திருநெல்வேலி, அக். 3- திருவெல்வேலி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுளளன.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, இத்தகைய சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
சமீப காலங்களில், சமூக ஊடகங்கள் வாயிலாக சில இளைஞர்கள் தங்களது சமுதாயத்தை உயர்த்தும் விதமாகவும், பிற சமுதாயங்களை தரம் தாழ்த்தும் விதமாகவும் உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். இது சமூகத்தில் ஜாதிய உணர்வுகளை தூண்டும் அபாயத்தை உருவாக்கி, பொதுமக்களிடையே தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
தீவிர கண்காணிப்பு:
சமூக அமைதிக்கு இடை யூறாக அமையக்கூடிய பதிவுகளை உருவாக்கும் மற்றும் பகிரும் நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங் களை காட்சிப் படுத்தும் ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப்பதிவுகள் உள்ளிட்ட பதிவுகள் தொடர்பாக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிடும் நபர்களை அடையாளம் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், மேற்படி நபர்களின் சமூக வலைதளக் கணக்குகளில் பின் தொடர் பவர்கள், பதிவுகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இதில் சட்ட முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவரும் பட்சத்தில், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது.
கைது செய்யப்படும் நபர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள், வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளிட்டவை முழுமை யாக கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன. இதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப் பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விழிப்புணர்வு:
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம் பரசன் அறிவுறுத்தலின் பேரில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சிகள் மூலம், ஜாதி சார்ந்த பிரச்சினைகளின் தீவிரம் மற்றும் அதன் சமூகப் பின்விளைவுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்தப் படுகிறது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சட்ட ஒழுங்கை பாதிக்கக்கூடிய பதிவுகள் மீது காவல் துறையின் சமூக ஊடக பிரிவு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.
வழக்குப்பதிவு
மற்றும் கைது:
சமூக வலைதளங்களில் பதிவிடப்படும், பிரச்சினைக்குரிய பதிவுகள், ஜாதிய ரீதியிலான பிரச்சினைக்கு முக்கிய காரணியாக இருந்து வருவதால், இது போன்ற பதிவுகள் செய்பவர்கள் மீது பாரபட்சமில்லாத தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், நடப்பாண்டில் இதுவரை 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை உருவாக்கும் மற்றும் பரப்பும் நபர்கள்மீது நடவடிக்கைகள் மிகக் கடுமையாக, எந்தவித சமரசமும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் என்பதை காவல்துறை வலியுறுத்துகிறது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, சமூக ஒற்றுமை மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தும் நோக்குடன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.