நூற்றாண்டைக் கடந்த
ஒரு மாநாடு!
நூலோர்தம் ஆதிக்கக்
காலடியில் கிடந்த
ஓர் இனத்தின்
குருதி ஓட்டத்தில்
தன்மான மின்சாரம்
பாய்ச்சிய மாநாடு!
ஆம், அதன் பெயர்தான்
சுயமரியாதை இயக்க
மாநாடு!
எங்கே, எங்கே?
மறைமலைநகரில்
எப்போது?
அக்டோபர் நான்கில்!
“பிறப்பினில் பேதமா?
பிர்மா என்ற
கடவுள் படைத்தானா?
கடுகளவு புத்தி கொண்டோர்
கூட இதை ஏற்பானா?
கொண்டு வா பார்க்கலாம்
குறுக்குக் கேள்வி
கேட்போம்!
நீ ஆணா பெண்ணா
அல்லது வேறா?
என்று கேட்போம்!”
உரக்கக் குரல் கொடுத்தார்
ஒரு தலைவர்!
மரக் கட்டைகளாய்க்
கிடந்த மக்கள்
தலைநிமிர்ந்து பார்த்தனர்
பொறி தட்டியது
நெற்றியின் உதடுகள்
மேலும் கீழும் அசைந்தன
சிந்திக்க ஆரம்பித்துவிட்டான்
ஆம்! சிந்திக்க ஆரம்பித்து விட்டான்
இது போதும்
இதுதானே அவர்
எதிர்பார்த்தது!
‘சூத்திரன் என்றால்
ஆத்திரம் கொள்!‘
என்ற முழக்கம்
அடிவயிற்றின் அறையிலிருந்து
வெடித்துக் கிளம்பியது.
பூணூல்கள் மிரண்டன.
‘புதுசா இருக்கே இந்தக்குரல்’ என்று
புரண்டு புரண்டு படுத்தனர்!
அடுத்தடுத்து வேட்டுச் சத்தம்!
அரிமா குரல்
எங்கும் எங்கும்!!
‘குடிஅரசு’ என்ற ஓர்
இதழாம்
குடி கெடுப்பாரின்
முடியைப் பிடித்தது!
கேள்விக் கணைகளை
கேட்க ஆரம்பித்தது
சுவர் எல்லாம் எழுத்துகள்
சூட்டுக் கோலாயின!
விடிந்தது இருள் –
வெளிச்சம் கிடைத்து விட்டது
ஆங்காங்கே கூட்டங்கள்
அனல் பறக்கும்
பேச்சுகள்!
வாலிபப் பட்டாளத்தின்
தோள்கள்
மதக்கட்டளைகளின்
வேலிகளைத் தாண்டின!
கேள்விகள் மாறி
கேலிப் பேசும் நிலை!
அடுத்த கட்டம்!
‘ஆகா போச்சுப் போச்சு!’
அலறியது ஆரியம்!
புதுக் கணக்குத் தொடங்கி
நூறு ஆண்டுகள்!
‘என்ன மாயம்’ செய்தான் – இந்த
ஈரோட்டுக் கிழவன்?’
திகைத்தனர் – சபித்தனர் –
திடுக்கிட்டனர்
திண்ணைத் தூங்கிகள்!
‘என்ன அய்யர்வாள்
சவுக்கியமா?’ என்று
கேட்கும் அளவுக்கு
கிடு கிடு மாற்றம்!
ஆயிரம் ஆயிரம் ஆண்டு
ஆதிக்க இருளை
ஒரு நூற்றாண்டு இயக்கம்
விரட்டியது
ஓட ஓட விரட்டியது!
திராவிடம் என்ற சொல்
தெரு முழக்கம் ஆனது!
ஆரிய ஆதிக்கத்தின்
கோட்டையை
நொறுக்கும் பீரங்கி
திராவிடம் என்பது
புரிந்தது!
திருப்பிப் போட்டது
சரித்திரத்தை!
கல்விக் கண்ணையா
குத்தினாய்?
கிளர்ந்ததுகாண்
சிங்கக் கூட்டம்!
ஆம் எங்கள் பிள்ளைகளும்
படிக்கத் தொடங்கினர்.
தடைக் கதவுகள்
உடைக்கப்பட்டன
உள்ளத்திலோ சீற்றம்
உடைகளும் மாறின.
நடைகளும் மாறின
நடந்தது ஒரு புரட்சி!
ஊருக்கு வெளியே
ஊத்தைச் சேற்று
நாற்றத்திலே கிடந்தவர்கள்
நகருக்குள் நகர்ந்தனர்
நாலாப் பக்கமும்
திரும்பிப் பார்த்தனர்
காலிலே செருப்பு வந்தது
கைவீசி நடக்க முடிந்தது
அக்கிரகார வீதியிலும் –
கோயிலுக்குள்ளும்
செல்ல முடிந்தது.
“என் மகன்
அமெரிக்காவில்
படிக்கிறான்!
என் மகள் இங்கிலாந்தில்!
என் பேரன்
இஞ்சினியர்”
என்று சொல்லும் போதே
எத்தனைக் கம்பீரம்!
மாற்றம் என்பதுதான்
மாறாதது எனினும்
தானாக மாறாது!
மாறாவிட்டால்
மாற்றச் செய்வோம் என்ற
மறத்தனத்தின்
மறு பெயர் தான்
சுயமரியாதை இயக்கமாம்
திராவிடப் பாசறை!
அதன் நூற்றாண்டு
நிறைவு விழா!
வீட்டில் முடங்கிக்
கிடப் போமா?
புறப்படுக
மறைமலைநகர்
நோக்கி!
தனியாக அல்ல
வீட்டைப் பூட்டி
பேரப் பிள்ளைகளோடு!
தமிழர் தலைவர் வீரமணி
தலைமை தாங்குகிறார்
‘திராவிட மாடல்’ ஆட்சியின்
சிற்பியாம்
எங்கள் உதய சூரியனும்
ஒளி வீசப் போகிறது!
வாருங்கள் வாருங்கள்
தோழர்களே,
வாழ வைத்த
சுடரொளிகளுக்கு
வீரவணக்கம் செலுத்தி
அடுத்த கட்ட வளர்ச்சிக்கு
ஆயத்த மாவோம்!
வாழ்க பெரியார்!
வெல்க சுமரியாதை!