காக அல்ல – எங்களுக்காக அல்ல – மக்களுக்காக!
சென்னை, அக்.5 உலகம் போற்றும் முதலமைச்சரைக் கண்டு தாய்க்கழகம் பூரிக்கிறது! ‘தலைகுனிய விடமாட்டேன்’ என்ற முதலமைச்சருக்கு ஆயிரம் முத்தங்கள்! 2026 ஆம் ஆண்டிலும் நீங்கள் கோட்டைக்குள்ளே போகவேண்டும் – அது உங்களுக்காக அல்ல – எங்களுக்காக அல்ல – மக்களுக்காக! ‘‘அதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி! இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி!’’ என்ற தலைப்புகளில் தமிழ்நாடு முழுவதும் ஆறு மாதங்களுக்குப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- உலகம் போற்றும் முதலமைச்சரைக் கண்டு தாய்க்கழகம் பூரிக்கிறது! ‘தலைகுனிய விடமாட்டேன்’ என்ற முதலமைச்சருக்கு ஆயிரம் முத்தங்கள்! 2026 ஆம் ஆண்டிலும் நீங்கள் கோட்டைக்குள்ளே போகவேண்டும் – அது உங்களுக்காக அல்ல – எங்களுக்காக அல்ல – மக்களுக்காக!
- அமைச்சர் தா.மோ.அன்பரசன்
- 102 வயது பொத்தனூர் க.சண்முகம் முதல் பிஞ்சுகள் வரை
- ஓய்வெடுக்க முடியமா?
- பதவிக்காக வந்த இயக்கம் அல்ல!
- ஆயிரம் முத்தங்கள்!
- வானத்தைப் பார்க்க வேண்டாம்;
- மானத்தைப் பாருங்கள்!
- எல்லாமே எங்கள் இடம்!
- கட்டுப்பாடு
- இறப்பைத் தவிர்க்க அறிவியல்
- உதவினால் வாழ்ந்து காட்டுவோம்!
- அரசு மரியாதை தந்த கலைஞர்
- கற்பாறை மீது கட்டப்பட்ட கருங்கோட்டை!
- உங்கள் வேலை “என்ட்ரி” எங்கள் வேலை “சென்ட்ரி”
- ஜப்பான், சிங்கப்பூர், லண்டனில் பெரியாரை முழங்கும் முதலமைச்சர்
- ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அல்ல; சமூகத்தைக் காக்கின்ற தேர்தல்!
- “மானம்“ -அறிவு – உரிமை ஆட்சி!
- ‘‘அதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி!
- இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி!’’
- உங்களைப் பாதுகாப்பதுதான் எங்களுடைய வேலை
- வெற்றிடம் அல்ல – கற்றிடம்!
- நூறாண்டு காலம் வாழ்க இந்த ஆட்சி
நேற்று (4.10.2025) செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
எத்தனையோ மாநாடுகள், சுயமரியாதை இயக்கம் தொடங்கும் முன்பும், பின்பும் திராவிட இயக்க வரலாற்றைப் படைத்த மாநாடுகள் என்ற மிகப்பெரிய ஒரு சரித்திரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு, இன்றைக்கும், நாளைக்கும் “உலகமே பெரியார் மயம் – பெரியார் உலக மயம்’’ என்று லண்டனுக்குச் சென்று, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து, பெரியார்தான் இனி உலகத்தை ஆளுவார் என்பதைக் காட்டிய எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு ‘திராவிட மாடலுடைய’ கதாநாயகர் – எவ்வளவு பேர், என்னதான் முயற்சி செய்தாலும், அவர்களால் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு முதலமைச்சர் வரலாற்றில் இருக்கிறார் என்றால், அவர் இதோ இங்கே சிங்கம் போல் வீற்றிருக்கின்ற எங்கள் முதலமைச்சர்!
எங்கள் முதலமைச்சர் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை; உலகம் சொல்கிறது பாராட்டுகிறது, பயன் பெற்றவர்கள் சொல்கிறார்கள். உங்கள் திட்டத்தைக் கனடா பின்பற்றுகிறது. உங்கள் திட்டத்தை இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்று சொல்கின்றபோது, எங்களுக்கு ஏற்படுகின்ற பெருமிதத்திற்கு எல்லை இல்லை. தாய்க்கழகம் பூரிக்கிறது. தாய்க்கழகம் சொல்ல வார்த்தைகளைத் தேடுகிறது.
இது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு மட்டுமல்ல நண்பர்களே!
இங்கே வெள்ளம்போல் திரண்டிருக்கின்றீர்கள். காலையில் நான் உரையாற்றும்போது சொன்னேன்.
‘‘வானத்தைப் பார்க்காதீர்கள்; தமிழர்களுடைய மானத்தைப் பாருங்கள்’’ என்று!
இன்றைக்கு வானமும் வழிவிட்டு இருக்கிறது; தமிழர்களுடைய மானமும் அறுதியிடக்கூடிய அளவிற்கு, உங்களுடைய ஆட்சி, நம்முடைய ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற, எங்கள் அன்பழைப்பை ஏற்று, உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒப்பற்ற முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் அவர்களே,
அதுபோல, இந்த நிகழ்ச்சியில் சிறப்பாகக் கலந்துகொண்டு வாழ்த்துகின்ற நம்முடைய கொள்கைக் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய தி.மு.க. பொருளாளர் மானமிகு அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு எம்.பி., அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., அவர்களே,
என்றைக்கும் எங்களுக்குத் தோன்றாத் துணையாக, அவர்களுக்கு வேல் இருக்கிறது என்றால், எங்களுக்கு வேலு இருக்கிறார் என்று சொல்லக் கூடிய அளவிற்குப் பெருமிதத்திற்குரிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களே,
அமைச்சர் தா.மோ.அன்பரசன்
ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், சுயமரியாதை இயக்கத்தின் 80 ஆம் ஆண்டு விழாவை – இதே செங்கல்பட்டில், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நடத்தி னோம்.
செங்கல்பட்டு மாநாடு 1929 ஆம் ஆண்டு நடந்தபோது, கலைஞர் அவர்கள் 5 வயதுக் குழந்தை. எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலம்.
ஆனால், அதே கலைஞர், பிறகு வந்து, திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி, களத்தில் நின்று, திராவிட இயக்கத்தினுடைய, சுயமரியாதை இயக்கத்தினுடைய தீர்மானத்தை, மகளிருக்கெல்லாம் சொத்துரிமை என்ற தீர்மானத்தை, மகளிருக்கெல்லாம் சம உரிமை என்ற தீர்மானத்தை வடித்துக் காட்டிய பெருமையை திராவிட இயக்க வரலாற்றில் உருவாக்கிய, முதலமைச்சரான கலைஞர் அவர்கள், செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80 ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போதும் நம்முடைய அருமை அமைச்சர் சகோதரர் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்கள், அன்றைக்கு நடத்தினார். அன்றைக்கும் அமைச்சர் அவர். அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு எங்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர்.
இன்றைக்கும் நம்முடைய தா.மோ அன்பரசன் அவர்கள் அமைச்சர்.
இதுதான் வரலாறு. ‘‘வேரைத் தேடிப் போய் பிடுங்கப் போகிறோம், பிடுங்கப் போகிறோம்’’ என்று சொல்கிறார்களே, உங்களால் வேரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது.
அதுபோலவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற அமைப்புச் செயலாளர் – அவருடைய பேச்சு என்றாலே, எல்லோரும் கலங்குவார்கள் – அப்படிப்பட்ட சட்ட நிபுணர் வழக்குரைஞர் ஆர்.எஸ். பாரதி அவர்களே,
அதுபோலவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித்தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
இந்த மாநாட்டினுடைய வெற்றிக்காக அருந்துணையாக இருக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அருமைச் சகோதரர் கருணாநிதி அவர்களே, எஸ்.ஆர்.ராஜா அவர்களே, அன்புத் தோழர் வரலட்சுமி மதுசூதனன் அவர்களே, எப்போதும் சுறுசுறுப்போடு இருக்கக்கூடிய எங்கள் காஞ்சி தந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களே,
ஒப்பற்ற உழைப்பைத் தங்களுக்குத் தந்து உற்சாகப்படுத்து கின்ற நகர மன்றத் தலைவர் ஜெ.சண்முகம் அவர்களே,
வெள்ளம்போல் திரண்டிருக்கின்ற அத்துணைக் கட்சி நண்பர்களே!
102 வயது பொத்தனூர் க.சண்முகம் முதல் பிஞ்சுகள் வரை
102 வயதாக இருக்கக்கூடியவர், காலையில் இருந்து மாலை வரையில் அமர்ந்திருக்கின்றார் எங்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஒப்பற்ற தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களே,
அவருடைய மாணவப் பருவத்திலிருந்து ஒரே கொடி, ஒரே கொள்கை, ஒரே தலைவர். இன்றைக்கும் அவர்தான் எங்களுக்கு வழிகாட்டுகிறார்.
இப்படி வயது இடைவெளியில்லாமல் திரண்டிருக்கின்ற மகாக்கூட்டம். உங்களை யெல்லாம் பார்க்கின்றபோது எனக்குப் பூரிப்பாக இருக்கிறது.
ஓய்வெடுக்க முடியமா?
இரண்டு மாதங்களுக்கு முன்பு எனக்கு ஓர் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அச் சிகிச்சையிலிருந்து இன்னமும் நான் முழுமையாக வெளியே வந்துவிடவில்லை.
மருத்துவர் சொன்னார், ‘‘கொஞ்சம் ஓய்வெடுங்கள்’’ என்று! அதேபோல, மருத்துவர்களுக்கெல்லாம் பெரிய மருத்துவராக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்னைப் பார்த்து ‘‘ஓய்வெடுங்கள், ஓய்வெடுங்கள்’’ என்று சொன்னார்.
அவர் ஓய்வெடுப்பதில்லை. நாங்கள் ஏன் ஓய்வெடுக்கவேண்டும்?
நீங்கள் எதற்காக உழைக்கிறீர்களோ, அதற்காக உங்களைப் பலப்படுத்த நாங்கள் உழைக்கவேண்டாமா?
உங்களை ஏதோ சாதாரணமாக சிலர் நினைக்கிறார்கள். நீங்கள் ஒரு மின்சாரம். மின்மினிப் பூச்சிகளால் உங்களை ஒருபோதும் அசைக்க முடியாது. அதைத்தான் இதுபோன்ற தொடர் கூட்டங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
மின்மினிப் பூச்சிகளை நம்பிக் கொண்டு, சில பேர் வடக்கே இருந்து வந்தவர்கள், “இந்த சந்தர்ப்பமாவது கிடைக்காதா”, என்று “இங்கே ஆழம் பார்க்கலாம்” என்று நினைக்கிறார்கள். நீங்கள் ஆழம் பார்க்கலாம் என்று நினைத்தால், உங்கள் தத்துவத்தை பெரியார் மண் மூடிவிடும்.
அப்படிப்பட்ட ஓர் அருமையான சுயமரியாதை இயக்கத்தை நாம் பெற்றெடுத்திருக்கின்றோம்.
நெஞ்சம் பூரிக்கிறது – ‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்!’’
பதவிக்காக வந்த
இயக்கம் அல்ல!
இயக்கம் அல்ல!
பேசவேண்டிய அவசியமில்லை. அவற்றைக் காட்சிப்படுத்தி இருக்கின்றோம். இங்கே அமைக்கப்பட்டு இருக்கின்ற கண்காட்சிகளைப் பாருங்கள். சுயமரியாதைச் சுடரொளிகளின் பணிகளைப் பாருங்கள்.
இந்த இயக்கம் வெறும் பதவிக்காக வந்த இயக்கமா?
இந்த இயக்கம் பதவிக்காக அல்ல மக்களே – ஒடுக்கப்பட்ட மக்களுடைய உதவிக்காக, உயிருக்காக, உரிமைக்காக வந்த இயக்கம். அன்றும் – இன்றும் – என்றும் இந்த இயக்கம் நிலைக்கும்!
இம்மாநாட்டில் பங்கேற்குமாறு முதலமைச்சர் அவர்களிடம் தேதி வாங்கிவிட்டோம். ஆனால், எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறவிருக்கிறதே, என்னாகுமோ? என்று ஒரு கவலை இருந்தது.
ஆனால், எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை; அவர் இருக்கிறார்; இதோ மக்கள் இருக்கிறீர்கள்; இயக்கம் இருக்கிறது, கொள்கை இருக்கிறது.
இந்த மருந்தைவிட, எங்களைக் காப்பாற்ற வேறு எந்த மருந்து மிக முக்கியமானது?
ஆயிரம் முத்தங்கள்!
கொள்கை! அந்தக் கொள்கையை விட்டுவிட்டு நான் தலைகுனிய மாட்டேன் என்று சொன்னார் அல்லவா!
தலைநிமிர்ந்து இருக்கவேண்டும் என்று சொன்னார் அல்லவா – இப்படி ஒரு முதலமைச்சர், தமிழ்நாட்டின் வரலாற்றில், திராவிட இயக்க வரலாற்றில், சவால்களைச் சந்திக்கக்கூடிய ஒரு முதலமைச்சராக, எங்கள் முதலமைச்சர் இருக்கிறாரே – உங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்! ஆயிரம் முத்தங்கள்! ஆயிரம் முத்தங்கள்!
‘‘பெரியார் உலகம் மயம்’’ – உலக மயம் என்பதற்காகத்தான் ‘‘பெரியார் உலகம்’’ நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சித்தரிக்கப்படுகிறது.
நிச்சயமாக, “எங்களால் முடியுமா?” என்று நாங்கள் நினைக்கவில்லை. உங்களால் முடியும்; மக்களால் முடியும்.
ஆகவேதான், உங்களுடைய துணை இருக்கிறது; உங்கள் வழிகாட்டல் இருக்கிறது; உங்களுடைய தோன்றாத் துணை இருக்கிறது.
வானத்தைப் பார்க்க வேண்டாம்;
மானத்தைப் பாருங்கள்!
எதையும் சாதித்துக் காட்டுவோம். நேற்று மாலையில்கூட, அமைச்சர் அவர்கள் உள்பட எல்லாருடனும் பேசிக் கொண்டிருக்கின்ற போது, வானத்தைப் பார்த்தோம்; நான் இன்றைக்குக் காலையில் சொன்னபடி, ‘‘வானத்தைப் பார்க்கவேண்டாம்; தமிழ் மக்கள் மானத்தைப் பார்க்கிறோம் – அதைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்காக, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டினை நடத்துகிறோம்’’ – அதேநேரத்தில், தமிழ் மண்ணில் அண்மையில் ஊடுருவி இருக்கின்ற ஈனத்தையும் பார்க்கின்றோம்; அதை ஒருபுறத்தில் ஒதுக்கித் தள்ளுவோம்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், முதலமைச்சர் அவர்களுடைய உரையைக் கேட்க நீங்களெல்லாம் எப்படி ஆவலோடு இருக்கிறீர்களோ, அதுபோலத்தான் நானும் ஆவலோடு இருக்கின்றேன்.
நெஞ்சம் நிறைந்திருக்கின்றது. இது பேசவேண்டிய தருணமல்ல; அவரைக் காக்கவேண்டிய தருணம்.
அவரை உற்சாகப்படுத்தவேண்டிய தருணம். அவர் தனி ஒரு நபர் அல்ல என்று காட்டவேண்டிய தருணம்.
எல்லாமே எங்கள் இடம்!
‘‘கருப்புச் சட்டைக்காரர், காவலுக்குக் கெட்டிக்காரர்’’ – இதைத்தவிர எங்களுக்கு வேலையில்லை.
இந்தக் கூட்டணியில், மற்றவர்களுக்கு எத்தனை இடம்? என்று கேட்பார்கள். ஆனால், எங்களுக்கு எத்தனை இடம்?
எல்லாமே எங்கள் இடம். எல்லாமே உங்கள் இடம்.
எனவேதான், எத்தனை இடம் என்பது முக்கியமல்ல; எத்தனைச் சாதனைகள் செய்து நெஞ்சை உயர்த்தியிருக்கிறீர்கள் – இதுதான் தோழர்களே பெருமை – அதைத்தான் நாம் நினைக்கவேண்டும்.
எவ்வளவு கட்டுப்பாடான ஒரு தலைமை. இது இன்றைக்கு நேற்றா?
கட்டுப்பாடு
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அண்ணா சொன்ன மூன்று வார்த்தைகளில், அண்ணா மறைந்த நிலையில், தந்தை பெரியார் நெஞ்சமெல்லாம் பதறி உருகுகிறார். என்னுடைய வீட்டில் தங்கியிருக்கிறார் பெரியார். இரவு 2 மணிக்கு என்னிடம், ‘‘எழுதவேண்டும், தாள் கொண்டுவா!’’ என்றார்.
அண்ணாவிற்கு வீர வணக்கம் செலுத்தி எழுதுகிறார். அதற்கு ஒரு தலைப்புக் கொடுத்தார். யாரும் எதிர்பார்க்காத தலைப்பு ‘‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!’’ என்பதுதான் அத் தலைப்பு.
அதற்கு என்ன அர்த்தம்?
அண்ணா என்ற உருவம் மறைந்திருக்கலாமே தவிர, அண்ணா என்ற தத்துவம், திராவிடம் ஒருபோதும் மறையாது, குறையாது – நெஞ்சம் நிறையும் என்று சொன்னார்கள்.
அதற்கடுத்து, கலைஞருக்குக் கட்டளையிட்டார் தந்தை பெரியார். அந்தக் கட்டளையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சரனார் கலைஞர் அவர்கள்.
அண்ணா அவர்கள் மறைந்துவிட்டார். கலைஞர்தானே என்று சாதாரணமாக நினைத்தார்கள். ஆனால், கலைஞரோ, ‘‘அண்ணாவே பரவாயில்லை’’ என்று நினைக்க வைத்தார் நம்முடைய இன எதிரிகளை!
இறப்பைத் தவிர்க்க அறிவியல்
உதவினால் வாழ்ந்து காட்டுவோம்!
கலைஞரும் மறைகிறார்; இது இயற்கைதானே – இன்றைக்கு நாங்கள் இருப்போம்; நாளை இல்லாமல் இருக்கலாம். இதுவரையில் விஞ்ஞானம் வயதை நீட்டித்து சாதித்திருக்கிறது. ஒருவேளை இறப்பையும் தவிர்த்தால், வாழ்ந்து காட்டுவோம் – அதுதான் விஞ்ஞானம் – அது முப்பத்து முக்கோடி தேவர்களால் முடியாது – கின்னரர்கள், சிம்புருடர்களால் முடியாது – அறிவியல் மூலம்தான் முடியும். அது நடக்கட்டும்!
அது ஒரு பக்கத்தில் இருந்தாலும், ஒரே ஒரு செய்தி என்னவென்றால், யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த இயக்கத்தினுடைய பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் வந்தார்; கலைஞருடைய ஆட்சியை எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்று நினைத்தார்கள் தடுமாறி நின்றவர்கள்.
ஆனால் கலைஞர் அவர்கள், ‘‘பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம், ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!’’ என்று சொல்லி, இடித்துக் காட்டியவர்.
பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கிய அண்ணா;
அரசு மரியாதை தந்த கலைஞர்
அதன் காரணமாகத்தான் “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்.” அண்ணாவினுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொன்னார்கள். “ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை” என்று சொன்னார் அண்ணா அவர்கள்.
அறிவாசான் தலைவர் பெரியார் அவர்கள் மறைந்த போது, “என்னை ஆளாக்கிய தலைவருக்கு, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தலைவருக்கு, அரசு மரியாதை கொடுக்கவேண்டும்” என்று சொன்ன நேரத்தில், அரசு அதிகாரிகள் அச்சுறுத்தினார்கள் – அவர்களுடைய கடமையைச் செய்தார்கள்.
‘‘ஒருவேளை உங்களுடைய ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால் என்னாவது?’’ என்று கேட்டனர்.
உடனே கலைஞர் அவர்கள், ‘‘பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்ததால் என்னுடைய ஆட்சியை நான் இழந்தேன் என்றால், அதைவிட எனக்கு பேறு வேறு எதுவுமில்லை’’ என்றார்.
கற்பாறை மீது கட்டப்பட்ட கருங்கோட்டை!
எனவேதான், வடக்கே இருந்து வருகின்றவர்களுக்குச் சொல்கிறோம் – எங்களை, இந்தத் திராவிட இயக்கத்தவர்களை மிரட்டிப் பார்க்காதீர்கள்; அச்சுறுத்திப் பார்க்காதீர்கள். ஆட்களைப் பிடித்து, கூலிப்படைகளைக் கொண்டு வந்து இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம்; தோற்கடித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.
இது கற்பாறைமீது கட்டப்பட்ட கருங்கோட்டை – இதை அசைக்க முடியாது உங்களால்.
நீங்கள் வெறும் மணல்மேடுகள்; நீங்கள் சாதாரணமானவர்கள்!
முதலமைச்சர் அவர்களே, மாண்புமிகு செயல்திறன் உள்ள உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மானமிகு முதலமைச்சர் அவர்களே, பெரியார் பிறந்த நாளை, ‘‘சமூகநீதி நாள்’’ என்று அறிவித்து, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று உறுதிமொழி எடுக்கச் சொன்ன முதலமைச்சர் அவர்களே, காலங்காலமாக உங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றது தமிழினம்.
தமிழினம் அடிக்கடி நன்றியை மறந்து போகின்ற ஓர் இனம். அந்த இனத்திற்கு உங்களுடைய உழைப்பு, இன்றும் உழைப்பு, நாளையும், என்றைக்கும் இருக்கவேண்டும் என்பதற்குத்தான், இதோ நாங்கள் இருக்கிறோம்.
உங்கள் வேலை “என்ட்ரி”
எங்கள் வேலை “சென்ட்ரி”
எங்கள் வேலை “சென்ட்ரி”
எங்கள் வேலை, கோட்டைக்குள்ளே போவது அல்ல; எங்களுடைய வேலை, கோட்டைக்குள்ளே உங்களை மீண்டும் அனுப்புவது – கோட்டைக்குள்ளே நீங்கள்தான், 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகும் போகப் போகிறீர்கள்.
ஒரு நூறாண்டு, பல நூற்றாண்டுகளின் வரலாற்றை அடைக்கப் போகிறது.
ஆகவேதான், உங்கள் வேலை ‘என்ட்ரி’ (Entry)- எங்களுடைய வேலை ‘சென்ட்ரி’ (Sentry) அவ்வளவுதான்.
நாங்கள் வெளியே நிற்போம். எல்லையில் ராணுவ அதிகாரிகள், துப்பாக்கியை ஏந்திக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கு விழிகள் நன்றாகத் திறந்திருக்கும். எங்கே, யார் ஓட்டைப் போடுகிறார்கள்? எங்கே யார் வருகிறார்கள்? என்று கழுகுப் பார்வையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அந்தப் பார்வைதான், கருஞ்சட்டைக்காரனுடைய உயிர்க்கடமை!
அதைத்தான் தீர்மானமாக இன்றைக்கு வடித்திருக்கின்றோம்.
ஜப்பான், சிங்கப்பூர், லண்டனில் பெரியாரை முழங்கும் முதலமைச்சர்
பெரியாரை உலக மயமாக்கும் எங்களுடைய பணியை நம்முடைய பணியை இன்றைக்கு நீங்கள் முன்னெடுத்துச் செல்கிறீர்கள் – பெரியாரை உலகமயமாக்குவதற்கு நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு அச்சாரம்தான், ஜப்பானிலே முழங்கினீர்கள்; சிங்கப்பூரிலே முழங்கினீர்கள்; லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் முழங்கினீர்கள். சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்போது தந்தை பெரியார் சொன்னார், ‘‘இது ஒரு சிறிய எஞ்ஜின்; இது ஓர் ஊரோடு நிற்காது – உலகத்திற்கே வழிகாட்டும்’’ என்றார்.
பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், 2026 ஆம் ஆண்டிலும் நீங்கள் கோட்டைக்குள்ளே போகவேண்டும். அது உங்களுக்காக அல்ல – எங்களுக்காக அல்ல – மக்களுக்காக அல்ல.
ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அல்ல;
சமூகத்தைக் காக்கின்ற தேர்தல்!
சமூகத்தைக் காக்கின்ற தேர்தல்!
வருகின்ற தேர்தல் என்பது வெறும் ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அல்ல நண்பர்களே!
வெற்றி – தோல்வியைக் கணிக்கின்ற தேர்தல் அல்ல!
நம்முடைய தலைவர்கள் உழைத்து, திராவிட இயக்கம் பாடுபட்டுத் தந்ததே சமூகநீதி –
திராவிட இயக்கம் பாடுபட்டு, தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தந்தார்களே, அந்தச் சுயமரியாதை உணர்வு – அந்த சமூக வாய்ப்பு, பெண்களுக்குச் சம வாய்ப்பு, சம உரிமை, இவற்றையெல்லாம் காட்டுகின்ற தேர்தல்!
அம்பேத்கர் சொன்னார், சமத்துவம் என்று சொல்லும்போது, ஆங்கிலத்தில் ஈக்குவாலிட்டி என்று போட்டார்கள்.
ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுடைய திராவிட மாடல் ஆட்சியின் சாதனையின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா தோழர்களே, சமத்துவம்தான் முதல் கட்டம்.
இதுதான் திராவிட மாடல் ஆட்சியினுடைய தனித்தன்மை, தனிச்சிறப்பு!
அடுத்தகட்டம், சமத்துவத்தோடு அல்ல. பெண்களுக்கு அதிகாரமளித்து, அவர்களுக்கு 50 விழுக்காடு கொடுத்து, அவர்களை அமர வைக்கவேண்டிய இடத்தில், அமர வைக்கின்ற ஒரே ஆட்சி இந்தியாவிலேயே இந்த ஆட்சியைத் தவிர, வேறு எந்த ஆட்சி?
“மானம்“ -அறிவு – உரிமை ஆட்சி!
எனவேதான், மனுதர்மக்கார்கள், மனுவின் மைந்தர்கள், வருணாசிரமத்தின் வாரிசுகள் – இந்த ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
இந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று நாங்கள் ஏன் நினைக்கின்றோம்?
எங்களுக்கு மானத்தைத் தருகின்ற ஆட்சி!
எங்களுக்கு அறிவைத் தருகின்ற ஆட்சி!
எங்களுக்கு உரிமைகளைத் தருகின்ற ஆட்சி!
நான் தலைகுனிய விடமாட்டேன் என்று சொல்லி, சமரசம் செய்துகொள்ளாத ஒரு முதலமைச்சர் இருக்கின்றார் என்றால், இந்தியாவிலேயே திராவிட மாடல் முதலமைச்சர்தான் என்கின்ற பெருமையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
எனவே, உங்களுக்குத் துணையாக இருப்பதுதான் எங்கள் வேலை!
இனி, ஆறு மாதத்திற்கு எங்களுக்கு எந்த வேலையும் கிடையாது.
எனக்கு 93 வயது என்றெல்லாம் சொன்னார்கள். அது எனக்கு நினைவிற்கு வராது, வரவும்கூடாது.
என் நினைவிற்கு வரவேண்டியது கொள்கை எதிரிகள் – அவர்களுடைய குதர்க்கங்கள்; அவர்கள் உருவாக்கலாம் என்று நினைக்கின்ற குடி படை பட்டாளங்கள் என்ன செய்தாலும், இந்த ஆட்சியைக் காக்க புகழ் நாடாத, பதவி நாடாத, நன்றி பாராட்டாத இந்த இயக்கம் தன்னுடைய பணிகளைச் செய்யும்.
பெரியாரை உலகமயமாக்குகின்ற பணி எங்கள் பணி;
எங்கள் பணி பிரச்சாரம். எங்களுக்குத் தெரிந்தது இரண்டேதான்!
ஒன்று பிரச்சாரம், இன்னொன்று போராட்டம்!
‘‘அதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி!
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி!’’
வரலாற்றுப் பெருமைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக – இனி தாய்க்கழகத்திற்கு ஒரே ஒரு பணி (one agenta) ஆறு மாத்திற்கு எங்களுக்கு வேறு பணி இல்லை. அது என்ன பணி தெரியுமா?
எங்களுடைய தலைமையில், அத்துணைக் கருஞ்சட்டை தோழர்களையும், அத்துணைத் தமிழ் உணர்வாளர்களையும், அத்துணைப் பகுத்தறிவாளர்களையும் ஒன்று திரட்டி, ஒரு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம்.
அது என்னவென்று சொன்னால், நவம்பர் மாதத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத் திட்டம் – இதுதான் எங்களுடைய அடுத்த வேலைத் திட்டம் – இதுதான் எங்களுடைய சென்டரி டூயூட்டி – இதுதான் எங்களுடைய பாதுகாப்பு வேலை.
என்ன தெரியுமா?
நாடெங்கும் பிரச்சாரம்!
இதனுடன் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி! இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி!
பல இடங்களில் பதில் சொல்வோம். எதிர்ப்புகளைச் சந்திப்போம். அதுதான் இந்த இயக்கத்திற்கு உரமாகும். அதில் ஒரு தலைப்பு என்ன தெரியுமா?
நம்முடைய மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. எத்தனை நன்மைகளைப் பெற்றாலும், நம்முடைய மக்கள் ஏமாந்துவிடுவார்கள் சில நேரங்களில்.
அப்படி அவர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பா.ஜ.க. ஆட்சி’’ என்று ஒரு தலைப்பு.
‘‘இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல்’’ என்பது இன்னொரு தலைப்பு.
இந்தத் தலைப்புகளில் பிரச்சாரக் கூட்டங்கள் ஆறு மாதப் பயணம். 72 திராவிட முன்னேற்றக் கழக மாவட்டங்கள். அதுபோலவே, 69 திராவிடர் கழக மாவட்டங்கள், 234 தொகுதிகள்.
முதல் கட்டம் 90 நாள்கள் பிரச்சாரம்!
முதல் கட்டமாக 90 நாள்கள் பிரச்சாரம் என்னுடைய தலைமையில் தொடர்ந்து நடைபெறும்.
– மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
உங்களைப் பாதுகாப்பதுதான்
எங்களுடைய வேலை
எங்களுடைய வேலை
போராட்டமும், பிரச்சாரமும் கடிகாரத்தில் உள்ள பெண்டுலங்களைப் போல ஓடிக் கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்களைப் பாதுகாப்பதுதான் எங்களுடைய வேலை.
உங்களுக்கென்றால், தனிப்பட்ட ஒரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பவரையல்ல. ‘திராவிட மாடல்’ என்ற காலங்காலமாக, பல்லாயிரக்கணக்கான, ஆயிரங்காலத்துப் பயிராகப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய ஓர் அற்புதமான முதலமைச்சரைத்தான்.
அவருடைய ஆட்சி மீண்டும் வந்தது என்று சரித்திரத்தினுடைய பொன்னேடுகளில் மீண்டும் இணைக்கப்படவேண்டும்.
அதற்காக ஒன்றைச் சொல்லி, என்னுரையை முடிக்கின்றேன்.
இங்கே பல தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றோம். அதில் கடைசித் தீர்மானமானத்தின் ஒரு பகுதியை மட்டும் படிக்கின்றேன்.
“திராவிட இயக்கக் கொள்கையில், சிறிதும் சமரசம் செய்துகொள்ளாமல், ஒன்றிய பா.ஜ.க. அரசோடு கொள்கைப் போராட்டத்தை நடத்தி, பொருளாதார இடர்ப்பாடுகளுக்கும் ஈடுகொடுத்து, எல்லாத் துறைகளிலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை நிர்மாணித்து, உலகத்தாரின் பாராட்டைப் பெற்று, நிகரில்லா ஆட்சியை நடத்தி, சாதனைக்கு ஓர் சரித்திரப் புகழ் ஆட்சி புரியும் – திராவிட மாடல் அரசின் சாதனைகளை இந்தியாவும் கடந்து, உலக நாடுகள் வியந்து, போற்றி, பாராட்டிக் கொண்டிருக்கின்றன.
இதைக் கண்டு அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த வெற்றிகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆரியம் நினைத்தது – கலைஞர் மறைந்துவிட்டார், அந்த இடத்தில் வெற்றிடம் என்று.”
வெற்றிடம் அல்ல – கற்றிடம்!
வெற்றிடம் என்று, இவர் வருவதற்கு முன்னர் சொன்னார்கள்.நாங்கள்தான் சொன்னோம், தாய்க்கழகம்தான் பிரகடனப்படுத்தியது – ‘‘அடப் பேதைகளே, வெற்றிடம் அல்ல; இதுதான் இனிமேல் கற்றிடம், கற்றிடம், கற்றிடம்’’ என்று சொன்னோம்.
அந்தக் கற்றிடத்தை, நீங்கள் இன்றைக்குப் பெரும் கட்டடமாக எழுப்பியிருக்கிறீர்கள். பள்ளியாக இருந்தது; கல்லூரியாயிற்று. கல்லூரியாக இருந்தது; பல்கலைக் கழகமாயிற்று.
இந்த ஆட்சியை அசைத்துவிடலாம், விஷமப் பிரச்சாரங்களை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு, எங்கெங்கோ இருக்கின்றவர்களை அழைத்து நீங்கள் வேவு பார்க்காதீர்கள். அது நடக்காது; நடக்கவும் விடமாட்டோம்.
இது பெரியார் மண்!
தமிழ் மண்!
மானத்தைச் சொல்லிக் கொடுக்கின்ற மறவர் மண்!
உரிமைக்காகப் போரிடுகின்ற மண்!
தலைகுனிய விடமாட்டோம் என்று சொல்லி, ஆயிரம் போர்களை வென்றெடுக்கக் கூடிய ஓர் அற்புதமான வீர காவியம் படைக்கக்கூடிய, ஒரு தளபதியாக நின்று ஆட்சி நடத்தக்கூடிய மண்!
எனவே, உங்களுக்காகப் பணி செய்கிறோம் என்பதல்ல; இந்த இனம் காப்பாற்றப்படவேண்டும்.
அது வெறும் தேர்தலுக்காக அல்ல நண்பர்களே! தலைமுறை தலைமுறையாக, நம்முடைய தலைவர்கள் பெற்றுத் தந்ததை, தலைவர்கள் கற்றுத்தந்ததை நாம் பாதுகாப்பது மட்டுமல்ல, அதனை வளர்க்கவேண்டும்.
உங்களுக்கு என்றைக்கும் துணையாக இருப்போம்!
மீண்டும் திராவிட மாடல்!
நூறாண்டு காலம் வாழ்க இந்த ஆட்சி
இதைத்தவிர, வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தல் முடிந்து, நூறாண்டு காலம் வாழ்க இந்த ஆட்சி என்று, இதே மண்ணில் வெற்றி விழாவை நடத்துவோம்!
இன்றைக்கு எப்படி சுயமரியாதை இயக்கத்திற்கு வெற்றி விழாவோ – அதுபோல, நீங்கள் பெறுகின்ற வெற்றியை, விழாவாக இந்த மண்ணில் அனைவரும் கொண்டாடுவோம்!
அதற்கு ஆயத்தமாவோம்! ஆயத்தமாவோம்!!
எதிரிகள் உதிரிகள்!
எதிரிகள், உதிரிகளாக வேண்டும். நம்முடைய உணர்வுகள் ஒப்பற்ற முறையில் இருக்கவேண்டும்.
முடியுமா? என்று நினைக்காதீர்கள். முடிந்தாகவேண்டும்.
முடிப்போம் என்று சொல்லி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை இயக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை உரையாற்றினார்.