புதுடெல்லி, அக்.3- டில்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் சிறீசாரதா இந்திய மேலாண் மையம் செயல்பட்டு வருகிறது. இதில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகளும் கல்வி உதவித்தொகை பெற்று படித்து வருகின்றனர். இந்நிலையில், இதன் இயக்குநரான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (வயது 62) என்ற பார்த்தசாரதி, மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் துன்புறுத்தல்
சாமியார் பார்த்தசாரதிக்கு எதிராக ஆபாச பேச்சுகள், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல் மற்றும் உடல்ரீதியாக கட்டாயப்படுத்தி தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டார் என 17 மாணவிகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.
ஆசிரம வார்டன்கள் சிலர், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்ததுடன், அந்த சாமியாரின் வற்புறுத்தலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படி பெண் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் கூட மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், சாமியாருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்பட பிற வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்தனர். இதனை டில்லி தென்மேற்கு மாவட்ட காவல் துணை ஆணை யாளர் அமித் கோயல் கூறினார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உள்ள ஓட்டலில் பதுங்கியிருந்த சாமியாரை கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணையில், அவரை 5 நாட்கள் காவல்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ரவி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இந்நிலையில், டில்லி காவல்துறையினர் அவருடைய வீட்டில் நேற்று புதிதாக சோதனையில் ஈடுபட்டனர். இதுபற்றி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த சோதனையில் பாலியல் பொம்மை ஒன்று கைப்பற்றப்பட்டது. ஆபாசப் படங்கள், காட்சிப் பதிவுகள் அடங்கிய 5 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 போலியாக உருவாக்கப்பட்ட ஒளிப்படங்களும் கைப்பற்றப்பட்டன. அதில், பிரதமர் மோடி, மேனாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இங்கிலாந்து தலைவர் ஒருவர் ஆகிய 3 பேருடன் ஒன்றாக இருப்பது போன்று ஒளிப்படங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன.
இதேபோன்று உத்தரகாண்டின் பாகேஷ்வர் மற்றும் அல்மோரா நகரங்களிலும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சாமியாருடன் அவருடைய பெண் சீடர்களும் இருந்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.