புதுடில்லி அக்.4- தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), வரும் 2026ஆம் ஆண்டுக்குள் மொத்த ஊழியர்களில் 2 சதவீதம் பேரை, அதாவது சுமார் 12 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பணி நீக்கம் செய்யப்படுபவர் களுக்கான இழப்பீடு விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 6.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இழப்பீட்டு விவரங்கள்
பணி நீக்கம் செய்ய ப்படும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கை வழங்கப்படும். அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் (24 மாதங்கள்) வரையிலான ஊதியம் இழப்பீடாக வழங்கப் படும் எனத் தகவல்கள் தெரிவி க்கின்றன. 8 மாதங்களுக்கு மேல் பணி ஒதுக்கப்படாமல் இருக்கும் ஊழியர்கள் சிறிய அளவிலான இழப்பீடும் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய ஊழியர்கள் 18 மாதங்களுக்கான ஊதியமும் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்கள் 24 மாதங்களுக்கான ஊதியமும் பெறுவார்கள்.
கூடுதல் உதவிகள்
பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்குத் தேவையான உதவிகளை டிசிஎஸ் வழங்கும் என்று தெரிகிறது.
மேலும், ஓய்வு பெறும் வயதில் இருப்பவர்கள், விருப்ப ஓய்வுத் திட்டத்தில் (Voluntary Retirement Scheme VRS) நிறுவனத்தில் இருந்து வெளியேற ஏற்பாடு செய்யப்படும் என்றும் டிசிஎஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.