சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதேயாகும். என்னவென்றால், காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும் காரணகாரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது. இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய்விட்டது. விபரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான். எந்தகாரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்தக் காரண காரிய அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விட்டு விடு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கின்றது. அதுதான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக
தூரமில்லை. இன்றைய “சுதந்திரவாதிகள்” சுதந்திரத்திற்காக சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். அதாவது அடிமை தேசத்தில் சுயமரியாதைக்கு இடம் ஏது என்கிறார்கள். இது உண்மையிலே
மூடவாதம் என்று சொல்லுவோம். சுயமரியாதை அற்றவர்களுக்கு – சுயமரியாதை இல்லாதவர்களுக்கு சுதந்திரமேது என்பதுதான் சரியான வார்த்தை
யாகும். சுயமரியாதை இயக்கத்துக்குதான் சுதந்திர உணர்ச்சி தோன்றும் – சுதந்திரம் தேவைப்படும்; சுதந்திரத்திற்கு சுயமரியாதை தேவைப்படாது.
சுயமரியாதைக்காரர்களின் சுதந்திரம் எல்லாவற்றிலும் சுதந்திரம் இருக்கத்தக்கதாய் இருக்குமென்றும், சுதந்திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்ததாக மாத்திரம் இருக்கும்.
– தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 18.07.1937