அயோத்தி, அக்.3 அயோத் தியின் பிரபல அனுமன்கிரி கோயில் பிரசாதத்தில் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது. உ.பி. உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அயோத்தி ராமன் கோயிலுக்கு அருகில் பழம்பெரும் அனுமன்கிரி கோயில் உள்ளது.
இங்கு அனுமனுக்கு பிரசாதமாக நெய்யில் செய்த கடலை மாவு லட்டு படைக்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறை துணை ஆணையர் மாணிக் சந்திர சிங் ஆய்வு செய்தார். இதில் பிரசாதத்தில் கலக்கப்படும் நெய் தூய்மையானதல்ல என்று தெரிய வந்தது.
இதற்காக, உணவுப் பாதுகாப்புத் துறையால் எடுக்கப்பட்ட மூன்று மாதிரிகளில் இரண்டு அதன் தரத்தில் இல்லை எனத் தெரியவந்துள்ளது. அயோத்தியில் பிரசாதங்கள் விற்கும் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல கடைகளில் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. இக் கடைகளில் விற்கப்படும் ஒரு கிலோ லட்டுகளின் விலை ரூ.450 முதல் ரூ.500 வரை நிர்ணயிக்கப்பட்டது.
இது அதிக விலையாக இருந்தபோதிலும் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அயோத்தியின் பிரபல தனியார் கடை ஒன்றில் பன்னீர் மற்றும் சீஸ் மாதிரியும் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதிலும் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அயோத்திக்கு வருகை தரும் பக்தர்களில் சுமார் 99 சதவீதம் பேர் அனுமன்கிரி கோயிலுக்கு செல்வது வழக்கம். ராமனை தரிசிப்பதற்கு அனுமனிடம் அனுமதி பெற வேண்டும் என்பது அய்தீகமாக உள்ளதாம்.
இச்சூழலில் அயோத்தியின் பல இடங்களில் வெளியான கலப்படம் புகார், ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந் நிலையில் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படப் புகார் எழுந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.